29 May 2011

இந்தியன் பைசா லீக்

                         தோனியின்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி  தொடர்ச்சியாக இரண்டாவது முறை  ஐ.பி.எல் கோப்பையை தட்டிச் சென்றதன் மூலம் தான் ஒரு தலை சிறந்த கேப்டன் என்பதை தோனி  மீண்டும் நிரூபித்து இருக்கிறார்..நேற்று சென்னையில் நடந்த இறுதிப் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ...
                      
       2007  ஆம் ஆண்டு நடந்த 20 -20  உலக கோப்பையை தொடர்ந்து , 2010  ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பை , அதே ஆண்டு நடந்த ஏர்டெல் சாம்பியன்ஷிப் கோப்பை , 2011  ஆம்  ஆண்டிற்கான 
50 ஓவர் உலகக்கோப்பை   என்று நான்கு ஆண்டுகளில் அவர் தலைமையின் கீழ் 
அணிகள் ஐந்து  பெரிய   வெற்றிகளை குவித்திருப்பது தோனியின் சிறப்பம்சம்...
             இதையெல்லாம் விட டெஸ்ட் போட்டிகளில் அவர் தலைமையிலான இந்திய அணி சர்வதேச டெஸ்ட் அணிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் முதல் இடத்தை ஒரு வருடத்திற்கும்  மேலாக தக்க வைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது...
             தோனியின் வருகை வெறும் வேகம் -விவேகம் அல்ல என்பதை நிரூபிப்பதோடு உத்வேகத்திற்க்கான அடையாளத்தையே மாற்றியிருப்பதும் தோனியின் பாணி...
                                    
              கேப்டன் என்பவன் அணியை முன் நின்று வழி நடத்தி செல்பவன் மட்டும் அல்ல அணியில் உள்ளவர்களை அவர்களின் திறமைக்கேற்ப முன்னிறுத்தி அவர்களை பின் நின்று காப்பவனும் கூட
என்ற  தத்துவத்தை விளையாட்டு உலகிற்கு மட்டுமல்லாமல் 
 தலைமைப் பொறுப்பில் உள்ள எல்லா துறையினருக்கும்
தன் வெற்றிகளின் மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார் தோனி   ...
               தன் தலைமையின் கீழான அணியை தனிப்பட்ட எவரையும் நம்பும்
படி வைக்காமல் அணியாக ஆட வைத்ததும், அவரவர் தங்கள் பங்கிற்கு சிறப்பாக செயல்பட்டதும் தோனியின் பலம்..
               சரியோ தவறோ தனக்கு தோன்றும் முடிவுகளை தயக்கமின்றி எடுப்பது , அதனை எந்த வித மறு யோசனையும்  இல்லாமல் செயல்படுத்துவது , தான் எடுக்கும் முடிவுகளின்
எதிர் மறையான பின் விளைவுகளின் முழுப் பொறுப்பையும் தானே
ஏற்றுக்கொள்வது , சரிவு ஏற்படும் நேரங்களில் முன்
நின்று தன்னம்பிக்கையுடன் வழி நடத்துவது என்று தலைமைப் பண்பிற்கான அனைத்து அம்சங்களும் தோனியிடம் உள்ளன...உலகக்கோப்பை
இறுதிப்போட்டி இதற்கு ஒரு உதாரணம்.....
                                          
                சூதாட்ட புகார்களில் சிக்கி சரிவில் இருந்த இந்திய அணியை மீட்டது
கங்குலியின் தலைமை..அது வரை தற்காப்பு ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த இந்திய
அணியை தலை நிமிர்ந்து எதிரிகளை கண்ணோடு கண் பார்க்க வைத்து ஓட விரட்டியது
கங்குலியின் உத்வேகம்..
              கங்குலியின்  தலைமையின் கீழ் மெருகேறிய  யுவராஜ் சிங்,ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் , சேவாக் போன்றவர்கள்
இன்று தோனி சர்வதேச போட்டிகளில் குவிக்கும் வெற்றிகளுக்கு பெரிதும்
காரணமாக இருபதையும் யாரும் மறுக்க முடியாது....
             கங்குலி,திராவிடுக்கு பிறகு கேப்டன் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேவாக் சரியான பார்மில் இல்லாததும் , யுவராஜ்,ஹர்பஜன் போன்றவர்களின் நடவடிக்கைகளின் மீது தேர்வுக்குழுவினருக்கு
போதிய நம்பிக்கை இல்லாததும் தோனியின் மீது அதிர்ஷ்டக் காற்று வீச
காரணமான விஷயங்கள்...
               அதிர்ஷ்டம் இல்லையென்றால் சர்வதேச போட்டிகளில் மூன்றே வருட அனுபவம் பெற்ற தோனி தன்னை விட
மூத்த வீரர்களை தாண்டி கேப்டன் பதவியை அடைந்திருக்க முடியாது..
ஆனால் திறமையும்,உழைப்பும்,சாதுர்யமும் உள்ளவர்களையே அதிர்ஷ்டம்
அணைத்துக் கொள்ளும் என்பது தோனியின் வளர்ச்சியைப் பார்த்து
நாம் தெரிந்து கொள்ளும் உண்மை....அதே நேரத்தில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணி பெற்ற  வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக
இருந்தது க்ரிஷ்டனின் பயிற்சி...அர்ஜுனனுக்கு எப்படி ஒரு கிருஷ்ணனோ
அதே போல தோனிக்கு ஒரு க்ரிஷ்டன்..
                                             
            சென்னை ஐ.பி.எல் கோப்பையை வென்றது ஒரு பக்கம் சந்தோசமாக
இருந்தாலும் ஒன்றிரண்டு போட்டிகளை தவிர மற்றவை எல்லாம் விறுவிறுப்பாக இல்லாதது பெரிய குறை..சர்ச்சைகளுக்கு பெயர் போன
ஐ.பி.எல் இந்த முறையும் வீரர்கள் நாட்டுக்கு ஆடுவதை விட காசுக்கு ஆடுவதற்கே
முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற சர்ச்சையை கிளப்பி இருக்கிறது..
              இது உண்மை தான் என்பதை மலிங்கா , கிரீஸ் கெயில் போன்றவர்கள் ஏற்கனவே நிரூபித்து விட்டார்கள்....ஆனால்
கம்பீர்,யுவராஜ்,சச்சின் போன்றவர்களும்  ஐ.பி.எல் தொடரை முழுமையாக
ஆடி விட்டு இப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து
தங்களை விளக்கி கொண்டதன் மூலம் இந்த சர்ச்சை மேலும் வலுத்திருக்கிறது...அதிலும் குறிப்பாக நூறாவது சர்வதேச சத்தத்தை அடிப்பார் என்று எதிபார்க்கப்பட்ட சச்சின் விலகி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.....
                                                
                மூத்த வீரர்கள் விலகிக் கொண்டதன் மூலம் பத்ரிநாத்,சிக்கர் தவான்,
மனோஜ் திவாரி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது
சந்தோசம்..முன்பிருந்தது போல மேற்கிந்திய தீவுகள் அணி பலம் வாய்ந்ததாக இல்லாததும் , அவர்களின் ஆடுகளம் வேகப்பந்திற்கு பெரிய
அளவு சாதகமாக இல்லாததும் மூத்த வீரர்கள் விலகியதற்க்கும், இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றதற்கும் ஒரு காரணமாக இருக்கலாம்...
              இருப்பினும் உலகக்கோப்பையை தொடர்ந்து ஐ.பில்.எல்,அதை தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் தொடர்,பின்னர் இங்கிலாந்து தொடர் என்று வரிசையாக இருப்பது தெரிந்திருந்தும் கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல்.
ஆடுவதற்கே அதிக ஆர்வம் காட்டியிருப்பது ஐ.பி.எல் ஐ
"இந்தியன் பிரீமியர் லீக்" என்று அழைப்பதை விட
"இந்தியன் பைசா லீக்" என்று அழைப்பதே பொருத்தம் என சொல்ல வைக்கிறது.........
           


         

22 May 2011

உன் நினைவுகளோடு....

ஒவ்வொரு முறையும்                               
உன்னைப்  பார்த்து விட்டு
திரும்பும் போது                                            
உயிரற்ற உடலாய் 
பயணப்படுகிறேன்..........                                                  
                                                     
                                                                                                                                                                                        
பேருந்துப்  பயணங்களில்
பின்னோக்கி விரையும்  
மரங்களைப்  போல
உன்னை நோக்கித்  தாவுது
என் மனக்குரங்கு .....

நிலவினைக்  காட்டி
சோறூட்டும் அன்னை 
விரலினை பிடித்துக் கொண்டு 
அடங்கள் செய்யும்
சிறு குழந்தை போல
உன்
நினைவுகளில் தவழ்கிறது
என் மனக்குழந்தை .......

எனக்கு
உயிர் கொடுத்தாள்  தாய்
என்
பேனாவிற்கு "உயிர்மை"
கொடுத்தவள் நீ...                           
                                           
                                                                                                    
கல்லூரிக்  காலங்களில்
கன்னியரை மயக்க
கவிதைகள் புனைந்தேன் பல...
"கண்டதும் காதல்"-
காமக் கிளர்ச்சிகளை காதல் என 
தப்பாக கற்பிதங்கள் 
செய்து கொள்ளும்
வயது அது ....

இது
உன்னை பற்றிய கவிதை
மட்டும் அல்ல 
உண்மையை பற்றியதும் கூட...

என் 
ஒவ்வொரு பயணத்தின் போதும்
எனை மறக்காமால் 
எடுத்து  வரச்  சொல்லி
நீ
எழுதிக் கொடுக்கும்
பொருட்கள் பல..
ஆனால்
நான் எதை மறந்தாலும்
மறவாமல் சுமந்து வருவது
உன் நினைவுகள் .....
                                                                            
பிரசவம்
பெண்களுக்கு மறு ஜென்மம்
என்பார்கள்
எனக்கும் கூடத்தான் 
உன்னை பிரிந்திருப்பதால் ...

உன்னைக் காணும்
அந்த
ஒரு நாளிற்காக
ஒவ்வொரு நாட்களையும்
பிரயத்தனப்பட்டு
கடத்திக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு......


19 May 2011

ஆடுகளத்துக்கு ஆறு தேசிய விருதுகள்


                  2010  ஆம்  ஆண்டிற்கான  58 வது தேசிய திரைப்பட   விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கின்றன 
     ..         . இந்த முறை அதிகமாக  தென் இந்திய திரைப்படங்களுக்கு  18 விருதுகள் வரை வழங்கப்பட்டு
 இருப்பது  இதுவே முதல் முறை  ......        அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கு  13 விருதுகள் கிடைத்திருப்பதும் இதன் 
சிறப்பம்சம்... 
                                 
            அதிகப்படியாக சிறந்த நடிகர் - தனுஷ் ( இத்த விருது  கேரள நடிகர் சலீம் குமாருடன் சேர்த்து வழங்கப்படுகிறது ) .....
சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கம்  - வெற்றி மாறன் 
சிறந்த நடனம் - தினேஷ் குமார் , சிறந்த படத்தொகுப்பு - கிஷோர்
சிறப்பு விருது - ஜெயராமன்  என்று மொத்தம் ஆறு விருதுகளை
அள்ளி சென்றிருக்கிறது ஆடுகளம்...காண்க .ஆடுகளம் விமர்சனம்...
             மதுரை கருப்பாகவே ஆடுகளத்தில் வாழ்ந்து காட்டிய தனுஷிற்கு இது சரியான சந்தர்ப்பத்தில் கிடைத்திருக்கும் பெரிய  அங்கீகாரம்.. சிறந்த நடிகருக்கான விருதுகள் பெற்ற  எம்.ஜி.ஆர்,கமல்,விக்ரம் போன்ற கதாநாயகர்கள் வரிசையில் இப்போது தனுஷும் இடம் பெற்று விட்டார் ..
( ஆசிய ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகர் என்ற விருதை பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்காதது விருதுக்கு கிடைத்த துரதிருஷ்டம் )....
                                    
         இரண்டாவது படத்திலேயே இரண்டு தேசிய விருதுகள் பெற்று சிறந்த
இயக்குனருக்கான விருதினை பெரும் மூன்றாவது இயக்குனர் என்ற
பெருமையினை தட்டி செல்கிறார் வெற்றி மாறன்..( அகத்தியன்,பாலா இருவரும் இவ்விருதினை வாங்கிய பெருமைக்குரியவர்கள் )
           இயல்பான நடிப்பால் எல்லோரையும் கவர்ந்த ஈழக் கவிஞர்  ஜெயராமன்  
சிறப்பு விருதினை பெற்றிருக்கிறார் .
                                                   ஆடுகளத்திற்கு அடுத்தபடியாக தென்மேற்கு பருவக்காற்று , எந்திரன் ,
நம்ம கிராமம் போன்ற படங்களும் தலா இரண்டு விருதுகளை தட்டி சென்றிருக்கின்றன...
            தற்போது  கிராமத்து அம்மா என்றவுடன் நினைவுக்கு வரும் சரண்யா
தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக
சிறந்த நடிகைகான விருதினை வாங்குகிறார்..(மராத்திய நடிகை மிதாலி ஜக்டப்பும் இவ்விருதினை பெறுகிறார் )..
       தமிழச்சியின் தாய் பாசத்தையும்,வீரத்தையும் பறை சாற்றும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறது 
                                    
      ஏழாவது முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதினை இம்முறையும் வைரமுத்து வாங்குகிறார் ..( தென்மேற்கு பருவக்காற்று )
இந்தியாவிலேயே அதிக பட்சமாக தேசிய விருதினை பெரும் தனி நபர் இவர் என்றே நினைக்கிறேன் ..( கமல் பிலிம் பேர் விருதினை வேண்டாம் என்று சொன்னது போல 
இவர் சொன்னால் தான் உண்டு போல )  .
                    எளிமையான பாடல்களாலும் ,எதுகை மோனையாலும் எல்லோர்
மனதிலும் இடம் பிடித்த கவிஞர் வாலிக்கு ஒரு தேசிய விருது கூட
வழங்கப்படாதது மனதை பிசையும்  முரண்பாடு...
                சிறந்த துணை நடிகைக்கான் விருதினை சுகுமாரி பெறுகிறார் 
( படம் - நம்ம கிராமம் ).  சிறந்த உடை அமைப்புக்கான விருதும் பெறுகிறது ..
                           
   எந்திரன் படத்திற்காக விருது பெறுபவர்கள் .காண்க எந்திரன் திரை விமர்சனம்......
   சிறந்த கலை இயக்குனர் - சாபு சிரில் மற்றும்
           ஸ்பெஷல் எபக்ட்ஸ் - ஸ்ரீநிவாஸ்  மோகன் ...
          குறைந்த பட்சம் நான்கு விருதுகளாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட "மைனா"
திரைப்படம் ஒரே ஒரு விருதினை  மட்டும் பெற்றிருப்பது ஏமாற்றமே ...
                              
               நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல்
தன்னை சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிரூபித்த "தம்பி" ராமையாவிற்கு    
சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி....
                   இவை தவிர சிறந்த திரைப்படமாக "அடமிண்டே மகன் அபு" என்ற மலையாள படமும் , சிறந்த பொழுது போக்கு படமாக சல்மான்கான் 
நடித்து சென்ற வருடம் அதிக பட்ச வசூலை அள்ளிய "தபாங்"    என்ற ஹிந்தி 
படமும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன....
     விருது பெறும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.....
                

17 May 2011

அழகர்சாமியின் குதிரை

                                                            
        திருவிழா பாடலில் இருந்து தொடங்கும் படம் முடியும் வரை 
சொந்த ஊர் திருவிழாவிற்கு நேரே சென்று பார்த்து விட்டு வந்த அனுபவத்தை 
தருகிறது...படம் முடிந்து வரும்போது சுந்தர ராமசாமி , கி.ராஜநாராயணன் நாவலை 
படித்து முடித்தது போன்ற உணர்வு ....
        இலக்கியம் படமாக்கப்படும் போது  வணிக ரீதியான சமாதானங்களால் வழி மாறி போய் விடுவதுண்டு ...ஆனால் 
பாஸ்கர் சக்தியின் கதையை அதன் மண் மனம் மாறாமல் இயக்கி இருக்கும் 
சுசீந்தரனின் சாமர்த்தியத்திற்கு என் பாராட்டுக்கள்...
        மழை வரம் வேண்டி அழகர் சாமிக்கு திருவிழா எடுக்க ஒரு கிராமமே
ஆயத்தமாகிறது..உள்ளூர் பகையையும் மீறி எல்லா ஏற்பாடுகளும் நடந்து
கொண்டிருக்க திடீரென அழர்சாமியை வைத்து ஊர்வலம் செல்ல வேண்டிய மரக்குதிரை  காணாமல் போய் விடுகிறது...காவல் துறையினரிடம் புகார் சொல்லியும் பிரயோஜனம் இல்லை..
           இதற்கிடையில்  ஒரு நிஜ குதிரை இவர்கள் கையில் சிக்க அது அழகர் சாமியே அனுப்பி வைத்ததாக நம்பும் கிராமம் உண்மையான குதிரைக்காரன் வந்து கேட்கும் போது கூட
தர மறுத்து விடுகிறது... கடைசியில் திருவிழா நடந்ததா ?. குதிரைக்காரனுக்கு குதிரை கிடைத்ததா ?..
                                     என்ற மீதி கதையை
காதல் , ஜாதி பிரச்சனை , மக்களின் மூட நம்பிக்கை, கிராமத்து மக்களின்
வெள்ளந்தி மனது இவற்றுடன் பிணைந்து எளிமையாகவும், நகைச்சுவையுடனும் சொல்லி இருக்கிறார்கள்.....
                 திருவிழாவிற்கு பணம் கேட்டு வீடு வீடாக ஊர் பெரியவர்கள் பயணப்படும் போதே சிரிப்பும் நம்முடன் சேர்ந்து படம் நெடுக பயணம் செய்கிறது...ஊர் தலைவரின் பையனாக வரும் "இனிகோவும் , அவரின் காதலியாக நடித்திருக்கும் பெண்ணும் கண்களாலேயே பேசிக்கொள்ளும் காட்சிகள் அற்புதம்
                                                   
                 இவர்கள் மட்டும் அல்ல படத்தில் வரும் ஊர் தலைவர்,கோடங்கி ,ஆசாரி,மைனர்   என்று அனைவரும் இயல்பாக நடித்து இருக்கிறார்கள்....காவல் துறை அதிகாரியாக வரும் அருள்தாசை
குறிப்பிட்டு சொல்லலாம்..
               சூரி நிறைய சிரிக்க வைக்கிறார்..சில இடங்களில் நாகேஷின்
 உடல் மொழியை நினைவு படுத்துகிறார்..மலையாள மாந்திரீகராக வரும்
கிருஷ்ணமூர்த்தியின் பொய் மூட்டைகளை முழுமையாக நம்பும்
மக்களின் மூட நம்பிக்கைகள் படம் நெடுக தெளிக்கப்பட்டிருக்கின்றன....
பட முடிவில் கடவுள் நம்பிக்கை உண்மையா ? பொய்யா ? என்ற கேள்வி
எழாமல் இல்லை...
              கதையின் நாயகனாக வரும் அப்புக்குட்டிக்கு இப்பட வாய்ப்பு ஒரு 
வரபிரசாதம் ...கோபமாக சண்டை போடும் போது  ,சோகமாக அழும் போது  ,
குழந்தைத்தனமாக சிரிக்கும் போது என படம் நெடுக உணர்வு பூர்வமாக 
நடித்திருக்கிறார்...சரண்யாவுடனான இவர் காதல் காட்சிகளை விட குதிரைக்காக 
இவர் போடும் சண்டை காட்சிகள் மனதில் நிற்கின்றன...
                                                            
              கதை, திரை கதையை தவிர படத்தின் மற்ற இரண்டு பலங்கள்
இசை மற்றும் ஒளிப்பதிவு...இசை ஞானி வாத்தியங்களில் மட்டும் நம்மை 
தாலாட்டாமல் மெளனமாக இருந்தும் கதையோடு நம்மை ஒன்ற செய்கிறார்...
அப்புக்குடியின் அறிமுக காட்சியில் இவரின் இசை அற்புதம்..
"பூவ கேளு" பாடல் கேட்டது போல  இருந்தாலும் கேட்கும் படியாக இருக்கிறது.... "தேனீ" ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளிர்ச்சி..
                தன் பிழைப்பை கெடுத்த கிராமத்து மக்கள் மீது அப்புக்குட்டி காட்டும் ஆவேசம், அதே மக்கள் திருவிழா கொண்டாடுவதற்காக தன்
குதிரையை விட்டுக்கொடுக்கும் பரிவு , குதிரையை தர மறுக்கும் கிராமத்து
மக்களின் இயல்பு இவை எல்லாமே யதார்த்தம்....
                 படம் நெடுக யதார்த்தமாக இருந்தாலும் அப்புக்குட்டி-சரண்யா
இவர்களுக்கு இடையேயான காதல் சினிமா சாயம் பூசியது போல் தெரிகிறது ...குதிரையுடன் செல்லாவிட்டால்
சரண்யா செத்து விடுவாள் என்றெல்லாம் சொல்வது  சினிமாத்தனம்....
                  உலக சினிமாக்களை உல்டா அடித்து விட்டு
கதை,திரைக்கதை,வசனம் என்று தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும்
இயக்குனர்கள் மத்தியில் நல்ல இலக்கியத்தை அதன் தரம் மாறாமல்
எடுத்திருக்கும் இயக்குனர் சுசீந்தரனுக்கு ஒரு சலாம்...இனி வரும் இயக்குனர்களும் இது போன்ற நல்ல கதைகளை படமாக்கும் முயற்சிகளுக்கு முன் வந்தால்
தமிழ் சினிமாவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்...
                    அழகர்சாமியின் குதிரை - அனைவருக்கும் ஏற்ற சவாரி

               

4 May 2011

தீவிரவாதம் ஒரு "தீரா" வாதம்

                                                       
             உலகின் அதி பயங்கர தீவிரவாதியும் , அமெரிக்காவில்  9 /11  ல் 
  நடந்த  இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரண கர்த்தாவுமான
 "ஒசாமா பின் லேடன்"ஐ இஸ்லாமாபாத்தில் இருந்து 60  கி.மீ.
 தொலைவில்   உள்ள "அப்போட்டாபாத்" என்ற இடத்தில 
. சுட்டு வீழ்த்தியதன் மூலம் தன் பத்து வருட  பகையை தீர்த்து கொண்டது
அமெரிக்கா......இதற்காக அமெரிக்கா செய்த செலவு இந்திய மதிப்பில்
கிட்டத்தட்ட 900 லட்சம் கோடி ரூபாய்...
                  அமெரிக்காவில் பல தரப்பட்ட மக்களும் இப்போது ஒன்றிணைந்து
இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ..  ஒரே கட்சிக்குள்ளேயே இரு வேறு அணிகளாக  இருக்கும்
அமெரிக்க அதிபர் ஒபாமாவும் ,  ஹிலாரி கிளிண்டனும்
ஒன்றாக அமர்ந்து பாகிஸ்தானில் நடந்த ஒசாமாவிற்கு எதிரான தாக்குதலை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்ததை தொலைக்காட்சிகளில் காண முடிந்தது ...
           ."வேற்றுமையில் ஒற்றுமை"- நாம் சொல்லி கொண்டிருப்பதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்
               எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது அமெரிக்கா.. இதன் மூலம்
ஒரு பக்கம் அமெரிக்காவிடம் பணத்தை வாங்கி கொண்டு,மறுபக்கம் தீவிரவாதத்தை உரம் போட்டு வளர்த்து கொண்டிருந்த பாகிஸ்தானின் இரட்டை சாயம் வெளுத்தது....
                                                     
             9/11  தாக்குதலுக்கு பிறகு அமெரிக்க மக்கள் அரசியல் , நிறம் , இனம் இதையெல்லாம் மறந்து தீவிரவாதத்திற்கு  எதிரான அணியில்
ஒன்று பட்டு நிற்கிறார்கள் ..அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமாயிற்று.....மற்ற நாடுகளில் நடக்கும் தீவிரவாதங்களுக்கு பண,ஆயுத உதவிகளை செய்து வந்த அமெரிக்கா    9/11  தாக்குதலுக்கு பிறகு
ஆடிப்போனது என்னமோ உண்மை...ஆனால் துவண்டு போய் விடவில்லை ......                                                                               தன்னுடைய புலனாய்வு துறைக்கு  முழு சுதந்திரம் கொடுத்த அமெரிக்கா 
சந்தேகத்திற்கு இடமான எந்த ஒரு விசயத்தையும் விடவில்லை...
                            அமெரிக்காவின்  கடுமையான சட்ட திட்டங்களும் , விசாரணைகளும் ஷாருக்கான் ,
கமல் ஹாசன் போன்ற பிற நாட்டு பிரபலங்களோடு மட்டும் நிற்காமல் தன் 
நாட்டு அமைச்சர்கள் மீதும் கூட பாய்ந்தது... 
         நாட்டின் இறையாண்மைக்கும்,பாதுகாப்பிற்கும் எதிரான எந்த ஒரு சின்ன விசயத்தையும் அமெரிக்கா இளப்பமாக எடுத்துக் கொள்ளவில்லை...
அதனால் தான் 9/11  தாக்குதலுக்கு பிறகு எந்த ஒரு அசம்பாவிதமும் அமெரிக்காவில் நடக்கவில்லை.. 
                         ஒபாமாவும் 9/11  தாக்குதல் "புஷ்" ஆட்சிக் காலத்தில் நடந்தது , அவரே இதற்கு முழுக்க , முழுக்க காரணம் என்று சொல்லி அரசியல் லாபம் தேடாமல் ஒசாமாவை 
அழிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது....
                      இதே இந்தியாவில் நடந்து வரும் கூத்தை சற்று உற்று பார்ப்போமா......
                                                     
                  பத்து வருடங்களுக்கு முன்னாள் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய "அப்சல் குரு" வை தூக்கில் போட  சொல்லி உச்ச நீதி மன்றம்
தீர்ப்பு வழங்கி கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் அந்த தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை...."அப்சல் குரு"வே என்னை தூக்கில் போட்டு விடுங்கள் என்று சொல்லியும் மெத்தனமாய்
இருக்கிறது தற்போதைய மத்திய அரசு ...
           அப்சல் குருவை தூக்கில் போடுவதால் நாட்டின் அமைதி கெட்டுவிடும் என்றும்,
தூக்கில் போடாததற்கு முந்தைய அரசே காரணம் என்றும்  பல காரணங்களை சொல்லி தப்பித்து கொள்ளும் மத்திய அரசு "அப்சல் குரு"வை தூக்கில் போடுவதற்கு அவன் நம் நாட்டின் இறையாண்மைக்கு  எதிரானவன் என்ற ஒரு காரணம் போதாதா?...
            வேறு நாட்டிற்கு உள்ளேயே சென்று தீவிரவாதியை அழித்த
அமெரிக்கா எங்கே ? உள் நாட்டு தீவிரவாதியை தூக்கில் போட சொல்லி
தீர்ப்பு வந்தும் அரசியல் லாபத்திற்காக அதனை நிறைவேற்ற வக்கில்லாமல் இருக்கும் தற்போதைய இந்தியா எங்கே ?
                                                
              இது மட்டுமா?..     26 /11 மும்பை தாக்குதலில் பல நூறு பேர்களின் உயிர் இழப்புக்கு காரணமான 
"கசாப்" இன்று வரை பல நூறு கோடிகள் செலவு செய்யப்பட்டு மத்திய அரசால் 
காபந்து செய்யப்பட்டு வருகிறான்...அவன் உயிரோடு இருந்தால் தான் நிறைய தகவல்கள் சேகரிக்க முடியுமாம்..சேகரித்து என்ன செய்ய போகிறார்கள்...?
           ஏற்கனவே 93 மும்பை குண்டு வெடிப்புகளுக்கு காரணமான "தாவுத்" , "லக்ஷர் இ தொய்பா" அமைப்பினை உருவாக்கியவனும்  26 /11 
தாக்குதலுக்கு  காரணம் ஆனவுனமான   "சாயித்" மற்றும் 2001 பாராளுமன்ற தாக்குதலுக்கு 
காரணமான "அஸார்" இவர்களுக்கெல்லாம் பாகிஸ்தான் தான் அடைக்கலம் 
கொடுத்து வருகிறது என்று தெரிந்திருந்தும் என்ன செய்ய முடிந்தது?  
          இவர்களையெல்லாம் பிடிக்க முடியவில்லை என்பதை விட இவர்களை பிடிப்பதற்கும் , பிடித்தவர்களை தண்டிப்பதற்கும் இங்குள்ள
அரசாங்கத்திற்கு திராணி இல்லையே என்று நினைக்கும் போது தான் 
பெரும் வேதனையாய் இருக்கிறது....
                அமெரிக்கா எதை கொண்டாடினால் என்ன நமக்கு தான் இரு நாட்டு அதிபர்களும் பகையை மறந்து கொண்டாட "உலக கோப்பை" கிரிக்கெட் போட்டி
இருக்கிறதே ?... வெட்கமாக இருக்கிறது ......
                   அரசாங்கம் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசியல்,இன,மொழி,மத வேறுபாடுகள்   இல்லாமல்
         தீவிரவாதத்திற்கு  எதிராக ஒன்று பட வேண்டும்...         சகிப்புத்தன்மை ,அஹிம்சை என்று நம்மை நாமே ஏமாற்றி 
கொண்டிருக்காமல் தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான சட்டங்களை
அமல்படுத்த வேண்டும்...இல்லையேல் இந்தியாவை பொறுத்த வரை
தீவிரவாதம் ஒரு "தீரா" வாதமாகவே இருக்கும் ....



 
    
           
 

1 May 2011

"அசல்" நாயகன் அஜித்

                                                  
      "அமராவதி"யில் அறிமுகம் ஆகி "ஆசை"க்கு பிறகு இளம் பெண்கள் மனதில் ஆசை நாயகனாக உருமாறி "காதல் கோட்டை"யில் தன்
வெற்றிக் கொடியை  நட்டு ,"வாலி"க்கு பிறகு தனக்கென தனி வழியை ஏற்படுத்திக் கொண்டு தமிழ் திரையுலகை அமர்களப்படுதியவர் அஜித்...
இவரின் "மங்காத்தா" ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலாய் 
காத்துக் கொண்டிருக்கிறார்கள்... ....                                                            
          " உழைப்பாளர் தின" மன்று தன் பிறந்த நாள் காணும் அஜித் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் முன்னுக்கு வந்தவர் ..அஜித் திரை உலகிற்கு வந்து 20 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் அவரின் 50 வது படமான "மங்காத்தா" இந்த வருடம் வெளிவருவது மற்றொரு சிறப்பம்சம்....
              சிவாஜி,கமல்,விக்ரம் என மிக சிறந்த நடிகர்கள் வரிசையில் அஜித்
இல்லையென்றாலும் எல்லா தரப்பிலும் இவருக்குள்ள ரசிகர்களால் இவர்
படங்களுக்கு கிடைக்கும் முதல் வாரத்திற்கான வசூலையும்,வரவேற்பையும் யாரும் மறுக்க முடியாது .....அதனால் தான்
தோல்வி படங்கள் அதிகம் கொடுத்திருந்தும் வர்த்தக ரீதியாக இவர்
படங்களை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள் ....
          அஜித்தின் கடந்த பதினெட்டு   வருட கால வளர்ச்சியை உற்று நோக்கினால் அதில் நிறைய ஏற்ற தாழ்வுகள் இருப்பதை காணலாம்...
முதல் படமே  தோல்விப் படம்...மூன்றாவது படமான "ஆசை" பெரிய வெற்றியை பெற்ற போதும் அதை தொடர்ந்து ஒரே வருடத்தில் "உல்லாசம் ","ராசி" உட்பட ஐந்து தோல்வி படங்கள் ...வேறு யாராவதாக
இருந்திருந்தால் தொடர்ந்து இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்திருப்பார்களா என்பது சந்தேகமே.....
                                          
            ஆரம்ப காலங்களில் அஜித் பத்திரிக்கையாளர்களிடம் அதிகமாக கோபப்படுகிறார்  என்ற சர்ச்சையும் இருந்தது...இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகவே இருந்தன..திரை உலகில் இவரை வழி  நடத்த  "காட் பாதர் " யாரும் இல்லாததும் காரணமாக இருக்கலாம்...
          ஆனால் இன்றைய கால கட்டத்தில் சிம்பு,ஜெய் போன்ற சம கால
நடிகர்களே இவரை "காட் பாதர் " என்று சொல்வது தமிழ் சினிமா வரலாற்றில் அஜித்தின் வெற்றியை குறிக்கும் வார்த்தைகள்...
           சிவாஜி, ரஜினி,கமல் வரிசையில் அதிகமாக ஒன்றுக்கு மேற்பட்ட வேடங்களில் நடித்த பெருமையும் அஜித்திற்கு உண்டு...அதில் "வாலி","வரலாறு","வில்லன்" ,"பில்லா" உட்பட பெரும்பாலான படங்கள் வெற்றிபடங்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.....
             விஜயகாந்தை போல இவரும் நிறைய புது முக இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கிறார் .... அதில் சரண்,எஸ்.ஜே.சூர்யா,துரை போன்றவர்கள் 
குறிப்பிடத்தக்கவர்கள் ..ஆனால் அஜித் கே.எஸ். ரவிக்குமார்,லிங்கு சாமி  தவிர பெரிய 
இயக்குனர்கள் யார் படத்திலும் நடிக்காதது ஒரு குறை ...
           ஏனெனில் பாலா,அமீர்,கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்கள் படங்களில் நடித்திருந்தால் தன் நடிப்பு திறமையை மேலும் வளர்த்து கொள்வதற்கு 
பெரிய வாய்ப்பாக இருந்திருக்கும் ..மேலும் புது இயக்குனர்கள் பெரும்பாலும் 
"இமேஜ்" வட்டத்தை தாண்டி யோசிக்காததாலும் , அஜித்தும் வட்டத்தை தாண்டி வெளியே வராததாலும் நிறைய தோல்வி படங்களே மிஞ்சின ...
"ரெட்","ஜனா" போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்...
             தோல்விகளுக்கு பிறகு அஜித் "முகவரி","ஜி","கிரீடம்"  போன்ற படங்களில் "இமேஜ்' வட்டத்தை தாண்டி நடித்திருந்தது வரவேற்ப்பை பெற்றது....
             விஜய் ,சூர்யா போன்ற நடிகர்களை போல அஜித்தால் நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் பிரகாசிக்க முடிவதில்லை..அவர் உடல் எடையை கவனிக்காததும் காரணமாக இருக்கலாம்...எது எப்படியோ
அவர் தான் எங்க "தல" என்கிறார்கள் ரசிகர்கள்...

                                                              
          தனக்கு சரியென பட்டதை சொல்லும்,செய்யும் தைரியம் அஜித்திற்கு உண்டு...விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் ,எந்த ஒரு சினிமா சம்பத்தப்பட்ட விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டேன், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன்
(பிற்காலத்தில் இதை தளர்த்தி கொண்டார் )   என்று அவர் சொன்ன 
வார்த்தைகளில் முடிந்த அளவு எந்த ஒரு சமாதானமும் செய்து கொள்ளாதது அவர் தனித்துவம் ...
           முதல்வர் உட்பட அனைவரும் அமர்ந்திருந்த  மேடையில் தன்னை 
வலுக்கட்டாயமாக வர சொன்னார்கள் என்று  அஜித் தைரியமாக சொன்னதும்,
அதற்கு ரஜினி எழுந்து நின்று கை தட்டியதும் யாவரும் அறிந்த உண்மை...
           அரசியல் லாபங்களுக்காக தன் ரசிகர் மன்றங்கள் உபயோகப்படுத்தப்படுவதை 
உணர்ந்த அஜித் ரசிகர் மன்றங்களையே கலைக்க சொன்னதும் அவரின் 
தைரியத்திற்கு மற்றுமொரு சான்று...
            புகழின் உச்சியில் இருந்த போதே சினிமா தவிர ரேசிங் போன்ற தனக்கு 
பிடித்த விசயங்களில் கலந்து கொள்ளும் துணிவும் இவருக்கு இருந்தது....
             நடிப்பு திறமையால் பெரிதாக ஈர்க்காவிட்டாலும்
தன் முயற்சி,உழைப்பு,துணிவு மற்றும் போலித்தனமில்லாத இயல்பு இவற்றின் மூலம் "அசல்" நாயகனாகவே
நம் கண் முன் தெரிகிறார்  அஜித் ....
    
   

Related Posts Plugin for WordPress, Blogger...