August 29, 2010

நான் மகான் அல்ல விமர்சனம்

மூன்று வெற்றி படங்கள் கொடுத்த ஹீரோ , முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் , யுவனின்  இசை , "இறகை போலே" பாடல் , தொடர்ந்து விளம்பரம் இவை எல்லாம் படத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது ...எனினும் படத்தின் முடிவில் சின்ன ஏமாற்றம் .....
     ஐந்து இளைஞர்கள் கஞ்சா போதையில் செய்யும் கொலையில் இருந்து தப்பிக்க அதற்கு ஒரே சாட்சியான ஹீரோவின் அப்பாவை கொன்று விடுகிறார்கள் ...ஹீரோ அவர்களை பழி தீர்க்கிறார் ...சாதாரணமான கதை ஆனால் சற்றே மாறுபட்ட திரைக்கதை....
     வேலை வெட்டி இல்லாமல் ஊரை சுற்றும் ஹீரோ , கால் டாக்ஸி டிரைவராக இருந்தாலும் தினமும் கை நிறைய காசு கொடுக்கும் அப்பா , ஹீரோவுடன் நான்கு நண்பர்கள் , ஹீரோ ஹீரோயினை கல்யாண மண்டபத்தில் சந்தித்து முதல் பார்வையிலேயே காதலிப்பது , மண்டபத்தில் ஒரு பாடல் என ஆரம்ப காட்சிகள் வழக்கமானதாகவே இருக்கின்றன....
      கார்த்தி காதல் தோல்வி என்று சொல்லி காஜலை கவிழ்க்கிறார் ....மனதில் பட்டதை உடனே சொல்லும் கார்த்தியின் குணம் காஜலிற்கு பிடிக்கிறது ...அவர் தோழியுடன் கார்த்தியை  சந்திக்கும் இடம் சிலிர்ப்பு ....சொல்லிவைத்தார் போல இருவரும் காதலிக்கிறார்கள் ...இடைவேளைக்கு பிறகு காஜல் காணாமல் போகிறார் ...இயக்குனர் அதிகம் மெனக்கெடவில்லை ....
       நடிப்பில்  கார்த்தி  பருத்தி வீரன் ஹாங் ஓவரில்   இருந்து மீண்டு இருக்கிறார் ....ஆனாலும் வன்முறை அவரை விடுவதாக  இல்லை ... அப்பா சாகும் இடத்திலும் , கிளைமாக்ஸ் சண்டை காட்சியிலும் நல்ல நடிப்பு .... காதல் காட்சிகளிலும் , வேலைக்காக கஸ்டமர்கலை சந்திக்கும் போதும் நடிப்பு மிளிர்கிறது ....தன்னை மிரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரவுடியையே தன் நண்பனாக கார்த்தி மாற்றுவது சாமர்த்தியம் .....
       இயக்குனரின் முதல் படத்தில் வந்த நிறைய பேர் இதில் இருக்கிறார்கள் ...ஆனால் அதில் ஏற்படுத்திய பாதிப்பு இதில் இல்லை....கஞ்சா போதையில் கொலை செய்யும் இளைஞர்கள் நன்றாக நடித்து இருக்கிறார்கள் ...அவர்களின் பின்புலம் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை ..முதல் காட்சியில் அவர்கள் தூக்கி செல்லும் பெண்ணிற்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை .....
          ஜெயப்ரகாஷ் எளிமையாக நடித்து இருந்தாலும் அவர் தோற்றம் அதற்கு முரண் படுகிறது ....
       படத்தின் பலம் கார்த்தியின் நடிப்பு , முன்னணியில் இருக்கும் யுவனின் பின்னணி இசை ,  மதியின் கேமரா , சண்டை காட்சிகள் , ஹீரோவை பெரிய அடியாட்களுடன் சண்டை போட விடாமல் விடலை பயல்களுடன் மோத விட்டிருப்பது ...படத்தின் வேகமான பின்பாதி ..புதுமுகங்களின் நடிப்பு .....மற்றும் முதல் படத்தில் கிராம சூழலில் இருந்து நகர சூழலிற்கு இயக்குனர் மாறி இருப்பது ..

         பலவீனம் மெதுவாக நகரும் ஆரம்ப காட்சிகள் ...வழக்கமான கதை,..இடைவேளைக்கு பிறகு காணமல் போகும் ஹீரோயின் ...என்ன தான் கஞ்சா போதை என்றாலும் எதை பற்றியும் கவலை படாமல் கொலை செய்யும் கல்லூரி மாணவர்கள் ..அப்பா அடி பட்டவுடன் பொறுப்புடன் நடக்கும் ஹீரோ அவர் இறந்த வுடன் உடனே பழி வாங்க கிளம்புவது ....சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கும் வன்முறை ..

