26 February 2012

கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் , ஹாக்கியின் எழுச்சியும் ...!



இன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தன் மூன்றாவது தோல்வியை தொடர்ந்து பதிவு செய்திருக்கிறது ... வழக்கம் போல இந்த தோல்வியின்  மூலமும் ஒரு போனஸ் புள்ளியை எதிரணிக்கு வாரி வழங்கிய இந்திய அணி , முத்தரப்பு தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை
பெரும்பாலும் இழந்து விட்டது ...


அதே நேரத்தில் இந்தியாவின் தேசிய விளையாட்டாக இருந்தாலும் கிரிக்கெட் என்னும் சுனாமியால் ஒரங்கட்டப்பட்டிருந்த ஹாக்கி இன்று பிரான்சுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய ஹாக்கி ஆடவர் அணி 8-1  என்ற கோல் கணக்கில் அபாரமாக  வெற்றி பெற்று லண்டனில் நடைபெறவிறுக்கும் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றதன் மூலம் உயிர்த்தெழுந்திருக்கிறது...

வெற்றி , தோல்விகள் விளையாட்டில் சகஜம் என்றாலும் உலகிலேயே பணக்கார கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ சஹாராவுடன் நடந்த தகராறு , ஐ.பி.எல் குளறுபடிகள் , நியோ ஸ்போர்ட்ஸ் சேனலுடன் ஒப்பந்த முறிவு , வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகள் , டி.ஆர்.பி ரேட்டிங்கில் பின்னடைவு , கடைசியாக தோனி - சேவாக் இடையேயான வெளிப்படையான ஈகோ சண்டை இவற்றால் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் , கேடபாரற்று கிடந்த ஹாக்கி அணி ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றதோடு இன்று இறுதி ஆட்டத்தில் 7 கோல்கள் வித்தியாசத்தில் பிரான்சை வென்று எழுச்சி அடைந்து வருவது ஒரு பெரிய மாற்றத்திற்கான அடிகோலாக அமைந்திருக்கிறது ... 

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமயிலான கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றதன் மூலம் ஹாக்கியின் பக்கம் இருந்த இந்திய ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தது ... அதன் பிறகு சிறு சிறு போட்டிகளில் ஹாக்கி அணி வென்று வந்தாலும் இழந்த தன் ஆளுமையை அதனால் திரும்ப பெற முடியவில்லை ...கிரிக்கெட் வியாதி பட்டி தொட்டியெங்கும் பரவ ஹாக்கி ஆடப்பட்ட செம்மண் தளங்களில் கிரிக்கெட் ஸ்டம்புகள் வலுவாக ஊண்டப்பட்டன ...


ஒரு நாள் போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் சிக்ஸ் ,  போர் என்று விளாசிக்கொண்டிருக்க இந்திய ஹாக்கி குழு விளையாட்டை மேம்படுத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் குளறுபடிகளில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தது ஹாக்கியை மேலும் , மேலும் பலவீனப்படுத்தியது.. தன்ராஜ் பிள்ளைக்கு பிறகு பெரிய வீர்கள் யாரும் இல்லாமல் ஹாக்கி தத்தளித்துக் கொண்டிருக்க கிரிக்கெட்டிலோ  சச்சின் , கங்குலி , டிராவிட் , தோனி என நட்சத்திர வீர்களின் ஜொலிப்பில் ரசிகர்கள் தன்னை மறந்தார்கள்.
சினிமாவோ , விளையாட்டோ தோல்வி அடைவதை ரசிகன் விரும்புவதில்லை , எனவே ஹாக்கியின் தொடர் தோல்விகள் அந்த விளையாட்டை முற்றிலுமாக மறக்கடிக்க செய்தன ... 

இப்படி ஜாம்பவானாக இருந்து வெற்றிகளையும் தாண்டி இந்திய விளையாட்டு துறைக்கே சவால் விடுமளவு விஸ்வரூப வளர்ச்சி பெற்ற பி.சி.சி.ஐ இன்று அடுத்தடுத்து சந்தித்து வரும் சறுக்கல்களை சமாளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல அமைந்திருக்கிறது இன்றைய தோல்வி...

ஐ.பி.எல் லில் கிடைக்கும் கோடிக்கணக்கான பணமும் , புகழும் இளம் கிரிக்கெட் வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு  தேவையான பொறுமையையும் , திறமையையும் சிதைத்து வருவதே இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணம்..இது நன்கு தெரிந்திருந்தும் போட்டிகளின் மூலமும் , விளம்பரங்கள் மூலமும் குவியும் கோடிகள் அனைவரின் வாய்களையும் அடைத்துவிடுகின்றன ... 


இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடியிருந்த மைதானங்கள் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளின் மேல் ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் குறைந்து வருவதையே பறை சாற்றுகின்றன , இதற்கு கூட முக்கிய காரணம் ஐ.பி.எல் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் என்ன  பயன் ? எல்லோரும் பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்க பூனைக்கு யார் மணி கட்டுவார்கள் என்பதை விட ஏன் மணி கட்ட வேண்டும் என்றே நினைக்கிறார்கள் ... 

உலககோப்பை வெற்றியை தொடர்ந்து நடந்த ஒரு டாக் ஷோவில் கவாஸ்கரிடம் ஏன் எல்லோரும் கிரிக்கெட்டின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு வெற்றியை மட்டுமே ரசிகர்கள் விரும்புவார்கள் என்று புன்னகையுடன் பதில் சொன்னார்...இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றால் கவாஸ்கரின் கூற்று உண்மையாவதற்கும் , சச்சின் , தோனி என்று சொல்லி வரும் ரசிகர்களின் உதடுகள் சந்தீப் , மன்ப்ரீத் என்று சொல்வதற்குமுண்டான வாய்ப்புகள் மிக பிரகாசமாகவே உள்ளன ... 

23 February 2012

எ(ஏ)ன்கவுன்டர் ... !?


அடுத்தடுத்த மாதங்களில் பட்டப்பகலில் நடத்தப்பட்ட  வங்கி கொள்ளைகளின் அதிர்ச்சியில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் , இதோ இன்று அதிகாலையில் வேளச்சேரியில் ஒரு வீட்டில் வைத்து ஐந்து கொள்ளைக்காரர்களும் தமிழக காவல்துறையால் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் ...

ஐந்து பேரை ஒரே நேரத்தில் என்கவுன்டர் செய்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை ... சில மணி நேரங்கள் நடந்த போராட்டத்தில் இரண்டு காவல்துறையினரும் காயப்பட்டிருக்கிறார்கள் ... இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை கண்டுபிடித்த காவல்துறையினரை பாராட்டினாலும் அவர்களை உயிருடன் பிடிக்காமல் ஐந்து பேரையும் என்கவுன்டர் முறையில் கொலை செய்தது அதிர்ச்சியையும் , இது தற்செயலாக நடந்ததா ? அல்லது திட்ட்டமிட்டு நடத்தப்பட்டதா ? என்ற சந்தேகத்தையும் ஒருசேர கொடுக்கிறது...

துல்லியமாக துப்பறிந்து ஒரு மாதத்திற்குள் கொள்ளையர்களை கண்டுபிடித்தவர்கள் முனைப்புடன் செயல்பட்டிருந்தால் சிலரையாவது நிச்சயம் உயிருடன் பிடித்திருக்கலாம் ... வங்கி கொள்ளையர்களுக்கே இந்த கதி என்றால் தமிழக காவல்துறையினர் மும்பை இரயில் நிலையத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ இருந்திருந்தால் தூக்கு தண்டனையை கூட நிறைவேற்ற முடியாமல் தீவிரவாதிகளுக்கே  வக்கீலை ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் மத்திய அரசாங்கத்திற்கு பல கோடிகளாவது மிச்சமாகியிருக்கும் !...

தீவிரவாதிகள் மட்டுமல்லாமல் பல லட்சம் கோடிகள் கொள்ளையடித்தவ்ர்களே இந்த நாட்டில் சுதந்திரமாக உலா வரும் போது நடந்திருக்கும் என்கவுன்டர் பெரிய உறுத்தலையே கொடுக்கிறது ... பெருங்குடி வங்கி கொள்ளைக்கு பிறகும் சிசிடிவி பொருத்தாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவே கீழ்கட்டளை வங்கி கொள்ளைக்கு மூல காரணம் ... சென்னை போன்ற பெரு நகரங்களிலேயே பல வங்கி கிளைகளில் சிசிடிவி வசதி இல்லாதது வேதனைக்குரிய விஷயம் ... என்கவுன்டர் அதிர்ச்சி அலைகளை கிளப்பியிருந்தாலும் , இது போன்ற துணிகர செயல்களில் ஈடுபட இனி யாருக்கும் துணிவு வராது ...

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை , அதே நேரத்தில் கொள்ளைக்காரகள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவோ அல்லது அடுத்த மாநிலத்தவராகவோ இருந்திருந்தால் இதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா ? உண்மையிலேயே இறந்தவர்கள் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தானா ? அவர்களாகவே இருந்தாலும் தற்காப்புக்காக முட்டிக்கு கீழே தான் சுட வேண்டும் , அப்படியிருக்க தலையில் குண்டடி பட்டு இறந்திருக்கிறார்களே போன்ற கேள்விகளை மனித உரிமை கழகம் முன் வைத்தால் காவல்துறை என்ன பதில் சொல்லப்போகிறது ?

பிகார் மாநிலத்தின் நிலைப்பாடு என்ன ? ஊடகங்கள் நடந்த சம்பவத்தை பாராட்டப்போகின்றனவா ? அல்லது கண்டிக்கப்போகின்றனவா ? இப்படி நிறைய கேள்விகள் எழுந்தாலும் , பால் , பேருந்து கட்டண விலையுயர்வு , மின் வெட்டு போன்ற பல அதிருப்திகளில் மக்கள் இருந்தாலும் , சட்டம் - ஒழுங்கில் ஒரு பிரச்சனை என்றால் அதை நிலைநாட்டுவதற்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் அ.தி.மு.க ஆட்சி நடவடிக்கை எடுக்கும் என்பதை அம்மா மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நிரூபித்திருக்கிறார் ...
 

19 February 2012

அம்புலி - அரை நிலா ...


ஸ்டீரியோஸ்கோப் 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட்ட முதல் தமிழ் படம், முதல் படமான  " ஓர் இரவு " மூலம் ஓரளவு கவனிக்க வைத்த இயக்குனர்கள் என்ற இரண்டை தவிர படத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமில்லை என்பதால் பெரிதாய் ஏமாற்றவில்லை என்று சொல்லலாம்...

கதை எழுபதுகளில் நடக்கிறது...கல்லூரி மாணவனான  அமுதன் ( அஜய் ) விடுமுறை நாட்களில் தன் காதலி பூங்காவனத்தை ( சனம் ) சந்திப்பதற்கு ஏதுவாக தன் நண்பன் பாரிவேந்தனுடன் ( ஸ்ரீஜித் ) கல்லூரியிலேயே தங்கி விடுகிறான் ... கல்லூரி வாட்ச்மேனாக வேலை பார்க்கும் வேந்தனின் அப்பா வேதகிரி ( தம்பி ராமையா ) விடுத்திருந்த எச்சரிக்கையையும் மீறி ஒரு நாள் தன் காதலியை பார்க்க சோளக்காடு வழியாக செல்லும் அமுதன் அங்கு ஏதொ ஒரு தீய சக்தி தன்னை துரத்துவது போல உணர்கிறான்... 

தன்னை துரத்தியது அம்புலி ( கோபிநாத் ) என்ற கொடிய மிருகம் (மனிதன்) என்பதும் , அம்புலி பூமானந்திபுர கிராமத்து மக்களை கொன்று தின்றதால் யாரும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்வதில்லை என்பதும் அமுதனுக்கு தெரிய வருகிறது ... அம்புலி உண்மையா ? கட்டுக்கதையா ? என்பதை அறியும் ஆவலுடன் அமுதனும் , அவன் நண்பன் வேந்தனும் எடுக்கும் முயற்சிகளை முடிந்தவரை திடுக் திடுக் திரைக்கதையால் சொல்லியிருக்கிறார்கள் இயக்குனர்கள் ( ஹரிஷங்கர், ஹரிஷ் நாராயணன்

                
புதுமுக நடிகர்களில் அஜய் , சனம் இருவரும் கவர்கிறார்கள் ...மிகுந்த தைரியசாலியாக காட்டப்படும் ஸ்ரிஜித்திற்கு அதற்கேற்ற உடல்மொழியோ , முக பாவனைகளோ இல்லை , இவருடைய ஜோடியாக நடித்தவர் பற்றி சொல்வதற்கும் பெரிதாக ஏதுமில்லை... 

பார்த்திபன் சில சீன்கள் வந்தாலும் அலட்டாமல் கச்சிதமாக நடித்திருக்கிறார்... இவர் தான்  அம்புலியோ என சந்தேகப்பட வைத்து பின்னர் அம்புலியின் அண்ணன் செங்கோடன் என வைக்கப்படும் ட்விஸ்டுகள் லாஜிக் மீறல்களாக இருந்தாலும் திரைக்கதையை சுவாரசியப்படுத்த உதவுகின்றன ... வாட்ச்மேனாக  தம்பி ராமையாவும் , கர்ப்பிணி பெண்ணாக ( தொடந்து இதே கதாபாத்திரங்களில் நடிப்பதை தவிர்ப்பது நலம் ) உமா ரியாசும் , நாத்திகவாதியாக ஜெகனும் இயல்பாக பொருந்துகிறார்கள்... 

பின்னணி இசையும் , ஒளிப்பதிவும் திகில் படத்திற்கு உண்டான உணர்வை கொடுக்கின்றன ... நான்கு பேர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும் முதல் பாடலும் , கடைசி பாடலும் மட்டுமே நினைவில் நிற்கின்றன...வசனமே இல்லாத முதல் பத்து நிமிடங்களில் கேமரா  கோணங்களாலும், பின்னணி இசையாலும் நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் இடைவேளை வரை தொய்வில்லாமல் ( சில பாடல்களை தவிர்த்து ) போகிறது...


அம்புலி யார் என்பதை கிராமத்து மக்களின் வாயிலாகவும் , அதே நேரத்தில் மருத்துவ ரீதியாகவும் சொன்ன முறையில் வித்தியாசம் காட்டுகிறார்கள் ... அடுத்து நடக்கவிருப்பதை ஓரளவு யூகிக்க முடிந்தாலும் படத்தை கொண்டு சென்ற விதத்தை பாராட்டலாம் ... " நம்பிக்கையோ , மூட நம்பிக்கையோ நம்ம உசுர காப்பாத்தற எதையும் நாம நம்பித்தான் ஆகணும் " போன்ற சில வசனங்கள் ரசிக்க வைக்கின்றன , ஆனால் ஜெகனை கருப்பு சட்டை போட்டுக்கொண்டு மேடைபேச்சு போல பேசவிட்டதை தவிர்த்திருக்கலாம் ... 

அம்புலியை காட்டாமலேயே திரைக்கதையை எதிர்பார்ப்புடன் நகர்த்தியிருந்தாலும் ஓரளவுக்கு மேல் அது சலிப்பை தருகிறது , அதிலும் அம்புலி வந்த சிறிது நேரத்திலேயே சப்பென்று ஆகி விடுகிறது ... ஊரே சோளக்காட்டுக்குள் செல்ல பயப்படும் போது , ஹீரோயின் மட்டும் க்ளைமாக்ஸ் நெருங்கி விட்டதாலோ என்னவோ ஏதோ பிக்னிக் செல்வது போல அங்கே செல்கிறார் ... 


பார்த்திபன் கதாபாத்திரத்தின் குழப்பங்கள் , அதிலும் அம்புலியை கொல்வதற்காக காட்டுக்குள் தங்கியிருப்பவர் ஏன் இத்தனை நாள் அதை செய்யவில்லை , அம்புலி ஏன் அவரை ஒன்றும் செய்யவில்லை , க்ளைமாக்ஸ்இல் அம்புலியை கொல்ல செல்லும் போது தன்னுடன் ஏன் தேவையில்லாமல் இரண்டு பெண்களையும் அழைத்து செல்ல வேண்டும் - இது போன்ற கேள்விகள் ,

பொதுவாக குழந்தைகளை மனதில் வைத்து தான் 3  டி படம் எடுப்பார்கள் , இப்படத்தில் அது போன்ற சீன்கள் எதுவும் இல்லை , அதே போல சில சீன்களை தவிர மயிர்கூச்செறியும் திகில் காட்சிகளும் நிறைய இல்லை, எனவே வெறும் விளம்பர உக்திக்காக தான் 3 டியில் எடுத்தார்களோ என எண்ண வைக்கும் படியான கதை , இது போன்ற குறைகள் அம்புலியை இருட்டுக்குள் வைக்கின்றன ... 

( பின் குறிப்பு ) படத்தை 3 டி தொழில்நுட்பம் முற்றிலும் அமைந்த திரையரங்குகளில் மட்டும் பார்க்கவும் ...

ஸ்கோர் கார்ட் : 41 

11 February 2012

தோனி நாட் அவுட் - மேட்ச் டிரா ...


தரமான படங்களை தயாரித்து வந்த பிரகாஷ்ராஜ் முதன் முதலாக இயக்கிருக்கும் படம் தோனி ... படத்திற்கு இசைஞானியின் இசை மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது ... இன்றைய சூழலில் படிப்பு பிள்ளைகளுக்கு வரமாக இல்லாமல் சாபமாக மாறிவிட்டதே என ஒரு மிடில் க்ளாஸ் தகப்பன் படும் ஆதங்கமே " தோனி " ...

சுப்ரமணியம் ( பிரகாஷ்ராஜ் ) பத்திர பதிவாளர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருந்து கொண்டே ஊறுகாயும் விற்றுக்கொண்டு தாயில்லாத தன் இரண்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்க்கிறார் ... மகள் காவேரி ( ஸ்ரிதேஜா ) நன்றாக படித்தாலும் மகன் கார்த்திக் ( ஆகாஷ் பூரி ) படிப்பில் கவனம் செலுத்தாமல் கிரிக்கெட் மட்டுமே ஆடிக்கொண்டிருக்கிறான் ... மகனின் மார்க்குகளை காரணம் காட்டி பள்ளி நிர்வாகம் அவனை பள்ளியை விட்டு நீக்க சொல்லவே மகனிடம் கிரிக்கெட்டை தூர போட்டு விட்டு படிக்க சொல்கிறார் பிரகாஷ்ராஜ் ... 

ஒரு கட்டத்தில் படிப்பில் கவனம் செலுத்தாத மகனை தகப்பன் கோபத்தில் அடிக்க அவன் தலையில் அடிபட்டு கோமா ஸ்டேஜுக்கு சென்று விடுகிறான். இதன் பிறகு தன் தவறை உணரும் பிரகாஷ்ராஜ் மகனை கோமாவில் இருந்து மீட்டெடுப்பதோடு , கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மேல் அநியாயத்திற்கு சுமத்தப்படும் சுமையை வெளிச்சம் போட்டு காட்டுவதே கதை ... 

தானே இயக்குனராக இருப்பதால் தன்னிடம் இருந்து அபரிபிதமான நடிப்பை பிரகாஷ்ராஜ் வாங்கியிக்கும் படம் தோனி ...  ராதிகா ஆப்தேவிடம் தன் தவறை உணர்ந்து வருந்தும் போதும் , மகனின் படிப்பிற்காக பள்ளி நிர்வாகத்திடம் கெஞ்சும் போதும் , கூனி குறுகி கடன் வாங்கும் போதும் , மகனை அடித்து விட்டோமே என அழும் போதும் ஒரு மிடில் கிளாஸ் தகப்பனாக நடிக்காமல் வாழ்ந்திருக்கிறார் ... குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அழுது கொண்டே பேசும் காட்சி உருக வைக்கிறது ... சிறந்த நடிகருக்கான மற்றொரு விருது கிடைக்குமென நம்பலாம் ... 

              
மகனாக ஆகாஷும் , மகளாக ஸ்ரிதேஜாவும் நல்ல பொருத்தம் ... அப்பாவுடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஆகாசின் நடிப்பு நன்று ... காலனியில் குடியிருக்கும் நளினியாக வரும் ராதிகா ஆப்தே அழகாக இருப்பதோடு நன்றாகவும் நடித்திருக்கிறார் ... அவர் கால் கேர்ளாக மாறியதன் பின்னணியை எளிமையாக விளக்கிய விதமும் , அந்த காட்சியில் இவரின் நடிப்பும் அருமை ... 

நாசர் , சாம்ஸ் , தலைவாசல் விஜய் , பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் கந்துவட்டி கனி பாயாக நடித்திருக்கும் முரளி ஷர்மா கவனிக்க வைக்கிறார் ... இவருக்கு சமுத்திரக்கனியின் பின்னணி குரலும் பொருத்தமாக இருக்கிறது ... படத்தின் வசனங்கள் நல்ல சார்ப் ... படிப்பை மட்டுமே வைத்து ஒருவனை மதிப்பிடும் அவலத்தை சாடுவதோடு மட்டுமல்லாமல் , விலைவாசி ஏறிக்கொண்டேயிருக்கிறது ஆனால் சம்பளம் ஏறவில்லையே என்ற நடுத்தர வர்க்கத்தினரின் ஆதங்கத்தையும் வசனங்களில் பதிவு செய்திருக்கிறார் த.சே.ஞானவேல் ... 


இசைஞானி இசையில் " வாங்கும் பணத்துக்கும் " , " தாவி தாவி போகும் " பாடல்களும் அதற்கு நா.முத்துகுமாரின் வரிகளும் அருமை ... படம் முழுவதும் வசனங்களால் நிரம்பியிருந்தாலும் தேவைப்படும் இடங்களில் தன் இசையால் முத்திரை பதித்திருக்கிறார் இசைஞானி ... குறிப்பாக ஆஸ்பத்திரியிலிருந்து மகனை வீட்டுக்கு அழைத்து வரும் காட்சியிலும் , ஆபரேஷன் முடிந்து ஆகாஷ் கண் விழிக்கும் கட்சியிலும் பின்னணி இசை அருமை ... 

பள்ளியிலிருந்து மகனின் பொருட்களை எடுக்கும் போது அவன் வாங்கிய பதக்கங்களை பார்த்து உருகும் காட்சியிலும் , ராதிகா ஆப்தே - பிரகாஷ் ராஜ் சமபந்தப்பட்ட காட்சிகளிலும் , தோனி  , சச்சின் போன்றவர்கள் கிரிக்கெட் ஆட தடை செய்ய வேண்டும் என மற்ற பிளாட் காரர்களிடம் புலம்பும் இடத்திலும் நல்ல நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர் பிரகாஷ் ராஜ் ஜொலிக்கிறார் ... 

படத்தின் முக்கிய ஆதாரமே ஆகாஷ் கிரிக்கெட் ஆடுவதில் திறமைசாலி என்பதே , ஆனால் அவரின் திறமையை கோச் , ஸ்கூல் ப்யூன் என்று ஒவ்வொருவராக பாராட்டிக்கொண்டிருக்கிறார்களே தவிர அவர் கிரிக்கெட் ஆடுவதாக ஒரு சீன் கூட இல்லை ... அதிலும்  க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் ஆடும் ஒரே சீனில் கூட ஒரு பயிற்சி பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரனின் உடல்மொழி ஆகாஷிடம் சுத்தமாக இல்லாதது படத்தின் பெரிய குறை ... 


தன் பிள்ளைகளின் திறமையையும் ,ஆசையையும் கருத்தில் கொள்ளாமல்  பள்ளிகளின் முன் தவம் கிடக்கும் பெற்றோர்களின் போக்கை பற்றி கொஞ்சம் கூட சொல்லாமல் எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களும் , பள்ளிகளும் மட்டுமே காரணம் என்பது போல அவர்களை மட்டுமே சாடியிருப்பது ஒருதலைப்பட்சமாக இருக்கிறது ... பள்ளிகள் வியாபாரத்தளங்களாக மாறியிருப்பினும் , குருவாக வணங்க வேண்டிய ஆசிரியரையே கொலை செய்யும் அளவிற்கு இன்றைய மாணவர் சமுதாயம் மாறிப்போனதற்கு படிப்பு பற்றிய பிரஷர் மட்டும் தான் காரணமா ? என்பதை சமூக ரீதியாக ஆராய வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது ... 

இது போன்ற சில குறைகள் ,  மராத்திய படத்தின் ரீமேக் என்பதோடு ஏற்கனவே த்ரீ இடியட்சில் பார்த்த கரு என்ற போதிலும் பிரகாஷ்ராஜ் ஒரு இயக்குனராக தகப்பனின் பார்வையிலிருந்து இதை அழுத்தமாக சொல்லியிருக்கும் விதத்தை சற்றே நாடகத்தனமாக இருந்தாலும் பாராட்டலாம் ...  

ஸ்கோர் கார்ட் - 43 

7 February 2012

விடியல் ... ( நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை )



" டைரக்டர் சார் , உள்ள வாங்க , கூப்புடறாங்க "

ஆபீஸ் பாய் அப்படி அழைத்தவுடன் வெங்கட்டிற்கு காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல் இருந்தது ... இந்த ஒற்றை வார்த்தைக்காக பதிமூன்று வருடங்களை தொலைத்தது அவன் கண்களிலும் , முடிகள் இல்லாத முன் நெற்றியிலும் நன்றாகவே தெரிந்தது ... 

சினிமாவில் வருவது போல சென்னைக்கு வந்தவுடன் ஒரே பாடலில் பெரிய இயக்குனராகி விடுவோம் என்று வெங்கட்  கனவு காணவில்லை தான் , இருந்தாலும் கடந்து வந்த பாதை இவ்வளவு கடுமையாக இருக்கும் என்றும் கொஞ்சமும் நினைக்கவில்லை ... நிச்சயமில்லாத வாழ்க்கை , நிரந்தரமில்லாத வருமானம் , நிம்மதி தொலைந்த இரவுகள் என ஒவ்வொரு நாட்களுமே அவனுக்கு ஒரு யுகமாக கடந்தன ... 

கூட படித்த நண்பர்களெல்லாம் காதல் , கல்யாணம் என்று செட்டிலாகி விட ஒரு நாள் நாமும் இயக்குனராகி விடுவோம் என்ற நம்பிக்கை மட்டுமே அவனை  உந்து சக்தியாக இயக்கிக்கொண்டிருந்தது ... பட வேளைகளில் ஈடுபட்டிருக்கும் போது பொழுதுகள் இயந்திரத்தனமாக கழியும் ... முதலில் பயமுறுத்திய தனிமையும் போக போக மிகவும் பழகி விட்டது , ஆனால் எங்கோ எதிர்பாரா விதமாக சொந்தக்காரர்களையோ , பழைய நண்பர்களையோ சந்திக்க நேரும் போது தான் அவனுக்கு பெரும் சங்கடமாக இருக்கும் ... 

ஒன்று , அவனுடைய பயணத்தை புரிந்து கொள்ளாமல் மாத சம்பளத்தில் செட்டிலாகி விட்ட அவன் வயதை ஒத்த மற்றவர்களை ஒப்பிட்டு பேசி வெறுப்பேற்றுவார்கள் , இல்லை சினிமா பற்றி எல்லாம் தெரிந்தது போல அறிவுரை செய்து நேரத்தை வீணடிப்பார்கள் , இதனால் வெங்கட் யாரையும் சந்திப்பதையே தவிர்த்து வந்தான் ... அவர்கள் குறிப்பிடும் மாத சம்பளக்காரர்கள் மனதுக்குள் சினிமா ஆசையை முற்றிலும் புதைக்க முடியாமல் புலம்புவதை யாரரிவார்கள் ... 

ஊரில் விவசாயத்தை அப்பாவும் , தம்பியும் கவனித்து வந்ததால் அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இல்லையென்றாலும் , அவர்களை தொந்தரவு செய்ய மனமில்லாததால் முடிந்த அளவு வாயை கட்டி , வயித்தை கட்டி வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருந்தான் வெங்கட் ...

இதோ கனவு நெனவாகி அவன் சொன்ன கதை தயாரிப்பாளருக்கு மிகவும் பிடித்து போய் , படத்திற்கான டிஸ்கசனில்  இருக்கும் போது தான் , தம்பியிடமிருந்து அப்பா உடல் நிலை மோசமாகிவிட்டதென சொல்லி அழைப்பு வந்தது ... இந்த விசயத்தை நேரடியாக சொல்லி விட்டு ஊருக்கு சென்று வரவே வெங்கட் வந்திருந்தான் ...

" வாங்க வெங்கட் உட்காருங்க ,  டிஸ்கசன்லாம் எப்படி போயிட்டு இருக்கு?"

" நல்லா போயிட்டு இருக்கு சார் "

 " கதைல கேன்சர் வந்து ஹீரோ சாகறதா க்ளைமாக்ஸ் வச்சீங்க பாருங்க , அது எல்லாரையும் ரொம்பவே பாதிச்சிருச்சு , அதுக்காகவே படம் நிச்சயம் ஜெயிக்கும் "

" ம் ம் சார் "

 " என்ன வெங்கட் உங்க முகமே வாடியிருக்கு , ஏதாவது பிரச்சனையா ? "

 " ஆமா சார் , அப்பாவுக்கு உடம்பு ரொம்ப சரியில்லைன்னு தம்பிட்ட இருந்து போன்  வந்துச்சு , அதான் ஊருக்கு  போகலாம்னு  "

" என்ன வெங்கட் யோசிக்கிறீங்க , உடனே போயிட்டு வாங்க , பணம் ஏதாவது வேணுமா ? "

" அதெல்லாம் வேணாம் , ரொம்ப நன்றி சார் , நான் வரேன் "

 " ஒ,கே, அவசரப்படாம பொறுமையா இருந்து பாத்துட்டு வாங்க "

அவரிடம் விடைபெற்று விட்டு வேகமாக வெளியேறினான் வெங்கட்...

தன் சினிமா ஆசையை சொன்னவுடனேயே கோபப்படாமல் , எதிர்காலத்தை பற்றி பேசி பயமுறுத்தாமல் அவன் ஆசைக்கேற்ப செய்யும் படி அனுப்பி வைத்த அப்பாவை நினைக்கும் போதே வெங்கட் கண்களில் கண்ணீர் சுரந்தது...காடு , மேடு என்று குடும்பத்துக்காகவே சுற்றி தன்னை மறந்த ஒரு ஜீவன் ... இத்தனை வயதாகியும் இன்று வரை உடன் பிறந்த தங்கைகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டிருக்கும் நல்ல மனிதர் ...

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அம்மாவின் அழுகையுடன்  கூடிய விசாரிப்புகளுக்கு பதில் சொல்லி விட்டு தம்பியை தனியாக தோட்டத்திற்கு அழைத்து சென்றான் வெங்கட் ...

" என்ன ஆச்சுடா ? போன தடவ வந்த போது கூட நல்லா தான இருந்தாரு "

" இல்லன்னே , முதல்ல கழுத்துல ஒரு கட்டி மாதிரி வந்துச்சு , அப்பாவும் அத பெரிசு படுத்தாம , ரொம்ப வலிக்கும் போது மட்டும் மாத்திர போட்டுக்குட்டு விட்டுட்டாரு "

" என்னடா இது ? நீயாவது டாக்டர்ட்ட கூட்டிக்கிட்டு போனியா ? "

" போனேன்னே , அவங்க ஏதேதோ சொல்றாங்க "

 " என்னடா சொல்றாங்க ? "

 " அப்பாவுக்கு கேன்சராம்னே , உடனே ஆஸ்பத்திரியில சேக்கணுமா , எனக்கு ரொம்ப பயமா இருக்குன்னே "

தம்பிக்கு முன்னாள் அழுதால் அவன் மேலும் உடைந்து  விடுவான் என்பதால் அவனை தன் தோள்களில் சாய்த்து ஆறுதல் சொன்னான் வெங்கட் ...

உள்ளூர் டாக்டரின் அறிவுரையின் படி பெரிய ஆஸ்பத்தரியில்  கேன்சருக்கு உண்டான தனி பிரிவில் அப்பாவை சேர்த்து விட்டு அங்கேயே தங்கினான் வெங்கட் ... விவசாயத்தை பாதியில் விடமுடியாததாலும் , மற்ற ஏற்பாடுகளை செய்யவும் அம்மாவும் , தம்பியும் கிராமத்திலேயே இருந்தார்கள் ...

கட்டுமஸ்தான் போன்ற அப்பாவின் உடல் வாகு நன்கு இளைத்திருந்தது  , கொஞ்சம் நிறம் கூட மாறியிருப்பது போல உணர்ந்தான் வெங்கட் ... ஆஸ்பத்திரியில் பலதரப்பட்ட மனிதர்களை கேன்சர் என்ற வியாதி ஆக்ரமித்திருந்தது ...வந்த சில நாட்களிலேயே நோயாளிகளும் , உறவினர்களும் வெங்கட்டிற்கு நன்றாக பரிச்சியமானார்கள்  , அப்படி தான் சுதாகரும் அவனுக்கு நன்றாக நட்பானார். அவரை முதலில் பார்த்த போது யாருக்கோ உதவி செய்ய வந்தவர் என்று தான் நினைத்திருந்தான் , பிறகு அவரும் ஒரு கேன்சர் நோயாளி என தெரிய வந்த போது அவனால் நம்ப முடியவில்லை , அந்த அளவுக்கு அவர் உற்சாகமாக இருந்தார் ...

தமிழ் சினிமா என்ற வட்டத்துக்குள்ளேயே இத்தனை காலம் கழித்தவனுக்கு அரசியல் , வணிகம் , இலக்கியம் , உலக சினிமா இதை பற்றியெல்லாம் அவர் தெளிவாக பேசும் போது மிகவும் சுவாரசியமாக இருந்தது ... அவரிடம் இருந்து வாங்கிய உலக மொழிபெயர்ப்பு நாவலை திரும்ப கொடுக்க போகும் போது அவர் அறையிலிருந்த அசாதாரண கூட்டம் அவனுக்கு ஏதோ அபாயத்தை உணர்த்தியது ...

சுதாகர் உயிருடன் இல்லை என்பதை அவனால் நம்ப முடியவில்லை , இரண்டு மணி நேரத்திற்கு முன் தன்னுடன் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தவர் இன்று உயிருடன் இல்லை என நினைக்கும் போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது ...

சுதாகர் சொன்ன வார்த்தைகள் அவன் முன் நிழலாடின ,

" சார் , எல்லாரும் ஒரு நாள் சாக தான் போறாங்க , என்ன வியாதி வந்தா கொஞ்சம் அவஸ்தை அவ்வளவு தான் ... கொஞ்சம் முன் கூட்டியே நான் டெஸ்டெல்லாம் பண்ணி கண்டுபிடிச்சிருந்தா கட்டுப்படுத்தியிருக்கலாம் , ஆனா அதுக்காக நான் சோர்ந்து போகல   , என்னால முடிஞ்ச வரைக்கும்  கேன்சர் பத்தின விழிப்புணர்வ பரப்பிக்கிட்டு தான் வரேன் , நீங்களும் பாசிட்டிவாவே இருங்க , அப்பாவ ஜாக்கிரதையா பாத்துக்கிடுங்க " ..

அப்பாவின் நிலைமைக்காக டாக்டர்களையும் , கடவுளையும் சாடிக்கொண்டிருந்த வெங்கட்டிற்கு சுதாகரின் வார்த்தைகள் யதார்த்தத்தை உணர்த்தின ... அப்படிப்பட்டவர் இன்று உயிருடன் இல்லையென்பதும் நிதர்சனம் என நன்றாகவே உணர்ந்திருந்தான் வெங்கட் ...

அப்பாவுக்கு மிகவும் வயதாகிவிட்டதால் ஆபரேஷன் சாத்தியமில்லை என டாக்டர்கள் சொல்லவே , இனி வரும் நாட்களையும் அவருடனே கழிக்கலாமென ஊரிலேயே தங்கிவிட்ட வெங்கட் , சில மாதங்கள் கழித்து அப்பாவும் இறந்துவிடவே , அவரின் நினைவுகளுடனும் , அம்மாவின் ஆசீர்வாதத்துடனும்  சென்னைக்கு திரும்பினான் ...

" விசயத்தை கேள்விப்பட்டவுடனேயே ரொம்ப கஷ்டம் ஆயிருச்சு வெங்கட் , உடனே புறப்பட்டு வரணும்னு நினச்சேன் , ஆனா ஒரே வேல தப்பா எடுத்துக்காதீங்க "

 " பரவாயில்ல சார் , அதெல்லாம் ஒண்ணுமில்ல "

" எப்படி வெங்கட் வேலைய ஆரம்பிச்சுரலாமா  ? "

 " ஒ.கே சார் , ஆனா கதையில் ஒரு சின்ன சேஞ்சு ,  க்ளைமாக்ஸ்ல கேன்சர் வந்து ஹீரோ சாகல , எப்படியும் குணப்படுத்திடலாம்னு நம்பிக்கையோட ஹீரோயினும் அவன்  கூட சேர்ந்துடறாங்க "

" என்ன வெங்கட் , இதெல்லாம் செட்டாவாது  , நான் எத்தனை வருசமா சினிமாவுல இருக்கேன் , அவன் செத்தா தான்யா  சிம்பதி வரும் , படம் ஓடும் "

 " படம் ஒடனும்றதுக்காக  ஒரு நெகடிவ்வான விசயத்த நான் பரப்ப விரும்பல சார் "

" என்னைய்யா  பொழைக்க தெரியாத ஆளா இருக்க ! , சினிமா மட்டும் எடுக்கணும் , அனாவசிய சிந்தனையெல்லாம் கூடாது "

" சினிமாவுல இருக்கறவங்களுக்கும் சமூக பொறுப்புணர்வு இருக்கணும்னு  நம்பறவன்  சார் நான் "

" இப்ப முடிவா என்ன தான் சொல்றீங்க ? "

 " க்ளைமாக்ஸ்ல பாசிடிவ் என்ட் வைக்கிறேன் சார் "

" உங்கள ஒ.கே பண்ணதுக்கு காரணமே அந்த க்ளைமாக்ஸ் தான் அத மாத்தறதா இருந்தா எனக்கு நீங்களே வேணாம் "

" பரவாயில்ல சார், ஒரு நெகடிவ்வான விசயத்த சொல்லி என் வாழ்க்கைய நான் ஆரம்பிக்க விரும்பல , கதைய மாத்தி நிச்சயம் நான் டைரக்ட் பண்ணுவேன் "

 " அது அவ்வளவு சுலபமில்ல ,சினிமாவுல வாய்ப்பு கிடைக்கறது எவ்வளவு  கஷ்டம்னு உங்களுக்கு நல்லாவே தெரியும் , இந்த வாய்ப்புக்காக எவ்வளவு நடையா நடந்தீங்கன்னு மறந்துட்டீங்களா ? "

" நான் எதையுமே மறக்கல சார் , ரொம்ப நன்றி , வரேன் "

சொல்லி விட்டு எழுந்தவனை தயாரிப்பாளர் வேற்றுகிரகவாசியைப் பார்ப்பது போல பாத்தாலும் , அதைப் பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் திரும்பி நடந்தான் வெங்கட் ... 

4 February 2012

மெரினா - கால் தொடாத அலைகள் ...


முதல் படத்திலேயே விருதையும் , வசூலையும் பெற்று அனைவரையும் கவனிக்க வைத்த இயக்குனர்  பாண்டிராஜ் , தன் சொந்த தயாரிப்பான "மெரினா" வில் பல அறிமுக பசங்களோடு கை கோர்த்து களம் இறங்கியிருக்கிறார் ... பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி அமரர் ஊர்தியில் சென்னைக்கு வந்து சேரும் அம்பிகாபதி ( பக்கடா பாண்டி ) மெரினாவில் செட்டில் ஆகிறான் ... அங்கு அவனைப்போலவே பல சிறுவர்கள் சுண்டல் , சங்கு என பலவற்றை விற்று வயிற்றை கழுவிக்கொண்டிருக்கிறார்கள் ... 

அவனுக்கு முதலில் கைலாசம் நண்பனாக , பிறகு மற்ற சிறுவர்களும் சண்டையை விடுத்து சமாதானமாகி அவனுடன் நண்பர்களாகிறார்கள் ... இவர்களை தவிர  மெரினாவிலேயே வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார தாத்தா , குதிரை ஓட்டுபவன் , பாட்டு பாடுபவர் , ஆங்கிலம் பேசும் பைத்தியக்காரன் , சிறுவர்களுக்கு ஆதரவு அளிக்கும் போஸ்ட் மேன் , மெரினாவிற்கு வரும் காதல் ஜோடிகளான நாதன் (சிவகார்த்திகேயன் ) - சொப்பன சுந்தரி ( ஓவியா ) இவர்களை சுற்றி கதை நகர்கிறது ... 

படத்தின் ஹீரோ பக்கடா பாண்டி தான் ... மிரள மிரள சென்னையை பார்க்கும் போதும் , பிச்சைக்கார தாத்தாவிடம் உறவு கொண்டாடும் போதும் , நண்பனை இழந்து வாடும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறான் ... சின்ன பசங்களை வைத்து படமெடுப்பது பாண்டிராஜுக்கு கை வந்த கலையாகிவிட்டது போல , எல்லா சிறுவர்களும் இயல்பாக நடித்திருக்கிறார்கள் ... 


பல கேரக்டர்கள் படத்தில் இருந்தாலும் மருமகள் தொல்லையால் வீட்டிலிருந்து வெளியே வந்து பிச்சைஎடுக்கும் தாத்தா மட்டுமே மனதில் நிற்கிறார் ... பைத்தியக்காரனாக வருபவர் ஆங்காங்கே  டைமிங்  டயலாக்குளால் சிரிக்க வைத்தாலும் அவர் கேரக்டரில் கொஞ்சம் செயற்கைத்தனமே மேலோங்கி நிற்கிறது ... 

மெரினாவில் குடியிருக்காவிட்டாலும் படத்தை தொய்வில்லாமல் கொண்டு போவதற்கு அங்கு வரும் காதல் ஜோடிகளான சிவகார்த்திகேயனும் , ஓவியாவும் பெரிதும் உதவியிருக்கிறார்கள் ... இவர்களுடைய டைம் பாசிங் காதலை டைம் போவது தெரியாமல் சுவை பட சொல்லியிருக்கிறார் இயக்குனர் ... 

அடுத்த வீட்டு பையன் போல சிவகார்த்திகேயன் இயல்பாக இருந்தாலும் இவர் பேசும் போது ஏதோ காம்பெயரிங் செய்வது போலவே இருக்கிறது ... களவானிக்கு பிறகு காணாமல் போன ஓவியா இதில் கவனிக்க வைக்கிறார். சிவகார்த்திகேயனின் நண்பனாக வருபவரும் நன்றாக நடித்திருக்கிறார் ... 

பல நடிகர்களோடு சேர்த்து இசையமைப்பாளர் , எடிட்டர் , ஒளிப்பதிவாளர் என பலரை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ... " வாழ வைக்கும் சென்னை " பாடலும் " நண்பன் " பாடலும் முனு முணுக்க வைக்கின்றன ... பின்னணி இசை ஏற்கனவே கேட்டது போல இருக்கிறது ... தன் ஒளிப்பதிவால் மெரீனாவையே சுத்தமாக காட்டியிருக்கிறார் விஜய் .5 டி  கேமராவில் படம்பிடித்த  விதம் அருமை ... 


மெரினாவை மட்டுமே வைத்துக்கொண்டு முழு படத்தையும் நகர்த்திய விதம் , நகைச்சுவை ததும்பும் வசனங்கள், சிறுவர்களுக்கு கல்வியின் அவசியத்தை உணர்த்தும் கதை , ஆதரவற்ற சிறுவர்களின் வாழ்க்கை முறையை கண்முன் நிறுத்திய பாங்கு , தாத்தா , போஸ்ட்மேன், குதிரைக்காரன் இவர்களுக்கும் , சிறுவர்களுக்கும் இடையேயான நட்பு , காதல் என்ற பெயரில் சமுத்திரத்தை அசுத்தம் செய்யும் ( கள்ள ) காதல் ஜோடிகள் பற்றி சொன்ன விதம் இவையெல்லாம் மெரினாவின் அழகை ரசிக்க வைக்கின்றன ... 

சிறுவர்கள் பற்றிய பின்னணியை முழுவதும் சொல்லாமல் பிக்னிக் வந்தது போல கிரிக்கெட் , ஓட்டப்பந்தயம் , குதிரையேற்றம் என ஒவ்வொன்றாக காட்டிக்கொண்டிருப்பது , இவ்வளவு கேரக்டர்கள் இருந்தும் ஸ்லம் டாக் மில்லினியர் , சலாம் பாம்பே போல பெரிய அழுத்தத்தை ஏற்படுத்த தவறியது , என்ன தான் வெளியூரில் இருந்து வந்தவர்கள் சென்னையில் நிறைய பேர் இருந்தாலும் மதுரைக்கு மெரினா வந்து விட்டதா என நினைக்குமளவுக்கு எல்லோரும் ஓவராக மதுரை பாஷை பேசி நேட்டிவிட்டியை கெடுத்தது , ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் படம் சுழன்று கொண்டிருப்பது,
( உதாரணத்திற்கு ஒரு சீனில் ஹெல்ப் லைன் மூலம் ஸ்கூலில் சேர்ந்து படிக்கும் கிரைண்டர் எனும் சிறுவன் அடுத்த சீனில் சிறுவர்களுடன் பீச்சில் இருப்பது ) இவையெல்லாம் மெரினாவின் அழகை கெடுக்கின்றன ... 

ஆதரவின்றி கடலோரம் வாழும் சிறார்களை பற்றிய பிரச்சனைகள் கடல் அளவு இருக்க அதை முழுவதும் இறங்கி அலசாமல் பள்ளி சுற்றுலா போல சிலவற்றை மட்டும் மேம்போக்காக சொல்லியிருப்பதால் கடற்கரை சென்றும் காலை நனைக்காமல் திரும்ப வந்தது போல ஒரு குறை ... இருப்பினும், சினிமாத்தனமான எந்த ஒரு காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் இது போன்ற படத்தை எடுத்ததற்காக இயக்குனர் பாண்டிராஜை எவ்வளவு பாராட்டினாலும் தவறில்லை ... 

ஸ்கோர் கார்ட் - 42 

3 February 2012

அப்பாடா ஜெயிச்சாச்சு ...!


ரு வழியாக இன்று இந்திய கிரிக்கெட் அணி நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் தன் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது...அசால்டாக இருந்திருக்க வேண்டிய வெற்றி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒரு ட்வென்டி - 20  உட்பட ஐந்து போட்டிகளில் மண்ணைக் கவ்விய இந்திய அணியால் அப்பாடா என்று சொல்லும்படியாகி விட்டது ... 

முதல் ட்வென்டி - 20  யில் 131 ரன்கள் மட்டுமே அடித்து 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை அதே 131 ரன்களுக்கு சுருட்டியது குறிப்பிடத்தக்கது ... ஸ்பின்னர் ராகுல் மற்றும் பிரவீன் குமார் நன்றாக பௌலிங் போட்டிருந்தாலும் இளம் வீரர்களின் துடிப்பான பீல்டிங்கால் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் அவுட் ஆனதே ஆரம்பத்தில் அடித்து ஆடிய அந்த அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த காரணமாய் அமைந்தது ... 


முதல் ஆட்டத்தில் அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் வேட் இந்த மேட்சில் அதிகபட்சமாக 36  ரன்கள் அடித்தார் ... பின்னர் ஆடத்தொடங்கிய இந்திய அணிக்கு கம்பீர் மற்றும் சேவாக் நல்ல துவக்கத்தை கொடுத்தனர் ... ஸ்ட்ரைட்டில் சிக்ஸ் அடித்த சேவாக் பின் அதை தக்க வைத்துக்கொள்ளாமல் அவுட் ஆனாலும் கம்பீர் கடைசி வரை நின்று அரை சதம் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார் .... 

கோலியும் தன் பங்குக்கு கால் சதத்தை பூர்த்தி செய்து அவுட் ஆனார் ... சென்ற ட்வென்டி - 20  யில் தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்திருந்த கேப்டன் தோனி இந்த முறை அவுட்டாகாமல் கம்பிருக்கு உறுதுணையாக நின்றார் ... 

வரிசையான தோல்விகளால் துவண்டு போயிருந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்த வெற்றி ஒரு சின்ன ஆறுதலை கொடுத்திருப்பதோடு அடுத்து பிப்ரவரி ஐந்தில் தொடங்கப்போகும் இந்திய - ஆஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கும்  நல்ல முன்னோட்டமாக அமைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது ...
Related Posts Plugin for WordPress, Blogger...