May 20, 2013

நேரம் - NERAM - வீணாகாது ...




ஸ்மார்டான  பிஸ்தா பாடல் மூலம் படத்திற்கு வரவைத்தவர்கள் அதையும் தாண்டி நிறைய விஷயத்திற்கு நேரம் செலவழித்திருப்பது நன்றாகவே தெரிகிறது . பீட்சா  , சூது கவ்வும் அளவிற்கு படம் இல்லையென்றாலும் கார்த்திக் சுப்பராஜ் , நலன் குமரசாமி போன்ற குறும்பட இயக்குனர்கள் வரிசையில் தமிழுக்கு நல்ல புது வரவு அல்போன்ஸ் புத்திரன...

வேலையிலாத ஹீரோ வெற்றிக்கு ( நவின் )  ஒரே நேரத்தில் மூன்று பிரச்சனை . தங்கையின் திருமணத்திற்காக வட்டி ராஜாவிடம் ( சிம்ஹா ) வாங்கிய கடனை கொடுக்க வேண்டும் .  பெண்ணை கடத்தி விட்டதாக காதலி வேணி ( நஸ்ரியா ) யின் அப்பா ( தம்பி ராமையா ) கொடுத்த புகாருக்கு போலீசிடம் பதில் சொல்ல வேண்டும் . மீதி டவுரி பணத்தை  மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் . இந்த மூன்றையும் சமாளித்தாரா என்பதே நேரம் . கதை என்கிற கடுகு சிறிசாக இருந்தாலும் சொன்ன விதத்தில் காரம் இருக்கிறது ...

நவீன் பக்கத்து வீட்டு பையன் போல பாந்தமாக இருக்கிறார் . ரொமான்ஸில் கொஞ்சம் வழுக்கினாலும் ஆக்சன் காட்சிகளில் அட போட வைக்கிறார் . நயன்தாரா சாயலில்  இருந்தாலும் அவரை விட இளமையாக இருக்கிறார்  நஸ்ரியா . நயன்தாரா , அமலா பால் வரிசையில் தூக்கத்தை தொலைக்க வைக்கப் போகும் மற்றுமாறு மலையாள பெண்குட்டி . அம்மணிக்கு அபிநயங்கள் அருமையாக வருகிறது . நவீன் - நஸ்ரியா ஜோடிப் பொருத்தம் இயல்பாக பொருந்தியிருப்பதும் , அவர்கள் காதலை சொன்ன விதமும் அருமை ...


சூது கவ்வுமை தொடர்ந்து சிம்ஹாவிற்கு நல்ல வேடம் . வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருந்தாலும் இன்னும் மெனக்கட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது . தம்பி ராமையா தன் வழக்கமான பாணியில் சிரிக்க வைக்கிறார் . ஜான் விஜயுடன் இவர் சேரும் போது படம் நேரம் சூடு  பிடிக்கிறது . சிறிது நேரமே வந்தாலும்  நாசர் ஆசம் என்று சொல்லி அசத்துகிறார் . திருட்டு கும்பல் , ஹீரோவின் நண்பன் , நண்பனின் மேனேஜர் , ஹீரோவின் மாப்பிள்ளை , நாசரின் தம்பி இப்படி நிறையே பேர் படத்தில் வெகு இயல்பாக வந்து போவது சிறப்பு ... 

எல்லாம் என் நேரம் " , " அவனுக்கு நேரம் நல்லா வொர்க் அவுட் ஆவுது " இப்படி நேரத்தை வைத்து நிறைய புலம்பல்களை பார்த்திருப்போம் . இதை ஒன் லைனாக கொண்டு தத்துவார்த்த படமாக இல்லாமல் ஒருவன் வாழ்வில் ஒரு நாளில் நடக்கும் நல்ல , கெட்ட நேரங்களை சுவாரசியமாக சொல்லியதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள் ...

காதலியை பக்கத்தில் வைத்துக்கொண்டு வேறொரு பெண்ணை சைட்டடித்து மாட்டிக் கொள்ளும் ஹீரோ " மூஞ்சியா அது நல்லாவே இல்ல " என்று சமாளிக்க " நீ மூஞ்சியவா பாத்த " என்று காதலி பதிலடி கொடுப்பது , பெண்ணை கண்டுபிடிக்க சொல்லி பிரஷர் கொடுக்கும் தம்பி ராமையாவிடம்
" கமிசனர் ஆபீஸ்  போயி அப்ப்ளிகேசன் கொடுத்து என்ன விட பெரிய போஸ்டுக்கு வந்தப்பறம் ஆர்டர் போடுங்க கேக்குறேன் " என்று ஜான் விஜய் கலாய்ப்பது இப்படி படம் நெடுக நிறைய நல்ல நேரங்கள் நம்மை கட்டிப்போடுகின்றன . அதே நேரம் காமெடிகள் வெறும் வசன கோர்வைகளாக இல்லாமல் காட்சிகளுடன் இணைந்து ரசிக்க வைப்பது படத்தின் ப்ளஸ் ...


பாப்புலரான பிஸ்தா பாடல் மட்டுமல்லாமல் " காதல் " மெலடியிலும் , பின்னணி இசையிலும் பரவசப்படுத்துகிறார் ராஜேஷ் முருகேசன் . லோ பட்ஜெட் படம் என்றாலும் ஒளிப்பதிவு ஹை யாக இருக்கிறது . படம் ஆரம்பித்த சில நேரங்களில் பொறுமையாக செல்லும் படம் நம் நேரத்தை சோதிப்பது , கதை எங்கும் போகாமல் மந்தவெளியை மட்டும் சுற்றி  வந்து ஒருவித சலிப்பை தருவது , யதார்த்தமாக இருந்தாலும் ஹீரோவிற்கு ஏற்படும் பிரச்சனைகளில் பெரிய பரபரப்பு இல்லாதது போன்ற குறைகள் இருந்தாலும் எடுத்துக் கொண்ட கருவிற்காகவும் , அதை படமாக்கிய விதத்திற்காகவும் , பாத்திர தேர்விற்காகவும் படத்தை பார்க்கின்ற அனைவரின் நேரம் வீணாகாது ...

ஸ்கோர் கார்ட் : 42


May 13, 2013

மின்வெட்டு கவிதைகள் ...



மின்கட்டணம் உயர்ந்தும்
பணம் செலவாகவில்லை
மின்வெட்டுக்கு நன்றி ...!

இப்பொழுதெல்லாம்
உணவை பார்த்தவுடன்
காக்கைகள் கரைவதில்லை
காக்கைதொகை கூடிவிட்டதோ
மின்சாரம் கசியாததால் ...!

பக்கத்து வீட்டுக்காரியுடன்
இனி சண்டையில்லை
இருவரும் துணி உலர்த்த
மின்கம்பிகளையே
பயன்படுத்திக் கொள்கிறோம் ...!

பாட்டிகளை மீண்டும்
கதை சொல்ல வைத்த
மின்சார வாரியத்திற்கு நன்றி ...!

காதலியே
ஏன் அடிக்கடி
காணாமல் போய்  விடுகிறாய்
நீ
மின்வாரிய  ஊழியரின் பெண்ணோ ...?!



May 1, 2013

சூது கவ்வும் - SOODHU KAVVUM - வெல்லும் ...


ன்று ரிலீஸ்  மற்ற இரண்டு படங்களின் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்திருந்த போதிலும் சூது கவ்வும் சென்றதற்கு காரணம் குறும்பட இயக்குனர் நலன் குமரசாமி - விஜய் சேதுபதி - தயாரிப்பாளர் சி.வி.குமார் இந்த மூவரின் கூட்டணியே . ஞானவேல்ராஜா படத்தை வெளியிட்டிருப்பது தேவையான பப்ளிசிட்டியை கொடுத்திருப்பதும் பெரிய ப்ளஸ் ...

வேலைக்கு போகும் சேகர் ( அசோக் ) , சேகரின் சம்பளத்தை நம்பி வாழும் கேசவன்  ( ரமேஷ் ) , வேலைக்கும் போவதையே வெறுக்கும்  பகலவன்
( சின்ஹா ) இந்த மூவருடனும்  அமெச்சூர் கிட் னாப்காரன் தாஸ்  ( விஜய் சேதுபதி ) என நால்வரும் நட்பாகிறார்கள் . நேர்மையான நிதி அமைச்சர் ஞான உதயத்தின் ( எம்.எஸ்.பாஸ்கர் ) மகன் அருமைபிரகாசத்தை ( கருணா ) கடத்தும் அசைன்மெண்ட் இவர்களுக்கு வருகிறது . அதில் வெற்றி பெற்றார்களா என்பதை வயிறு குலுங்க சொல்லியிருக்கிறார்கள் ...


ஒரு பெண்ணை ஒழுங்காக கடத்த தெரியாமல் அடி வாங்கும் முதல் சீனிலேயே தன் கேரக்டரை விளங்க வைத்து விடுகிறார் விஜய் சேதுபதி . பெரும்புள்ளிகளின் பிள்ளைகளை கடத்தாமல் பேங்க் மேனேஜர் பெண்ணை கடத்தி நாற்பைந்தாயிரம் வாங்கி அந்த பெண்ணிற்கே டிப்ஸ் கொடுக்கும் இடம் க்ளாஸ் . புதியவர்களுக்கு ஐந்து ரூல்ஸ் சொல்லி பாடம் எடுக்கும் இடம் புதுமை ...

நயன்தாராவுக்கு கோவில்  கட்டியதற்காக ஊர் மக்களிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு சென்னைக்கு வந்து ஐக்கிய்மாகும் ஆரம்ப சீனில்  இருந்து ரொமான்ஸாக  நடிக்கத் தெரியாமல் ஆரூர்தாசிடம் அடி வாங்கும் கடைசி சீன் வரை சின்ன சின்ன வசனங்களாலும் , முக பாவங்களாலும் நம்மை அசத்தும் சின்ஹா ஒரு சர்ப்ரைஸ் பேக்கேஜ் . அலாரம் வைத்து சரக்கடிக்கும் ரமேஸ் , ஒரு வார்த்தை கூட பேசாமல் டெர்ரர் கொடுக்கும் போலீஸ் ரஞ்சித் , அப்பாவிடம் பணம் பறிக்க தன்னைத்தானே கடத்திக் கொள்ளும் கருணா , அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர் என படத்தில் எல்லோருமே அசத்தியிருக்கிறார்கள் ...

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை , தினேஷின் ஒளிப்பதிவு இரண்டும் படத்திற்கு பக்க பலம் . " மாமா டவுசர் " , " காசு " பாடல்கள் இரண்டும் தாளம் போட வைக்கின்றன . பெரிய ஹீரோவோ , மிரட்டும் கதையோ இல்லாமல் ஒரு சாதாரண லைனை விறுவிறுப்பான திரைக்கதையால் உன்னிப்பாக கவனிக்க வைத்ததில் தன் முதல் படத்திலே தனி முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர் நலன் குமரசாமி ...


சிகரட்டை விட்டுவிட்டேன் என்று சொல்லி விட்டு அப்பா பணம் தரவில்லை என்று சொன்னவுடன் சிகரெட் அடிப்பேன் என்று அம்மாவிடம்  சொல்லும் கருணா , எம்.எஸ்.பாஸ்கரிடம் அடிக்கு பயந்தது போல ரூமுக்கு சென்று விட்டு  டிபன் சாப்பிடும் அம்மா , கடத்திய பெண்ணின் அப்பாவை செல்போனில் டீப் பரீத் எடுக்க சொல்லும் விஜய் சேதுபதி , ஊரே அல்லோகலப்பட்டாலும் டாஸ்மாக்கை மூடி விடுவானே  என்று பதட்டப்படும் சின்ஹா  இப்படிப்பட்ட கேரக்டர்களை வைத்து நம் மனதை கவ்வுகிறார் இயக்குனர் ...

தேவையில்லாமல் விஜய் சேதுபதியுடன் வரும் ஹலுசினெஷன் பெண் கேரக்டர் , எக்ஸ்ட்ரா பில்ட் அப்புடன் வரும் போலீஸ் ரஞ்சித் , முதல் பாதியில்  காமெடியுடன் வேகமாக செல்லும் படத்தில் இரண்டாம் பாதிக்கு மேல் வரும்  சிறிய தொய்வு  இப்படி சில குறைபாடுகள் படத்தில் இருந்தாலும் இதை எதையுமே யோசிக்க விடாமல் நம்மை கட்டிப்போடும் திரைக்கதையால் ,  கார்த்தியை வைத்து எடுக்கும் மொக்கைப்படங்களுக்கு பிராயச்சித்தம் போல  ஞானவேல்ராஜா வெளியிட்டிருக்கும் இந்த சூது கவ்வும் வெல்லும் ...

ஸ்கோர் கார்ட் : 45


அசல் நாயகன் அஜித் ...


             
                                  
      மராவதியில் அறிமுகம் ஆகி ஆசைக்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி காதல் கோட்டையில் தன் வெற்றிக் கொடியை  நட்டு , வாலிக்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்க்களப்படுத்தி வருபவர்  அஜித் . இவரின் மங்காத்தா ஆட்டத்தை இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை...
                                                        
       உழைப்பாளர் தின மன்று தன் பிறந்த நாள் காணும் அஜித் பற்றிய பதிவு பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறேன் .  ஏனெனில் அஜித் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் எனபதோடல்லாமல் திரை உலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்து தன் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்  ....

        சிவாஜி, கமல் , விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித்
இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர்
படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது . அதனால் தான் தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர் படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ...


         அஜித்தின் கடந்த பதினெட்டு   வருட கால வளர்ச்சியை உற்று நோக்கினால் அதில் நிறைய ஏற்றத்  தாழ்வுகள் இருப்பதை காணலாம் . 
முதல் படம் அமராவதி  தோல்விப் படம் . மூன்றாவது படமான ஆசை பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் உல்லாசம் , ராசி உட்பட ஐந்து தோல்வி படங்கள் . வேறு யாராவதாக இருந்திருந்தால் இவ்வளவு வருடம் நடித்திருப்பார்களா என்பது  சந்தேகமே ...
                                          
        ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம் அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது. இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  காட் பாதர்  யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம் . ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு , ஜெய் போன்ற சம கால நடிகர்களே இவரை  காட் பாதர் என்று சொல்வது தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வார்த்தைகள் ...

          சிவாஜி , ரஜினி , கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த பெருமையும் அஜித்திற்கு உண்டு . அதில் வாலி , வரலாறு , வில்லன் , பில்லா உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிபடங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது . விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் . அதில் சரண் , எஸ்.ஜே.சூர்யா , துரை போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் . ஆனால் அஜித் கே.எஸ். ரவிக்குமார், லிங்கு சாமி  தவிர பெரிய இயக்குனர்கள் யார் படத்திலும் நடிக்காதது ஒரு குறை ...


        ஏனெனில் பாலா , அமீர் , கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்திருந்தால் தன் நடிப்பு திறமையை மேலும் வளர்த்துக்  கொள்வதற்கு பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் ..மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும் இமேஜ் வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும் , அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின . ரெட் , ஜனா  போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம் . இப்பொழுது தளபதி தன்  பாணியை மாற்றி வெற்றி பெற்று வரும் நிலையில் தல யும் அதை பின்பற்றுவார் என எதிர்பார்க்கலாம் ...

       தோல்விகளுக்கு பிறகு அஜித் முகவரிஜி , கிரீடம் போன்ற படங்களில் இமேஜ்  வட்டத்தை தாண்டி நடித்திருந்தது வரவேற்ப்பை பெற்றது. விஜய் , சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை , அவர் உடல் எடையை கவனிப்பதில்லை இப்படி எவ்வளவோ குறைகள் அவரை பற்றி சொன்னாலும் அவர் தான் எங்க " தல " என்கிறார்கள் ரசிகர்கள் ...                                                                
     

      தனக்கு சரியென பட்டதை சொல்லும் , செய்யும் தைரியம் அஜித்திற்கு உண்டு . விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் ,எந்த ஒரு சினிமா சம்பத்தப்பட்ட விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன்,பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன் ( பிற்காலத்தில் இதை தளர்த்தி கொண்டார் )   என்று அவர் சொன்ன வார்த்தைகளில் முடிந்த அளவு எந்த ஒரு சமாதானமும் செய்து கொள்ளாதது அவர் தனித்துவம் ...

       முதல்வர் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த  மேடையில் தன்னை வலுக்கட்டாயமாக வர சொன்னார்கள் என்று  அஜித் தைரியமாக சொன்னதும் , அதற்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டியதும் யாவரும் அறிந்த உண்மை . விஸ்வரூபம் பிரச்சனையின் போது கூட ஒரு குடிமகனாக குரல் கொடுத்தவர் அஜித் . அரசியல் லாபங்களுக்காக தன் ரசிகர் மன்றங்கள் உபயோகப்படுத்தப்படுவதை  உணர்ந்த அஜித் ரசிகர் மன்றங்களையே கலைக்க சொன்னதும் அவரின் தைரியத்திற்கு மற்றுமொரு சான்று ...

       புகழின் உச்சியில் இருந்த போதே சினிமா தவிர ரேசிங் போன்ற தனக்கு 
பிடித்த விசயங்களில் கலந்து கொள்ளும் துணிவும் இவருக்கு இருக்கிறது .             நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும் தன் முயற்சி, உழைப்பு , துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் அசல்  நாயகனாகவே நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ...

- மீள்பதிவு


 
   

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge