31 March 2012

3 - ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி ...

                          
சூப்பர் ஸ்டார் மகளின் இயக்கத்தில் அவரின் மருமகன் ஹீரோ - சூப்பர் ஆக்டரின் மகள் ஹீரோயின் என்ற எதிர்பார்ப்பான காம்பினேஷன் , தனுஷை ஒரே நாளில் ஒபாமாவாக்கிய " வை திஸ் கொலவெறி டி " பாடல் , அதை அருமையாக மார்கெட்டிங் செய்த விதம் , அட்ராக்டிவான ஸ்டில்கள் இவையெல்லாம் படத்திற்கு பெரிய ஓபனிங் கொடுத்திருந்தாலும் ,  ஐஸ்வர்யா தனுஷை  பார்த்து  " வை திஸ் கொலவெறி " என்று கேட்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது படம் ...

முதல் சீனிலேயே தனுஷ் இறந்து கிடக்க அவரின் மீதான ஸ்ருதியின் நினைவலைகளில் தொடங்குகிறது கதை ... பணக்கார தொழிலதிபரின் மகன் ராம் ( தனுஷ் ) , தன் மகளை மேற்படிப்புக்கு அமெரிக்கா அனுப்ப வேண்டுமென்ற முயற்சியில் இருக்கும் ஒரு தாயின் மகள் ஜனனி ( ஸ்ருதி ) இருவருமே +2 வில் இருந்து காதலித்து , பெற்றோர்களின் ஆதரவும் இல்லாமல் , பெரிய எதிர்ப்புமில்லாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள்... இரண்டாவது பாதியில் தனுஷ் பயோ போலர் டிஸார்டர் என்ற மனவியாதியில் அவதிப்பட்டதும் , அதன் முடிவில் என்ன ஆனார் என்பதும் நண்பன் செந்தில்
( சுந்தர் ) பாயிண்ட் ஆப் வியுவில் இருந்து விளக்கப்படுகிறது ...

தனுஷ் பள்ளி மாணவன் , குடும்பஸ்தன் என்ற இரு வேடங்களிலும் நல்ல வித்தியாசம் காட்டியிருக்கிறார் ... குறிப்பாக கத்தியை கையில் வைத்துக்கொண்டு அழும் காட்சி அற்புதம் ... அதே சமயம் நன்றாக நடிக்கிறார் என்பதற்காக ஒரே மாதிரியான மாதிரியான பாத்திர தேர்வுக்குள் சிக்கிக்கொள்கிறார் என்றே சொல்ல வேண்டும் ... இதே தவறை தான் தனுஷ் தன்னை ஆக்சன் ஹீரோவாக முன்னிறுத்த சுள்ளான், புதுகோட்டையிலிருந்து சரவணன் போன்ற படங்களில் நடித்த போதும் செய்தார் ... ஷோ சேஞ்ச் த கியர் மாமு !

உண்மையிலேயே அவர் கொடுத்து வைத்தவர் ... அவர் பெற்ற தேசிய விருதுக்காகவோ , சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்பதற்காகவோ இதை சொல்லவில்லை , அப்பா - அண்ணனை தொடர்ந்து மனைவியும் அழகான ஹீரோயினுடன் நெருக்கமாக நடிக்க வைத்திருக்கும் கொடுப்பினையை தான் சொல்கிறேன் ...


ஸ்ருதிக்கு நடிப்பு இயற்கையாகவே வருகிறது ... பள்ளி பருவங்களில் தனுஷை விட நம்மை அதிகம் கவர்வது இவரே ... ஐ லவ் யு சொல்லும் காட்சிகளில் க்யுட் ... நிறைய இடங்களில் இவரை அழ விட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம் ... தனுஷின் பள்ளி தோழனாக வரும் சிவகார்த்திகேயன் அடிக்கும் கமன்ட்ஷ்களுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் ... மற்றொரு நண்பன் சுந்தரை பள்ளி மாணவனாக ஏற்க முடியாவிட்டாலும் இரண்டாவது பாதியில் நடிப்பை பாராட்டலாம் ...

பிரபு , பானுப்ரியா , ரோகினி இவர்களெல்லாம் சரியான பாத்திர தேர்வுகள் ... இளையராஜா , ரஹ்மானுக்கு பிறகு முதல் படத்திலேயே இவ்வளவு புகழ் அடைந்தது அனிருத் ஆகத்தான் இருக்க முடியும் ... எல்லா பாடல்களுமே அருமை , ஆனால் பின்னணி இசையில் கவனம் தேவை ... " கொலவெறி " பாடல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு காட்சியமைப்பில் இல்லை.. ஒளிப்பதிவு பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை ... எடிட்டர் இரவில் வேலை பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன் , அவர் தூங்கி வழிந்திருப்பது குழப்பமான எடிட்டிங்கில் நன்றாகவே தெரிகிறது ... எக்கச்சக்க ஜம்ப் ...

           
இளமை துள்ளலான காதல் கதையுடன் , சுஜாதாவின் " " நாவலில் வருவது போல ஹளுஷினேஷனால் பாதிக்கப்பட்ட ஹீரோவின் கதையையும் கலந்து கட்டி கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ... தனுஷ் - ஸ்ருதி இடையேயான பள்ளி பருவ காதல் காட்சிகள் நம்மை படத்தோடு ஒன்ற வைத்தாலும் , பிற்பாதியில் சொல்லப்படும் தனுஷின் மனோவியாதி  நம் மனதை கவரவில்லை ...

எந்நேரமும் பென்சிலால் எதையாவது எழுதிக்கொண்டிருந்தாலும் அழகான பிளாட் வாங்கி கொடுக்க மறக்காத அப்பா , கணவனின் நண்பன் இருக்கிறான் என்ற விவஸ்தையே இல்லாமல் கணவன் மடியில் உட்காரும் அன்பு மனைவி இவர்களிடம் கூட தன் வியாதியை தனுஷ் சொல்லாமல் விடுவது , அவரின்  மனோவியாதிக்கான எந்த பின்னணியையும் விவரிக்காதது , உற்றார் - உறவினர் முன்னிலையில் பல சடங்கு , சம்பிரதாயங்களுடன் கட்டப்படும் தாலியை குடிகார கும்பலுடன் தனுஷ் பப்பில் வைத்து கட்டுவது , ( ஐஸ்வர்யா தாலி கட்டும் சடங்கையே தவிர்த்திருந்தால் கூட முற்போக்காக சிந்தித்திருக்கிறார் என்று சந்தோஷப்பட்டிருக்கலாம் , அதை விடுத்து இதை போன்ற  சீன் வைத்தது கழிவறையில் வைத்து விருந்து சாப்பிடுவது போல இருக்கிறது ) ,

" மயக்கம் என்ன " மயக்கத்தில் காட்சிகள் நகர்வது , நிறைய இடங்களில் பின்னணி இசையே இல்லாமல் ஏதோ டாக்குமென்டரி பார்ப்பது போன்ற உணர்வை கொடுப்பது , பெற்றோர்கள் எதிலுமே தலையிடாமல் தேமே என்றிருப்பது இவையெல்லாம் த்ரீயை பார்க்கும் ரசிகர்களுக்கு  கொலவெறியை கொடுக்கின்றன ... ஐஸ்வர்யா தனுஷ் பாடல்களுக்கும் , அதை பிரபலப்படுத்தியதற்க்கும் கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் கதைக்கும் கொடுத்திருக்கலாம் ... சாரி ஐஸ் பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம் ...

ஸ்கோர் கார்ட் : 38 


இதே விமர்சனத்தை ஆங்கிலத்தில் படிக்க http://vangablogalam.blogspot.in/2012/03/3-film-review-aishwarya-danushs.html

3 FILM REVIEW - Aishwarya Danush's Kolaveri ...

28 March 2012

கர்ணன் , நடிப்புலக கர்ணன் - காலத்தை வென்றவர்கள் ...!


பொதுவாக ஒரு படம் வெளியாகி ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விட்டால் அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்வதை நான் தவிர்ப்பது வழக்கம் ... ஆனால்  38  ஆண்டுகளுக்கு முன் பி.ஆர்.பந்துலு - சிவாஜிகணேசன் கூட்டணியில் வெளியாகி , மீண்டும் மறு வெளியீடு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கும் படத்தை பற்றி எழுதாமல் விட்டால் நான் பதிவுலக பாவியாகி விடுவேனோ என்ற பயத்தால் கர்ணன் படம் , சிவாஜி இவர்களை பற்றிய எனது அனுபவங்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன் ...

என் அப்பாவும் , பெரிய அண்ணனும் சிவாஜியின் தீவிர ரசிகர்கள் , அதிலும் என் அப்பா மதுரையில் சிவாஜி படத்தை பார்க்க முடியாமல் போனால் கூட சைக்கிளை எடுத்துக்கொண்டு பல நூறு கிலோமீட்டர்கள் போய் பக்கத்து ஊரிலாவது படத்தை முதல் நாளிலேயே பார்த்து விடுமளவிற்கு சிவாஜியின் தீவிர வெறியர் ... சிறு வயதிலிருந்தே இவர்களை பார்த்து வளர்ந்த எனக்கு சிவாஜியின் பாதிப்பு இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை ...

சிவாஜியின் நடை , உடை ,பேச்சு என எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றும் எத்தனையோ ரசிகர்களை நான் சிறு வயதில் சந்தித்து வியந்திருக்கிறேன் ... பிறகு கொஞ்சம் , கொஞ்சமாக கமல் என்னை ஆக்ரமிக்க தொடங்கியும் என்னால் சிவாஜியின் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை ... ரஜினி , கமல் இருவரும் கோலோச்சிய பிறகும் கூட சிவாஜி மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த " திரிசூலம் " படம் 200  நாட்களுக்கு மேல் ஓடியது ...


கர்ணன் படத்தை சிறு வயதில் நான் எப்போது பார்த்தேன் என்று எனக்கு நினைவில்லை ,ஆனால் " உள்ளத்துள் நல்ல உள்ளம்"  என்ற பாடலும் , நயவஞ்சகமாய் வீழ்த்தப்பட்டு அம்புகள் தாங்கிய நெஞ்சுடன் தேர் சக்கரத்தில் சாய்ந்து கிடக்கும் கர்ணனின் உடலும் என் நினைவுகளிலிருந்து என்றுமே அகலாதவை ...

பாடல்கள் எல்லாம் அருமையாக இருந்தாலும் பத்துக்கு மேல் வந்து படத்தின் வேகத்தை குறைப்பதென்னவோ உண்மை ... எல்லா சிறந்த படங்களிலும் இருப்பது போல இப்படத்திலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன , ஆனால் அவையெல்லாம் சூரியனை கண்ட இருளை போல சிவாஜிக்கு முன் மறைந்து விடுகின்றன ...
 

படம் ஆரம்பித்ததிலிருந்தே சிவாஜியின் கர்ஜனை தொடங்கி விடுகிறது ... வில்வித்தை போட்டி நடக்கும் போது அர்ஜுனனுக்கு எதிராக சவால் விடுப்பது , பிறகு குலத்தை காரணம் காட்டி தன்னை அனைவரும் இழிவு படுத்தும் போது கூனி குறுகி நிற்பது , ஆட்ட மும்முரத்தில் நண்பனின் மனைவியை இடுப்பில் தட்டி நிறுத்திவிட்டு தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வில் துடிப்பது , தான் உதாசீனப்படுத்தப்படுவது தெரிந்ததும் பீஷ்மருடன் நேருக்கு நேர் மோதுவது , கோபத்தில் மாமனாருடன் உறுமுவது , தன் இழி நிலைக்கு காரணமான தாயை கொலை செய்ய வேண்டும் என்று கர்ஜித்து விட்டு பின் தாய் யாரென்பதை அறிந்ததும் குழந்தை போல அழுவது என சிவாஜியின் நடிப்பில் அரங்கமே மெஷ்மெரிசம் செய்யப்பட்ட காட்சிகள் ஏராளம் ...

சிவாஜியின் நடிப்புக்கு ஈடு கொடுத்து தன் இயல்பான நடிப்பால் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டவர் சாவித்திரி ... இந்த இரண்டு ஜாம்பவான்களிடம் அகப்பட்டுக் கொண்டு என்ன செய்வதென்று புரியாதது போல பாவம் விழிக்கிறார் அசோகன் ... சிவாஜிக்கு அடுத்த  படியாக அதிக கைத்தட்டல் பெறுபவர் கிருஷ்ணராக நடித்த என்.டி.ஆர் , சொல்லப்போனால் இவர் வந்த பிறகு படம் இன்னும் சூடு பிடிக்கிறது... சூட்சுமமாக அவர் பேசும் வசனங்கள் அருமை ...



சதி திட்டத்தால் கர்ணனை அவர் வீழ்த்தி விட்டு அழிந்தது உடல் தானே தவிர, ஆன்மா அல்ல , தர்மத்தை நிலை நிறுத்த இது போன்ற செயல்கள் அவசியமே என்றெல்லாம் தத்துவங்கள் பேசுவதை புத்தி ஏற்றுக்கொண்டாலும் மனம் ஏற்க மறுக்கிறது ... ஏன் கடவுள் மேல் கோபமே வருகிறது , ஏனெனில் இறந்து கிடப்பது கர்ணன் மட்டுமா  ? கர்ணனை நடிப்பால் எமக்கு காட்டிய நடிகர் திலகமல்லவா ?! ... கடைசியில் மாஸ் ஹீரோ இறப்பது போல காட்டினால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு கர்ணன் படம் நல்ல உதாரணம் , அதனால் தானோ என்னவோ படம்  1964  இல் வெளியான போது படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ( தளபதியில் இந்த முடிவை தவிர்த்ததால் படம் வெற்றி பெற்றது ) ..

அதே சமயத்தில் வாழும் போது உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாவிட்டாலும் சாவிற்கு பின் நீங்கா புகழால் எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதியை போல இன்று வரை பல முறை மறு வெளீயீடு செய்யப்பட்டு வசூலை அள்ளி குவித்துக்கொண்டிருக்கும் படம் கர்ணன் ...

ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிவாஜியை கேலி பேசுபவர்கள் நிச்சயம் அவர் இது போல நடித்திருக்காவிட்டால் கர்ணனாய் , கப்பலோட்டிய தமிழனாய் , வீரபாண்டிய கட்டபொம்மனாய் நம்மிடையே  வாழ்ந்து கொண்டிருக்க மாட்டார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் ... சிவாஜி என்றுமே இயக்குனர்களின் நடிகராய் இருந்ததால் அவர்கள் சொல்வதை மறுப்பில்லாமல்  அப்படியே செய்திருக்கிறார் ... உணர்ச்சிவயப்படும் காட்சிகளில் அது ஓவர் ஆக்டிங்காக வெளிப்பட்டிருக்கிறது ... நிச்சயம் அதை குறைத்திருக்கலாம் , ஆனால் அதுவே சிவாஜியின் தனித்தன்மை ...

படம் ஆரம்பித்தவுடன் சிவாஜியின் நடிப்பை கிண்டல் செய்து கொண்டிருந்த ஒரு இளம்பெண் படம் முடிந்து வெளிவரும் போது கொஞ்சம் கலங்கியது போலிருந்ததை காண முடிந்ததே இதற்கு மற்றுமொரு சான்று  ... மெத்தட் ஆக்டிங்கில் புகழ்பெற்ற மேலைநாட்டு நடிகர்களே சிவாஜியை வானளாவ புகழ்ந்திருக்கிறார்கள் என்பது வரலாறு ...


கர்ணன் படம் நமக்கு உணர்த்தும் பாடங்கள் நிறைய ... என்ன தான் நட்பை போற்றும் நல்லவனாக இருந்தாலும் மண்ணாசையும் , மனதில் வளர்க்கும் பகைமையும் ஒருவனை வீழ்த்தி விடும் என்பதற்கு
துரியோதனன் ஒரு உதாரணம் , கொடை வள்ளலாக இருந்தாலும் வாய் துடுக்கு ஆகாது என்பதற்கு கர்ணன் ஒரு உதாரணம் , தர்ம சீலன்  கூட கேட்பார் பேச்சை கேட்டு புத்தி தடுமாறுவான் என்பதற்கு தர்மன் ஒரு உதாரணம் , தர்மத்தை நிலை நாட்டுவதற்காக எந்த வழியையும் கையாளலாம் என்பதற்கு கிருஷ்ணன் ஒரு உதாரணம் , போர் மூண்டால் அதனால் நாசமாக போவது பல்லாயிரக்கணக்கான உயிர்களே என்பதற்கு படமே பெரிய உதாரணம் ...


கர்ணனுக்கும் , சிவாஜிக்கும் உள்ள ஒற்றுமைகள் தான் எத்தனை ! கர்ணன் தன்னிடம் யாசகம் கேட்பவர்கள் கைகள் கூட தாழ்ந்து விடக்கூடாது என்பதற்காக வருபவர்கள் வேண்டுவதை எடுத்துக்கொள்ளும் பொருட்டு தன் கைகளை தாழ்த்திபிடித்தவன் , கர்ணனிடம் நேரடியாகவும் , மறைமுகமாகும் யாசகம் பெற்றவர்கள் எத்தனையோ பேர் ... சிவாஜியும் தான் வாழ்ந்த காலத்தில் விளம்பரம் இல்லாமல் எத்தனையோ உதவிகளை செய்திருக்கிறார்.

இந்திய - சீன போர் மூண்ட போது தானே வழிய வந்து பண உதவி செய்ததோடு பல நாடகங்கள் நடத்தி அதன் மூலம் வந்த வசூலை அப்போதைய பிரதமர் நேருவிடம் வாரி  வழங்கியது ஒரு உதாரணம் ... சிவாஜிக்கு பிறகு வந்த எந்த நடிகரும் அவருடைய நடிப்பை யாசகம் வாங்காமல் நடித்ததில்லை , அந்த விதத்தில் சிவாஜி ஒரு நடிப்புலக  கர்ணன் ...

கர்ணனிடம் எவ்வளவோ திறமைகள் இருந்தும் தேரோட்டி என்று சொல்லி அவனை புறம் தள்ளினார்கள் , அதே போல  "
வீரபாண்டிய கட்டபொம்மன் " படத்தில் சிறப்பாக நடித்ததற்காக  ஆசிய - ஆப்பிரிக்காவின் சிறந்த நடிகன் என்ற விருதினை பெற்றிருந்தும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதினை கூட கொடுக்காமல் உதாசீனப்படுத்தியது இந்திய அரசு ...

போரில் ஜெயிப்பதற்காக நயவஞ்சக சூழ்ச்சிகள் செய்து கர்ணனை வீழ்த்தினான் கண்ணன் ... இன்று தன்னை தமிழின தலைவன் என்று சொல்லிக்கொள்பவர் சுத்த தமிழனான சிவாஜி தி.மு.க வில் வளர்ந்து விடாமல் இருப்பதற்கு அந்த காலத்தில் தன்னால் இயன்ற சூழ்ச்சிகளை நன்றாகவே செய்தார் ... எத்தனை யுகங்கள் கடந்தாலும் நாம் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றும் பேசிக்கொண்டிருப்பது போல , இன்னும் எத்தனை யுகங்கள் போனாலும் சிவாஜியின் நடிப்புத்திறமையையும்  பேசிக்கொண்டு தானிருப்போம் , ஏனெனில் இருவருமே காலத்தை வென்றவர்கள் ...

21 March 2012

சங்கரன்கோவில் சவாலை முறியடித்தார் ஜெ ...!


பொதுவாக  இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி ஜெயிப்பது என்பது நடைமுறை தான் என்றாலும் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரால் விடப்பட்ட சவாலால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சம்பிரதாயமாக இல்லாமல் சண்டைக்களமாக மாறியது ...

கடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று அ.தி.மு.க ஆட்சியமைத்ததிலிருந்தே கூட்டணி கட்சியான தே.மு.தி.க வுடன் புகைச்சல் ஆரம்பித்தது அனைவரும் அறிந்ததே ... உள்ளாட்சி தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல் வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் வெளியிட்டதிலிருந்தே புகைச்சல் நேரடி சண்டையாக மாறியது ...

உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றாலும் தே.மு.தி.க படு தோல்வியை சந்தித்ததிலிருந்து அ.தி.மு.க விற்கு மாற்று தி.மு.க தான் என்பது மேலும் ஊர்ஜிதமாகியது ... இந்த தோல்வியிலிருந்து தே.மு.தி.க பாடம் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை... அ.தி.மு.க வுடனான கூட்டணியால் தான் தன்னால் எதிர்க்கட்சி தலைவராக முடிந்தது என்பதை முற்றிலும் மறந்த விஜயகாந்த் தன்னால் தான் ஜெயலலிதாவால் அரியணை ஏற முடிந்தது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார் ...



விலைவாசி உயர்வு தொடர்பான சட்டசபை விவாதத்தின் போது போது இது வெளிப்படையாக தெரிந்தது ... உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னாள் பால் , பஸ் டிக்கெட் விலைகளை ஏற்றாததற்கு தோல்வி பயம் தானே காரணம் என்று விஜயகாந்த் கேட்ட கேள்வி முதல்வருக்கு நேரடியாக விடப்பட்ட சவாலாகவே இருந்தது ...

நிச்சயம் விலையேற்றத்தையும் மீறி மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற முதல்வரின் நம்பிக்கை வீண்போகவில்லை , அதே சமயம் எல்லா அமைச்சர்களும் அந்த தொகுதியில் வட்டமடித்ததிலிருந்தே பண விநியோகம் நிறைய நடந்திருக்கும் என்று மற்ற கட்சிகள் முன் வைக்கும் வாதத்தையும் மறுப்பதற்கில்லை ...

விலையேற்றத்தையும் தாண்டி தினமும் ஆறு மணி நேரத்திற்கு மேல் ஏற்படும் மின் தடங்கலே தொகுதி மக்களுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது என்பதை உணர்ந்த ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் பேசிய போது சாக்கு போக்கு எதுவும் சொல்லி பொறுப்பை தட்டி கழிக்காமல் வரும்  ஜூன் மாதத்திற்குள் மின் பற்றாக்குறை தீர்த்து வைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்தது  மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது ...

தேர்தல் முடிந்த அடுத்த நாளே கூடங்குளம் அணுமின் நிலைய வேலைகளை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதிலிருந்தே அவர் சொன்னதை செய்வதில் முனைப்புடன் இருக்கிறார் என்பது தெள்ள தெளிவாகிறது ... அ.தி.மு.க 68000  வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்திருப்பதும் , தே.மு.தி.க நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது ... 

17 March 2012

கழுகு - பறக்கும் உயரம் குறைவு ...!


யுவனின் இசை , கிருஷ்ணாவின் முந்தைய இரண்டு படங்களும் தந்த எதிர்பார்ப்பு இரண்டுடனும் சேர்ந்து படத்தின் போஸ்டர்களும் படத்தை பார்க்க தூண்டின ... இப்படி கவனத்தை ஈர்க்க கூடிய சமாச்சாரங்கள் மட்டுமன்றி நம்மை கட்டிப்போட கூடிய கதைக்களம் இருந்தும் அதை புதுமுக இயக்குனர் சத்யசிவா முழுமையாக பயன்படுத்திக்கொள்ளாதது துரதிருஷ்டமே !

சேரா ( கிருஷ்ணா ) , சித்தப்பு ( தம்பி ராமையா ) , நண்டு ( கருணாஸ் ) மற்றும் ஒரு கூட்டாளி என நால்வரும் கொடைக்கானலில் மலை உச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களின் பிணங்களை மேலே எடுத்து வரும் வேலையை தொழிலாக செய்கிறார்கள் ... அன்பு , பாசம் எதைபற்றியும் அலட்டிக்கொள்ளாத  கிருஷ்ணாவின் மேல் தற்கொலை செய்து கொண்ட தன் தங்கையின் பிணத்தை எடுக்க உதவியதால் காதல் வயப்படுகிறார் கவிதா
( பிந்து மாதவி ) ... இவர்கள் காதல் , கல்யாணத்தில் முடிந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் கள்ளகடத்தல் தொழில் செய்து வரும் அந்த ஊரின் பெரிய மனிதர் அய்யா ( ஜெயப்ரகாஷ் ) ... கடைசியில் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தாலும் யூகிக்க முடிந்த க்ளைமாக்ஸ் உடன் முடிகிறது படம் ...



அலிபாபா , கற்றது களவு படங்களை தொடர்ந்து மற்றுமொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில்  நடித்திருக்கிறார் கிருஷ்ணா ... முந்தைய படங்களை விட நடிப்பில் மெருகேறியிருந்தாலும் இன்னும் அவர் போக வேண்டிய தூரம் நிறைய ... சடலங்களை பீசு என்று சொல்லி கூட்டாளிகளுடன் பேசும் போது யதார்த்தத்தையும் , க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஆக்ரோஷத்தையும் நடிப்பில் நன்றாகவே காட்டுகிறார் . ஆனால் இவர் உதட்டில் பூசப்பட்ட வெள்ளைச்சாயம் ஏனோ அந்த யதார்த்தத்தை காட்டவில்லை ...

ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு பிந்து மாதவி நல்ல தேர்வு ... காதல் ,சோகம் ,ஏக்கம் எல்லாமே அவர் கண்களில் சரளமாக வருகின்றன , அதைப்போலவே ஹீரோ எப்படிப்பட்ட பஞ்ச பரதேசியாக இருந்தாலும் எந்த காரணமும் இல்லாமல் அவன் மேல் ஹீரோயினுக்கு வரும் காதலும்  இவருக்கும் வருகிறது...


தம்பி ராமையா , கருணாஸ் இருவரும் தங்கள் டைமிங் காமெடிகளால் படத்தை நன்றாக நகர்த்தி செல்கிறார்கள் ... முன்னவரின் பேச்சு கொஞ்சம் ஓவராக இருந்தாலும் படம் போகிற போக்கில் தெரியவில்லை , அதிலும் குறிப்பாக கோட் திருடிவிட்டு தம்பி ராமையா ஓடும் போது தியேட்டர் அதிர்கிறது ...  ஜெயப்ரகாஷிற்கு வெள்ளை வேட்டி , சொட்டருடன் வந்து போவதை தவிர பெரிய வேலை ஒன்றுமில்லை ... நல்ல நடிகரான இவரை வழக்கமான வில்லனாக மாற்றி விடாமல் தவிர்ப்பது நலம்  ...

யுவனின் இசையில் ஆம்பளைக்கும் பாடலும் , அவர் குரலில் பட்டமரம் பாடலும் கழுகாய் மனதை கொத்துகின்றன , ஆனால் பின்னணி இசையில் ஏதோ பழைய நெடி ... சத்யாவின் ஒளிப்பதிவு கொடைக்கானல் மலைப்பகுதிகளை கண்முன் கொண்டுவருகிறது ... படம் முழுவதும் தன் லைட்டிங்  மூலம் நல்ல பீல் கொடுத்திருக்கிறார் ...

உட்கார்ந்த இடத்திலேயே பல லட்சங்களை சம்பாதிக்கும் இந்த காலத்தில்  சில ஆயிரங்களுக்காக உயிரையே பணயம் வைத்து மலை உச்சியில் பயணம் செய்பவர்களை பற்றிய கதை , அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் , வாழ்க்கை முறையையும் சில காட்சிகளிலேயே விளக்கிய விதம் , விறுவிறுப்பாக செல்லும் முதல் பாதி , ஒளிப்பதிவு , பாடல்கள் , ஹீரோயின் நடிப்பு இவையெல்லாம் கழுகின் சிறப்பம்சங்கள் ,


முன்பே குறிப்பிட்டது போல நல்ல கதைகளம் இருந்தும் அதனை முழுவதும் பயன்படுத்தாமல் விட்டது , சுவாரசியமாக ஆரம்பிக்கும் படம் காதல் , வில்லன் என வழக்கமான ரூட்டில் பயணிப்பது , தங்கை செத்து சில நாட்கள் கூட முடியாத நிலையில் காதல் வயப்படும் ஹீரோயின் கதாபாத்திரம் , வில்லன் எதை கடத்துகிறார் என்பதை சரியாக விளக்காத திரைக்கதை , ஊரே பயப்படும் வில்லனை ஹீரோ சட்டையே செய்யாதது , வில்லனின் அடியாட்கள் போலீஸ்காரர்களை பணம் கொடுத்து சரி செய்ய முயற்சிக்காமல் உடனே கொலை செய்வது போல காட்டுவது , ஆங்காங்கே பருத்திவீரனின் பாதிப்புகள் இவையெல்லாம் கழுகின் பழுதுகள் ...

படம் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஹீரோ - ஹீரோயின் காதல் , ஹீரோ - வில்லன் மோதல் ஆகிய இரண்டு முக்கியமான விஷயங்களிலும் போதுமான அழுத்தம் கொடுக்காததால் இயக்குனரால் அந்த பாதிப்பை நம் மேல் முழுவதுமாக தக்க வைக்க முடியாமல் போனதே கழுகின் குறை ...

ஸ்கோர் கார்ட் : 41 

6 March 2012

தேர்தல் முடிவுகள் - காங்கிரஸை "கை" கழுவிய மக்கள் ...


த்திரபிரதேசம் , பஞ்சாப் , உத்ராகந்த் , மணிப்பூர் , கோவா என ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தல்களின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன ... இதில் உ.பி , பஞ்சாப் தேர்தல் முடிவுகள் அரசியல் ஆர்வலர்களுக்கிடையே அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தது , குறிப்பாக  403 தொகுதிகள் அடங்கிய உ.பி யில் ஆட்சியை பிடிப்பவர்கள் தேசிய அரசியலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்பது அரசியல் வரலாறு ...

அதனால் தான் மாநில கட்சிகளான எஸ்.பி , பி.எஸ்.பி இரண்டுடனும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸ் , பி.ஜே.பி ஆகிய தேசிய கட்சிகளும் மிகுந்த வலிமையுடன் களத்தில் இறங்கின ... எப்போதுமே குடும்ப அரசியலை நம்பாத பி.ஜே.பி உமாபாரதியை நட்சத்திர பேச்சாளராக களமிறக்க , காங்கிரஸ் வழக்கம் போல ராகுல் காந்தியை களமிறக்கியது ...



இந்த தடவையும் ராகுல் காந்தி கூட்டிய  200  க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களுக்கு கை தட்ட கூட்டம் கூடியதே ஒழிய " கை " க்கு ஒட்டு போடுவதற்கு அல்ல என்பதை தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றன ... பீகார் , குஜராத் தேர்தல்களை தொடர்ந்து ராகுல் மீண்டும் மண்ணை கவ்வியிருப்பது அவர் மீடியாக்களை கவர்ந்த அளவிற்கு மக்களை கவரவில்லை என்பதையே காட்டுகிறது ...

2007 ஆம் ஆண்டு தேர்தலில் 22 இடங்களை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த முறை 37 இடங்களை கைப்பற்றியிருந்தாலும் , கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றியின் அடிப்படையில் 95 தொகுதிகளை கைவசம் வைத்திருந்த காங்கிரசிற்கு இது பெரிய அடி ... எதிர்பார்த்ததை போலவே தனிப்பெரும் கட்சியாக 224 தொகுதிகளை கைப்பற்றியுருக்கும்  எஸ்.பி தனித்து ஆட்சியமைக்க போவது உறுதியாகிவிட்டது ... இந்த வெற்றிக்கு முலாயம் சிங்கின் புதல்வன் அகிலேஷின் பங்கு மகத்தானது என கூறப்படுகிறது ...

80 சீட்களை மட்டும் வென்ற பி.எஸ்.பி ஆட்சியை இழந்து விட்டது ... சட்டம் , ஒழுங்கை கட்டுக்குள் வைத்ததாக சொல்லப்பட்டாலும் மாயாவதியின் மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்றே சொல்லலாம் ... சென்ற முறை இவரது கட்சிக்கு அதிக வாக்குகள் அளித்த பிராமண , தாகூர் சமூகத்தினர் இம்முறை பி.ஜே.பி , காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததும் பி.எஸ்.பியின் பின்னடைவுக்கு முக்கிய காரணங்கள் ...


பி.ஜே.பி யை பொறுத்த வரை கடந்த முறை பெற்ற 51 சீட்களை விட 2 சீட்கள் குறைவாக பெற்றது சறுக்கல் தான் என்றாலும் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்ததை எண்ணி வேண்டுமானால் சந்தோசப்பட்டு கொள்ளலாம் ...

பஞ்சாபிலும் வரலாறு காணாத வகையில் ஆளுங்கட்சியான அகாலி தள் - பி.ஜே.பி கூட்டணி 68 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ... ஆட்சியை பிடிக்குமென எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 46 இடங்களையே வென்றிருக்கிறது ...

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல கோவாவிலும் 9 இடங்களையே கைப்பற்றி ஆட்சியை பி.ஜே.பியிடம் இழந்த காங்கிரசிற்கு ஒரே ஆறுதல் மணிப்பூரில் மீண்டும் ஆட்சியை பிடித்திருப்பதே , அதே போல உத்ராகந்தை பொறுத்த வரை ஆளும் பி.ஜே.பி , காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தாலும் பி.ஜே.பி யே மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று சொல்லப்படுவதும் காங்கிரஸிற்கு நிச்சயம் கலக்கத்தை கொடுத்திருக்கும் ...


கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பல காங்கிரஸ் தலைவர்கள் உ.பி யில் அடைந்த தோல்விக்கு ராகுல் காந்தி காரணம் இல்லை , உள்ளூர் தலைவர்களே காரணம் என்பது போல பேச ஆரம்பித்துவிட்டார்கள் ...இரண்டு நாட்களுக்கு முன்பு கூட உ.பி யில் காங்கிரஸ் அடையப்போகும் வெற்றிக்கு ராகுல் தான் முக்கிய காரணம் என்று சொல்லி வந்தார்களே என கேட்டால் வடிவேலு பாணியில் அது போன வாரம் , இது இந்த வாரம் என்று சொல்வார்களோ என்னவோ , அவர்களுக்கு தான் மக்களின் மறதி மேல் எவ்வளவு  நம்பிக்கை !

இந்த தேர்தல் முடிவுகள் அடுத்து 2014  இல் நடக்க போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் என்று சொல்லப்பட்டாலும் , காங்கிரஸின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருவதையும்  , நேரு குடும்பத்தில் இருந்து யாராவது போய் நின்றாலே மக்கள் ஓட்டளித்து விடுவார்கள் என்ற காங்கிரஸாரின் நினைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடியாகவும் இதை நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம் ...

இனி வரப்போகும் தேர்தல்களுக்கு பிரச்சாரம் செய்ய ராகுல் காந்தியை காங்கிரஸ் அனுப்புகிறதோ இல்லையோ பி.ஜே.பி உட்பட மற்ற எதிர்கட்சிகள் அவர் வரவேண்டுமென்றே வேண்டிக்கொள்ளும் என நினைக்கிறேன் , ஏனெனில் அவர் ராசி அப்படி ...

ஒரு பக்கம் முடிவுகள் இப்படியிருந்தாலும் 2014 க்குள் பி.ஜே.பி தங்களுடைய  பிரதம வேட்பாளர் யார் என்பதில் ஒரு தீர்மானத்தையும் , கட்சிக்குள் உள்ள பூசலை  களைவதற்குரிய நடவடிக்கைகளையும்  இப்பொழுதிலிருந்தே  எடுக்காவிட்டால் மூன்றாவது முறையாகவும் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு அவர்களே வழியமைத்து விடுவார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை ...

( மேலே குறிப்பிட்டுள்ள தேர்தல் முடிவு எண்ணிக்கையில் சிற்சில மாற்றங்களை நாளை எதிர்பார்க்கலாம் ) 

3 March 2012

அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...!


பத்து வருடங்களில் நான்கே படங்கள் இயக்கியிருந்தாலும் வணிக ரீதியான வெற்றி , தோல்விகளை தாண்டி நல்ல பெயரை பெற்றிருக்கும் இயக்குனர் வசந்தபாலன் ... இரண்டு வருடங்களுக்கு முன்னால் இதே மாதத்தில் அங்காடி தெருவால் அனைவரையும் அசர வைத்தவர் இப்போது பீரியட் படம் அரவானில் ஆதி - பசுபதியுடன் இணைந்து வந்திருக்கிறார் ...

சு.வெங்கடேசன் எழுதி சாகித்திய அகாடமி விருது பெற்ற " காவல் கோட்டம் "  நாவலின்  ஒரு பகுதி கதையே  " அரவான் " ... நாவலுக்கு கிடைத்த  இருவேறு மாதிரியான விமர்சனங்களே படத்திற்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை ...

களவை குலத்தொழிலாக கொண்ட கூட்டத்தின் தலைவன் பசுபதி ... ராணியின் நகையை எவனோ திருடி விட பழி பசுபதியின் ஊரின் மேல் விழுகிறது , அதை துடைக்க உண்மையான திருடன் ஆதியை கண்டுபிடிக்கும் பசுபதி அவன் களவாடும் திறமையில் ஈர்க்கப்பட்டு தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான் ... தன் தங்கை ஆதியின் மேல் காதல் வயப்பட  அவனுடைய பூர்வீகத்தை வினவும் பசுபதி ஆதி ஏற்கனவே திருமணம் ஆனவன் என அறிகிறான் , அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் ஒரு கூட்டம் ஆதியை பலியாள் என்று சொல்லி அடித்து கூட்டி செல்கிறது ... ஆதியின் பின்னணி என்ன ? பசுபதியால் அவனை மீட்க முடிந்ததா ? என்பதை இடைவேளைக்கு பிறகு விறுவிறுப்பாக விளக்கியிருக்கிறார்கள் ...


பசுபதி முறுக்கேறிய தோள்களுடனும் , பழுப்பேறிய பற்களுடனும் அந்த காலத்து களவாணியாக கண்முன் நிற்கிறார் ... முன்பாதியில் முழுவதும் இருந்து பின்பாதியில் காணாமல் போனாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் பசுபதி பிரமாதமாய் நடித்திருக்கிறார் ...

ஆதிக்கு உயரமும் , உடற்கட்டும் சீரியசாக பொருந்தும் அளவிற்கு முகம் ஏனோ பொருந்தவில்லை ... படம் ஆரம்பித்து அரை மணி நேரம் கழித்தே வந்தாலும் இரண்டாவது பாதி முழுவதும் கதை இவரை சுற்றியே நகர்கிறது. படம் முடிந்து வெளியே வரும் போது தன் கதாபாத்திரத்தை மனதில் பதிய வைத்ததே ஆதியின் வெற்றி ...


ஆதிக்கேற்ற ஜோடியாக தன்ஷிகா கட்சித பொருத்தம் ... பரத் சில சீன்களே வந்தாலும் சிலிர்க்க வைக்கும் நடிப்பு ... அஞ்சலி அங்காடிதெருவின் நன்றிகடனுக்காக நடித்திருப்பார் போல , இவரின் உடல் அளவிற்கு கேரக்டரில் வெயிட்டே இல்லை ... பாளையத்து ராஜா , மாத்தூர்காரனாக வரும் கரிகாலன், தேவதாசியாக நடித்திருக்கும் ஸ்வேதா மேனன் , சின்ன ராணி , ஆதியின் நண்பனின் மனைவி போன்றோரும் நம்மை கவர்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலங்களான கலையும் , ஒளிப்பதிவும் 18 ஆம் நூற்றாண்டை நம் கண்முன் நிறுத்துகின்றன ... ஒளிப்பதிவாளர் சித்தார்த்திற்கு இந்த படம் நல்ல ப்ரேக் ... அறிமுக இசையமைப்பாளர் கார்த்திக்கின் இசையில் நிலா நிலா, களவு பாடல்கள் முனுமுனுக்க வைத்தாலும் பின்னணி இசை பயங்கர மைனஸ் ... ஒரே சத்தம் தான் திரும்ப திரும்ப கேட்கிறது ...

சென்ற படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதை களனை தேர்ந்தெடுத்த இயக்குனரின் துணிச்சல் , சரித்திர நாவலை படமாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சி ,பீரியட் படம் என்றதும் செயற்கை முலாம் பூசாமல் உடையலங்காரம், காட்சியமைப்பு உட்பட அனைத்திலும் காட்டப்பட்ட யதார்த்தம் , பாத்திர தேர்வு , கள்வர்கள் பற்றியும் , களவாடும்  விதம் பற்றியும் சொல்லப்பட்ட நுணுக்கமான தகவல்கள் , பரத் எப்படி கொலை செய்யபட்டான் என்பதை ஆதி துப்பறிவதன் பின்னணியில் பின்னப்பட்ட சுவாரசியமான இரண்டாம் பாதி , அதன் முடிவில் ஏற்படும் எதிர்பாராத திருப்பம் , நரபலியே கூடாதென்னும் கதை , கள்வர்களையே காவலர்களாய் மாற்றிய பாசிடிவ் க்ளைமாக்ஸ் இவையெல்லாம் அரவானை அண்ணாந்து பார்க்க வைக்கின்றன.


சாமி கும்புடுகிறார்கள், களவுக்கு போகிறார்கள் , ஆடி பாடுகிறார்கள் இப்படியே திரும்ப திரும்ப வரும் ரிப்பீட்டட் காட்சிகள் , கதைக்குள் போகாமல் களவுக்குள் மட்டும் போன முதல் பாதி , ஆண்கள் மேலாடை அணியாமலும் ,பெண்கள் உள்ளாடை அணியாமலும் இருப்பது மட்டுமே பீரியட் படம் என்பதை பறை சாற்றுகின்றன , மற்றபடி பீரியட் படம் என்பதையே மறக்கடிக்க வைக்கும் வசனங்கள் , திணிக்கப்பட்ட பாடல்கள் மற்றும் சிங்கம்புலியின் காமெடி , கிராபிக்ஸ் காட்சிகள் ( ஆதி பசுபதியை காப்பாற்றும் காட்சி சுத்த சொதப்பல் ),

ஒரு ஊரே பலி கொடுக்க தேடிக்கொண்டிருக்கும் போது  ஏதோ ஒன்றுமறியாத சின்ன பையன் போல உலா வரும் ஆதியின் பாத்திர படைப்பு , ஆதிக்கு பதில் ஏற்கனவே அவன் நண்பனை பலி கொடுத்த பின்னரும் ஆதியையும் பலி கொடுக்க எந்த வித லாஜிக்கும் இல்லாமல் ஊர் துணிவது, மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஜெயிப்பதற்காக தன்னையே பலி கொடுத்த அரவானின் பெயரை தலைப்பிற்கு மட்டுமே பயன்படுத்திவிட்டு இரு விதமான கதைகளை சொல்ல முற்பட்ட திரைக்கதை உத்தி இவையெல்லாம் அரவானை பலி கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 44 
Related Posts Plugin for WordPress, Blogger...