               இயக்குனர் " வெண்ணிலா கபடி குழு" வில் ஏற்படுத்திய பாதிப்பை இதில் ஏற்படுத்த வில்லை .....அதே நேரம் குறைகள் இருந்தாலும் இப்படத்தை முழுதாக ஒதுக்கவும் முடியவில்லை ......மிக சிறந்த படங்களின் வரிசையில் சேர்க்கவும் முடியவில்லை ......
          "நான் மகான் அல்ல"  - மீடியம் cinema

           

August 22, 2010

காட் பாதர்- 1 - உலக சினிமா

                              
      "காட் பாதர்-  1 " 1972 ஆம் ஆண்டு பிரான்சிஸ் போர்ட்   இயக்கத்தில்  மர்லன் பிராண்டோ , அல் பாசினோ நடிப்பில் வெளி வந்த ஆங்கில படம்..... 'நாயகன்" இல் ஆரம்பித்து வரப்போகும் "மங்காத்தா"  வரை இந்த படத்தின் பாதிப்பில்லாமல் எந்த ஒரு "தாதா" படமும் எடுக்கப்பட்டதுமில்லை , இனி மேல் எடுக்கப்போவதுமில்லை....

       " காட் பாதர்-  1 " நிச்சயம் இப்படத்தை நிறைய பேர் பார்த்திருப்பார்கள் ...ஆனாலும் பார்க்காதவர்கள் ஏராளம்...அவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் ஒன்று...இன்று ஹீரோயிசத்தை முன்னிறுத்தி எடுக்கப்படும் எல்லா படங்களுக்கும் ஒரு முன்னோடி இப்படம் ...

     இதில் டானாக நடித்த பிராண்டோ மற்றும் அல் பாசினோ நூறு பேரை அடிக்கவில்லை பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசவில்லை ..படத்தில் பெரிதாக ரத்தம் சொட்டவில்லை ..முகம் சுளிக்கும் வன்முறை இல்லை ... ஆனாலும் இதெல்லாம் ஏற்படுத்தாத சிலிர்ப்பும் பாதிப்பும் படத்தில் உண்டு .....
.
       சிறு வயதில் இட்டாலியில் இருந்து ஓடி வந்து அமெரிக்காவின் பெரிய டானாக உருவாகிறார் பிராண்டோ .....முதல் காட்சியிலேயே அவரின் அரசியல் செல்வாக்கும் பலமும் , அதே நேரத்தில் அவர் நட்பிற்கும் , குடும்பத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவமும் தெளிவாக சொல்லபடுகிறது ...மூத்த பையனும் , தத்து பையன் சாமும் பிராண்டோவின் உடன் இருக்க கடைசி பையன் பாசினோ இதில் எதுவும் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் ...

      சூதாட்டம், கட்டை பஞ்சாயத்து இதை டான் தொழிலாக செய்தாலும் போதை பொருட்களை விற்பனை செய்ய இவரின் உதவி கேட்டு வரும் பெரிய பணக்கார குடும்பத்தை பிராண்டோ மறுக்கிறார் ..இதில் ஆத்திரம் அடையும் அவர்கள் டானை கொல்ல முயற்ச்சிக்க அதில் இருந்து உயிர் பிழைக்கிறார் .......இருந்தும் கொலை முயற்சி தொடர்கிறது ..
                  
                                  
       எதிரிகளை ஒன்றும் செய்ய முடியாது என மற்ற சகோதரர்கள் நினைக்க பாசினோ முடியும் என்கிறார் ... அவர் திட்டப்படி சமரசம் செய்ய போகும் இடத்தில் முன்பாகவே மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து எதிரிகள் இருவரையும் சுட்டு தள்ளுகிறார் பாசினோ.....

        பிறகு அங்கிருந்து வெளியூர் செல்லும் பாசினோ ஒரு அழகான பெண்ணை சந்திக்கிறார் .காதல் மலர்கிறது ...திருமணமும் முடிகிறது ......இவருக்கான கொலை முயற்சியில் இவரின் மனைவியும் இறக்கிறார்...இதற்கிடையில் எதிரிகள் இவரின் அண்ணனின் கதையை முடித்து விடுகிறார்கள் ....
ஊருக்கு திரும்பிய பாசினோ பழைய காதலியை சந்திக்கிறார் ..மணம் முடிக்கிறார் ....குழந்தையும் பிறக்கிறது .... பிராண்டோவும் முழு பொறுப்பையும் பாசினோவிடம் கொடுத்து விட்டு சிறிது காலத்தில் இறந்து விடுகிறார் .
.
        பாசினோ தனது தந்தை மற்றும் அண்ணன் சாவிற்கு பழி தீர்க்க எந்த சபதமும் எடுக்கவில்லை ஆனால் தனது குழந்தையின் பெயர் சூட்டும்  விழா முடிவதற்குள் இதற்கு காரணம் ஆன ஐவரின் கதையையும் முடிக்கிறார் .....இதில் இவரின் சகோதரியின் கணவரும் உண்டு ....

      பாசினோவை தேடி அனைவரும் வருகிறார்கள் ...இவரை டானாக முழு மனதுடன் ஏற்கிறார்கள் ...இதனால் மனைவியிடம் விரிசல் ஏற்படுகிறது .அத்துடன் படமும் முடிகிறது.........
                             
        இப்படத்தில் பிராண்டோ பேசும் ஒரு வசனம் மிக பிரபலம் ..." IAM GONNA GIVE HIM AN OFFER WHICH HE CANT REFUSE " ..பெரிய டானாக இருந்தாலும் மனைவி,மகன், பேரன்,பேத்தி என பெரிய குடும்ப சூழலில் வாழ்வது , போதை பழக்கம் இளைஞர்களிடம் பரவ கூடாது என தடுப்பது ....தனக்கு வேண்டிய ஹீரோவிற்கு சான்ஸ் தர மறுக்கும் தயாரிப்பாளரை வழிக்கு கொண்டு வர அவருக்கு பிடித்த மிக விழை உயர்ந்த குதிரையின் தலையை அவருக்கே பரிசாக கொடுப்பது , சாவதற்கு  முன் பேரனுடன் கொஞ்சி  விளையாடுவது   என எல்லா இடங்களிலும் பிராண்டோ மனதில் நிற்கிறார் .....

        யதார்த்தமான நடிப்பு என்ன என்பதை பாசினோவிடம் தான் கற்க வேண்டும் எடுத்த எடுப்பில்லேயே காதலியின் தந்தையிடம் பெண் கேட்கும் தைரியம் ,மரண படுக்கையில் இருக்கும் அப்பாவை காப்பாற்ற காட்டும் தவிப்பு ,... எதிரிகள் அனைவரையும் அழிப்பதற்கு அவர் போடும் சாமர்த்தியமான திட்டம் இப்படி நிறைய இடங்களில் அவரின் கண்களே பேசி விடுகின்றன ........
.
         இப்படத்தில் இருந்து உருவி எடுக்கப்பட்ட படங்கள் ஏராளம் ..அதில் முக்கியமானவை நாயகன் மற்றும் சர்கார் ...மணி கதை கருவை அப்படியே எடுத்திருந்தாலும் சில காட்சிகள் புதுமையாக செய்திருப்பார் ..அதிலும் ஒளிப்பதிவு , இசை,வசனம்,திரைக்கதை  போன்றவைகளில் இன்றும் இந்த
 படம் ஒரு முன்னோடியாக இருக்கிறது ..ஆனால் சர்க்கார் அப்படியே எடுக்கப்பட்ட படம்....

        போலீஸ் அதிகாரி தன் பெண் கற்பழிக்கப்பட்டதை கமலிடம் சொல்வது , வியாபார விஷயத்தில்  ரெட்டி குடும்பம் நாயகனிற்கு எதிராவது , போன் பூத்தில் வைத்து நிழல்கள் ரவி கொல்லபடுவது , கமலின் மனைவி கொல்லபடுவது ( GOD FATHER2 ) , காரின் பின் சீட்டில் இருந்து எதிரியின் கழுத்தை நெரித்து கொல்வது , கமலின் நடிப்பு என நிறைய காட்சிகள்  இப்படத்தின் பாதிப்பு .முன்பே சொன்னது போல சர்கார் படமே " GOD FATHER " தான் .....
 
      இந்த இரண்டு படங்களையும் தவிர  குறிப்பாக சொல்ல வேண்டிய மற்றொரு படம்  தேவர் மகன்"..ஆனால் எந்த ஒரு பாதிப்பும் நேரடியாக தெரியாமல் கமல் மிக புத்திசாலித்தனமாக கதைக்களத்தையும் , சூழலையும் மாற்றியிருப்பார்.

       சினிமா ஆர்வமுடைய ஒவ்வொருவருடைய வீட்டையும் அலங்கரிக்க வேண்டிய முக்கியமான டி.வி.டி தொகுப்பு காட் பாதர்.. காட் பாதர் -2 விமர்சனத்துடன் அடுத்த முறை சந்திக்கலாம்... உலக சினிமா

August 8, 2010

இளைஞர்களின் இயக்குனர்கள்

                                                   
             கடந்த பத்து வருடங்களில் கவனிக்க தக்க இயக்குனர்களில் மிக முக்கியமான இருவர் செல்வராகவன் மற்றும் கௌதம்மேனன்.....இவர்கள் இருவரின் பின்னணியும் மாறுபட்டிருந்தாலும் இவர்களின் படங்கள் இளைஞர்களை கவர்வதில் மாறுபடவில்லை ...இருவரும் அதிகம் பேசுவதில்லை ஆனால் இவர்கள் படங்கள் பேசுகின்றன. .....

                செல்வாவின் முதல் படம் "துள்ளுவதோ இளமை" விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டாலும் ரசிகர்களால் வசூலை குவித்தது ...நடுபக்கத்தில் ஆபாச படத்தை வெளியிட்டு விற்பனையை அதிகமாக்கிய நம்பர் ஓன் வார இதழ் கூட இப்படத்தை மோசமாக விமர்சித்தது ......ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அப்படத்தில் ஒரு உண்மை இருந்தது .....செல்வாவிடம் தைரியமும் இருந்தது ...."காதல் கொண்டேன்" காதலை மையபடுதினாலும் சிறு வயதில் ஏற்படும் பாலியல் பிரச்சனைகள் மன ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பை சொல்ல தவறவில்லை.....                    
                        .7g ஒரு காதல் காவியம் ...படத்தில் ரவிக்ரிஷ்ணாவும் , சோனியாவும் தெரியவில்லை ....கதிரும் , அனிதாவும் மனதில் நின்றார்கள் ......இது இயக்குனரின் வெற்றி ...."புதுபேட்டை" வன்முறையின் புது கோணம் ..ரௌடிகள் உருவாவது உடல் பலத்தில் அல்ல .......சூழ்நிலையும் ..மன உளைட்சலுமே அதற்கு காரணம் என்பதை காட்சிகளில் தெளிவாக உணர்த்தி இருப்பார்....எதையுமே விசுவலாக சொல்லும் திறமை இவரிடம் அசாத்தியமாக இருக்கிறது ......இவரின் தெலுகுபடம் தமிழில் "யாரடி நீ மோகினி" என்று ரீ மேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது .....              
                                    "ஆயிரத்தில் ஒருவன் " பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிகபெரிய முயற்சி....முதல் பாதி ஆங்கில படங்களுக்கு இணையாக இருந்தது .....இரண்டாவது பாதியில் படம் தடம் மாறியிருந்தாலும் காட்சிகள் கண்ணில் நிற்கின்றன ......படம் குடும்பத்தோடு சென்றவர்களை முகம் சுளிக்க வைத்ததும் உண்மை .......எனினும் அப்படம் ஒரு மைல்கல் ....செல்வராகவனின் முக்கிய பலமான யுவன் இப்போது இவர் கூட்டணியில் இல்லாதது ஒரு பெரிய மைனஸ் .....

               'மின்னலே" வில் ஆரம்பித்து "VTV " வரை கௌதமிற்கு காதல் கை கொடுக்கிறது .......நகர இளைஞர்களிடம் இவரின் படமும் .பாடல்களும் பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றன ......."காக்க காக்க " சூரியாவிற்கு மட்டும் திருப்புமுனையாக அல்ல ...காவல்துறை சம்பத்தப்பட்ட படங்களுக்கும் ஒரு முன்னோடி.........இப்படத்தின் வில்லன் கதாபாத்திரமும் வித்தியாசமாக இருந்தது .......

..               இதன் அடுத்த பதிப்பாக வந்த "வேட்டையாடு விளையாடு" ஒரு சூபெர்ப் CRIME THRILLER ...நீண்ட நாட்களுக்கு பிறகு கமலிற்கு அற்புதமான அறிமுக காட்சி .........இவரைப்போல ஹீரோயின்களை அவ்வளவு அழகாக யாரும் காட்டுவது இல்லை........ஆனால் சிம்புவையும் மிக அழகாக VTV யில் காட்டியிருப்பது புதுசு .........காதலின் எல்லா கோணங்களும் இதில் அற்புதம் .......இப்பட முடிவில் சிம்பு ,த்ரிஷா இருவரையும் பேசுவது போல காட்டாமல் தனி தனியாக காட்டி விசுவலாக முடித்திருக்கலாம் .......கௌதமின் பலம் உணர்ச்சிகளை துல்லியமாக எடுப்பது ....இசைக்கு அதிக கவனம் செலுத்துவது ......

                      செல்வராகவனை போலவே இவரும் ஹாரிசை பிரிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றம் .....செல்வராகவனை போலவே இவரும் காதலை விட்டு அடுத்த பரிணாமத்திற்கு போக வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம் ........தனுஷ் , சூர்யா இருவரும் நடிப்பில் தேறி இருப்பது இவர்களின் ஆளுமை .........நிச்சயம் இவர்களின் அடுத்த படங்களிடம் உள்ள எதிர்பார்ப்பு என்றுமே நீங்காது ..........
Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge