22 July 2012

மதுரை பயணம் ...



நான் கடைசியாக மதுரைக்கு சென்று இரண்டு வருடங்கள் இருக்கும் , அதுவும் எங்கள் குடும்பத்துக்கு இருந்த ஒரே தொடர்பான வீட்டை  விற்பதற்காக என் சகோதரர்களுடன் சென்றிருந்தேன் ... எங்கள் குடும்பம் முழுவதும் சென்னையிலேயே செட்டிலாகி பல வருடங்கள் ஆகி விட்டதால் வீட்டை கவனிக்க முடியவில்லை , அதிலும் குடியிருந்தவர்களும்  காலி செய்து கொண்டு போய் விடவே வீட்டை விற்க முடிவெடுத்தோம் ... என் நண்பனின் அண்ணனே வீட்டை வாங்குவதற்கு முனைப்பாக இருந்ததால் விற்பதில் சிரமம் இருக்கவில்லை ... 


சொந்த வீட்டின் மேல் எல்லோருக்கும் ஒரு எமோஷனல் கனக்ட் இருக்கும் , அதிலும் என் இரண்டு அண்ணன்களை விட எனக்கு அது கூடவே இருந்ததற்கு காரணம் , அவர்களை விட நான் அதிக வருடம் அந்த வீட்டில் வாழ்ந்ததே ... என்னுடைய  ஆறாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு முடியும் வரை நான் அந்த வீட்டில் தான் இருந்தேன் ... மூத்த அண்ணன் வேலை நிமித்தமாக டில்லியில் இருந்ததால் ஆரம்பத்திலிருந்தே எங்களுடன் தங்கியதில்லை , அவர் வாங்கிகொடுத்த டேப் ரெக்கார்டரில் தான் அப்போது ஏ.ஆர்.ரஹ்மான்  இசையில் பிரபலமான " ஓட்ட ஓட்ட கட்டிக்கோ " பாடல் ஓடிக்கொண்டேயிருக்கும் ... சவுண்டை குறைக்க சொல்லி சத்தம் போடும் எதிர் வீட்டு இருமல் தாத்தாவும் ஒரு நாள் இறந்து விடவே ( சத்தியமா நான் காரணமில்லை ) சத்தம் மேலும் அதிகமாகியது ... அடுத்த அண்ணனும் வேலை கிடைத்து வெளியூர் சென்று விட நான் தனிக் காட்டு ராஜாவானேன் ... 



பாசத்தையே வெளிக்காட்டிக் கொள்ளாத என் தந்தை என்னிடம் மட்டும் அதிக பாசத்துடனும் , அதை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டுமிருந்த காலமது. நான் அதை முழுவதும் உணர்ந்து கொண்ட போது என் தந்தை உயிருடன் இல்லை ... அவர் உயிருடன் இருந்த போது அவருடன் நிறைய சண்டையிட்டிருக்கிறேன் , எதிர்த்துப் பேசியிருக்கிறேன் , ஒரு நாள் என்னை அடிக்க வந்த கைகளை இறுகப் பிடித்திருக்கிறேன்...

ஜோசியர் கிரக கோளாறு என்றார் , குடும்ப நண்பர்கள் சிலர் இருவருக்கும் இடையேயான அதிக  வயது வித்தியாசம் ( 44 ) தான் கருத்து வேறுபாடுகளுக்கு  காரணம் என்றார்கள். என்ன காரணம் என்று எனக்கு அந்த வயதில் புரியவில்லை , ஆனால் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அதீத அன்பே சண்டைகளுக்கு காரணமென்று இப்போது புரிகிறது ... ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பு அவர்கள் நம்முடன் இருக்கும் போது தெரிவதில்லை , பிரியும் போது தான் தெரிகிறது ... இது தந்தைக்கு மட்டுமல்ல  , நிறைய உறவுகளுக்கு பொருந்தும் ... 

இப்போது கடன் வசதியும் , தனி நபர் வருமானமும் அதிகமிருப்பதால் வீடு வாங்குவதென்பது எளிதாகிவிட்டது , அதனால் தான் ஐம்பத்தைந்து வயதில்  என் தந்தைக்கு சாத்தியமானது இந்த காலத்தில் இருபதைந்திலேயே முடிகிறது ... சிறுக சிறுக சேமித்து ஒரு இடத்தை வாங்கி நம் கண் பார்வையிலேயே தனி வீட்டை கட்டி  அதில்  குடிபுகுவதென்பது  ஒரு தனி சுகம் , இந்த காலத்தில் கிடைக்கும் துரித ப்ளாட்களில் அந்த சுகம் இருப்பதில்லை ... எங்கள் தந்தை சென்னைக்கு வந்து எங்களுடன் நிரந்தரமாக தங்காமல் மதுரையிலேயே இருந்ததற்கு அவர் சொந்தமாக கட்டிய வீடும்  முக்கிய காரணம் ... 


இந்த இரண்டு வருடங்களில் ஓரிரு முறை மதுரைக்கு செல்லும் வாய்ப்பு வந்தும் என்னால் போக முடியவில்லை , திடீரென்று ஒரு நாள் என் கல்லூரி கால நண்பன் கட்டிங் போன் செய்து அவன் ஜெர்மனிக்கு போய் வந்ததால் அவன் வேலை  பார்க்கும் அலுவலகம்  அவன் இந்தியாவுக்குள் எந்த ஊருக்கு சென்று மூன்று நாள் தங்கினாலும் அதற்க்கான செலவை ஏற்றுக்கொள்வதாக சொல்லி விட்டதாகவும் , அவன் மதுரையை தேர்ந்தெடுத்ததாகவும் சொன்னான் ... இதல்லவோ ஆபீஸ் என்ற  வயிற்றெரிச்சல்  ஒரு புறமும் , எந்த ஆபீஸ்லடா இந்த மாதிரியெல்லாம் அனுப்புறாங்க என்ற கேள்வி மறுபுறமும் எழ , " தானமாய் வரும் மாட்டை பல்லைப் பிடுங்கி பார்க்க கூடாது " என்ற சொல்லுக்கேற்ப நானும் மதுரை என்பதால்  சம்மதித்தேன் ... 

துரித பயணம் என்பதால் எஸ்.ஆர்.எம் பஸ்ஸில்  டிக்கெட் புக் செய்து கிளம்பினேன் ... பேருந்து பயணத்தின் போது  ஏ.சி  குறைவாக இருப்பதாக ஒருவர் முறையிட அதற்கு
 ஏ.சி  சரியாத்தான் இருக்கு , வேணுமின்னா கம்ப்ளைன்ட் பண்ணிக்குங்க "  என்று சொல்லி வாடிக்கையாளர்கள் சேவைக்கான இ மெயில்  முகவரியை எஸ்.ஆர்.எம் பணியாளர் காண்பித்தது அவர்கள் சர்வீசின் மேல் நான் வைத்திருந்த மதிப்பை வெகுவாக குறைத்தது ... ஒரு வழியாக மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்கு   வந்து சேர்ந்தேன்...

கட்டிங் வரும் போது உற்சாகத்திற்கு குறைவிருந்தாலும் , உற்சாக பானங்களுக்கு குறைவிருக்காது ( அதன் காரணமாகவே அவன் இயற்பெயர் நாராயணன் என்பது மறந்தே போனது  ) ... வருவதற்கு முன்பே நேயர் விருப்பங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்ப அயிட்டங்களுடன் வந்து சேர்ந்தது அவன் தனி சிறப்பு ... கடைசியில் எது நடந்ததோ அது நல்லபடியாகவே நடந்தது ... கல்லூரியில் படிக்கும்  போது அவன் கட்டிங்கிற்க்கே  மரண போதையாகிவிடுவதால் நாராயனணிற்கு " கட்டிங் " என்ற திருநாமம் வந்து தங்கிவிட்டது .. அந்த காலத்திலே " கண்ணா " ஒயின்ஸில் கடன் வைத்து சரக்கடித்த பெருமை அவனுக்கு மட்டுமே உண்டு ... 

எங்கள் கல்லூரியில் ஓரளவு அழகான பெண்கள் எல்லோருமே ஏனோ எல்லீஸ் நகரிலேயே இருந்தார்கள் ( டி,வி,எஸ் நகர் பெண்கள் கோவிக்க வேண்டாம் ) , அந்த ஏரியாவில் கட்டிங் வசித்து வந்ததால் பசங்களின் நட்புக்கரம் அவன் பால் நீண்டுகொண்டேயிருந்தது , அவனும் " அந்த பொண்ணு தானே ஒன்னுமேயில்லை நேத்து கூட அவங்க வீட்டுல தான் இருந்தேன் , ஈசியா செட்டாயிரும் ,( இந்த இடத்தில
யாருக்கு , யாருக்கோ " என்ற வடிவேலுவின் வசனத்தை ஒரு முறை சொல்லிப் பார்த்துக் கொள்ளவும் )  வாங்க பாஸ் மத்தத ஒரு கட்டிங் போட்டுக்கிட்டே பேசுவோம் "   என்று சொல்லிவிட்டு கண்ணா ஒயின்சுக்கு அவர்களை அழைத்து செல்வது அவன் வழக்கம் ... 

இன்றோ அதற்கெல்லாம் பிராயச்சித்தம் செய்வது போல பணத்தை தண்ணியாக மட்டும் அல்ல தண்ணியிலேயே செலவழித்துக் கொண்டிருக்கிறான் என்பது என் கருத்து ... அதிலும் ஊருக்கு நான் திரும்பும் போது " குறை எதுவும் இல்லையே மச்சான் " என்று ஏதோ மாப்பிள்ளை வீட்டுக்காரகளிடம் பெண்ணின் தகப்பன் கேட்பது போல அவன் கேட்ட போது கிரேன் வைக்காமலேயே ஒரு முறை உயரத்திற்கு போய் வந்தான் ...
 " நன்பேண்டா " என்று ஒரு குரல் அங்கு ஒலிப்பது போலவே இருந்தது ...

நான் எதிலுமே அதிக பற்றுள்ளவனாக இருப்பதில்லை , சரக்கு விஷயத்திலும் அப்படியே... கல்லூரி நண்பர்கள் பி.சி , சபரியுடன் என் பால்ய நண்பன் பட்டாபியும் கலந்து கொண்டதும் கலகலப்பு கூடியது ... சபரீஷ் பொங்கல் , குமார் மெஸ் சாப்பாடு , முனியாண்டி விலாஸ் புரோட்டா - சால்னா இவற்றுடன் சேர்த்து  இந்த சந்திப்பின் மூலம் ஏற்கனவே எனக்கும் என் பால்ய நண்பனுக்கும் இடையேயிருந்த சின்ன மனஸ்தாபமும் கரைந்து போனது பயணத்தினால் கிடைத்த கூடுதல் பலன் ...சில இடங்களுக்கு போக வேண்டுமென்று நினைத்திருந்தும் மீனாக்ஷி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம் இரண்டிற்கு மட்டுமே அடுத்த நாள் காலை செல்ல முடிந்தது ... 


ரூம் ஜன்னல் வழியாக பின்புறம் பார்த்த போது தெரிந்தது மிகப்பெரிய வெட்டவெளி ... இன்று வெட்டவெளியாக இருக்கும் அந்த இடம் ஒரு காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தியேட்டராக இருந்து , எத்தனையோ வெள்ளிவிழா படங்களை கண்ட தங்கம் தியேட்டர் என்பதை நினைக்கும் போதே நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வெறுமை ... என் அப்பாவுடன் சிவாஜி படம் பார்க்க தங்கம் தியேட்டருக்கு நான் பல தடவை சென்றிருக்கிறேன் , அப்படி செல்லும் போது நடந்த ஒரு சம்பவம் என் மனதில் பசுமரத்தாணி போல இன்றும் நினைவிருக்கிறது ... செயின் ஸ்மோக்கரான என் அப்பா இடைவேளையின் போது சிகரட் வாங்க , நானும் அதையே கேட்டேன் ... அவர் மறுக்க  நான் " நீ மட்டும் வாங்குற " என்று சொல்லி அடம் பிடிக்கவே அப்பொழுது அவரால் எனக்கு முன் புகை பிடிக்க முடியவில்லை , அன்று மட்டுமல்ல பிறகு என்றுமே சாகும் வரை எனக்கு முன்னாள் அவர் புகை பிடிக்காமலிருந்தது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது ...

பள்ளி நாட்களில் ஒரு பந்தாவிற்காக புகை பிடிக்க ஆரம்பித்த நான் கல்லூரி நாட்களில் அதற்கு அடிமையானேன் என்றே சொல்லலாம் ... பிறகு எவ்வளவு முயன்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் போகவே அந்த முயற்சியை நிறுத்திவிட்டேன். சென்னையில் வேலைக்கு  சேர்ந்த பிறகு புகைக்கும் எனக்குமான நெருக்கம் இன்னும் அதிகமானது ... ஒரு நாள் திடீரென என் தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் நாங்கள் எல்லோரும் மதுரைக்கு விரைந்தோம் ... ஈம காரியங்கள் செய்வதற்காக சுடுகாட்டுக்கு போவதற்கு முன் சிகரெட் வாங்குவதற்காக என் நண்பனிடம் பணம் கொடுப்பதை என் அண்ணனுடைய சகலை பார்த்துவிட்டார் ... 

என்  தந்தையின் ஈம காரியங்கள் முடியும் வரை  பத்து நாட்களுக்கு சிகரெட் பிடிக்காமல் இருக்கலாமே என அவர் சொன்ன போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ... அவர் என் தந்தைக்காகவாவது இதை சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கலாமே என்று சொன்ன போது என்னால் தட்ட முடியவில்லை ... அந்த பதினைந்து நாட்களும் நான் சிகரெட் பிடிக்கவேயில்லை , அதற்கு அடுத்த நாள் என் நண்பன் என்னிடம் சிகரெட்டை நீட்டிய போது ஏதோ ஒரு விஷ ஜந்துவை பார்ப்பது போல தான் அதை நான் பார்த்தேன் ... புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு இத்தோடு ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டன ... 


யார் யாரோ ஏன் என் அப்பாவே ஜாடையாக சொல்லியும் புகை பிடிக்கும் பழக்கத்தை விடாத நான் திடீரென மிகவும் நெருக்கமில்லாத ஒருவர் சொன்னவுடன் விட்டுவிட்டதை நினைத்தால் மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஆக இருக்கலாம் , ஆனால் எனக்கு என்னவோ அப்படி தோன்றாததற்கு காரணம்  என் அப்பா ... " டே மாப்பிளை எத்தன தடவ டா கூப்புடறது , இந்தா  சிகரட்ட பிடி " நான் அந்த பழக்கத்தை விட்டு விட்டது தெரியாத என் கல்லூரி நண்பன் என்னிடம் சிகரெட்டை நீட்டினான் ... அதை மறுத்துவிட்டு மீண்டும் என் பார்வை என்னையறியாமல் தங்கம் தியேட்டர் இருந்த வெட்டவெளியில் வெறித்து நின்றது ... 

14 July 2012

பில்லா 2 - டான் ஃபார் ஃபேன் ( DON FOR FAN )



முந்தைய படம் தோல்வியோ , வெற்றியோ எப்படியிருந்தாலும் அடுத்த படத்திற்கான ஒப்பனிங்கை அப்படியே தக்கவைத்துக் கொள்பவர் அஜித் , அப்படியிருக்க 2011 ன் ப்ளாக்பஸ்டர் மங்காத்தாவை தொடர்ந்து வந்திருக்கும் படம் , ஐந்து வருடங்களுக்கு முன்னாள் மெகா ஹிட்டடித்த பில்லா படத்தின் பார்ட் 2 , இந்தியாவின் முதல் ப்ரீக்யூவல்  படம் இப்படி சில  சிறப்பம்சங்களையும் தாண்டி இந்த வருடத்திற்கே ஒரு மிகப்பெரிய கமர்சியல் வெற்றிக்காக ரசிகர்கள் ஆவலுடன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ரிலீசாகியிருக்கிறது பில்லா 2 ...  


ஒரு சாதாரண அகதியாக இருந்து கடத்தல் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் டானாக டேவிட் பில்லா உருமாறுவதே கதை ... கொலை சதியில் இருந்து பில்லா ( அஜித் ) தப்பிப்பதிலிருந்து ஆரம்பிக்கும் படம் பிளாஸ்பேக்கில் விரிகிறது ... அகதிகள் முகாமில் நண்பனுக்காக இன்ஸ்பெக்டரை அடிக்கும் பில்லா கொஞ்சம் பிரபலமடைகிறான் ... முதலில் வைர கடத்தலின் ஆரம்பித்து , பிறகு ஹெராயின் கடத்தல் மூலம்  அப்பாசியுடன் 
( பாண்டே ) அறிமுகமாகும் பில்லா பிறகு அவன் சம்மதமில்லாமலேயே டிமொட்டி
( வித்யுத் ) யுடன் ஆயுதக் கடத்தலில் இறங்குகிறான் ... அப்பாசியை கொன்று விட்டு டிமொட்டியையும் பகைத்துக்கொண்டதால் எதிரிகள் மூலம் முதல்வரைக் கொன்ற பலி பில்லாவின் மேல் விழுகிறது ... பலியிலிருந்து மீண்டு டிமொட்டியையும் கொன்று விட்டு கடத்தல் உலகின் முடி சூடா மன்னனாக பில்லா மாறுவதுடன் படம் முடிகிறது ... 




அஜித்திற்கு இது அல்டிமேட் ரோல் ... படத்தில் ஆதி முதல் அந்தம் வரை பிரேம் பை பிரேம் தல தாண்டவம் ஆடியிருக்கிறார் ... " எதிரியின் பயம் நம் பலம் " , " எனக்கு நண்பனாக இருக்கறதுக்கு தகுதி தேவையில்லை , ஆனா எதிரியா இருக்கிறதுக்கு தேவை " போன்ற சார்ப்பான வசங்களை அஜித் பேசும் போது தியேட்டர் அதிர்கிறது ... என்ன தான் மாஸ் ஹீரோ படமென்றாலும் படம் முழுவதும் அஜித் சகட்டுமேனிக்கு கையில் கிடைத்ததையெல்லாம் ( குண்டூசி உட்பட ) வைத்துக்கொண்டு எதிரிகளை ரத்த வெள்ளத்தில் வீழ்த்திக் கொண்டே போவது ஒரு லெவலுக்கு மேல் போரடிக்கிறது ... ப்ளாஷ்பேக் காட்சிகளுக்காகவாவது அஜித் கொஞ்சம் இளைத்திருக்கலாம்... 


இந்த படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என்னும் போது இரண்டு ஹீரோயின்கள் தேவையா என்று தெரியவில்லை ... கடத்தல் கும்பலில் சமீராவாக நடித்திருக்கும் ப்ருணா அப்துல்லா டூ பீஸில் வளைய வந்தாலும் ஏனோ எந்த கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அஜித்தின் அக்கா பெண் ஜாஸ்மினாக நடித்திருக்கும் பார்வதி ஓமனக்குட்டன் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் பரிதாபமாக செத்துப்போகிறார் ... பில்லா வில் நமீதா , நயன்தாராவை எல்லாம் பார்த்த கண்களுக்கு திருஷ்டி கழித்துவிட்டார்கள் ... 




வடநாட்டு இறக்குமதியாமான இரண்டு வில்லன்களும் வாட்டசாட்டமாக இருந்தும் , அஜித்திடம் அடி வாங்கி மரித்துப் போகிறார்கள் ... டிமொட்டியாக நடித்திருக்கும் வித்யுத்தின் அறிமுக காட்சி அற்புதம் ... அஜித்தின் நண்பனாக வருபவர் , கடத்தல்காரர் இளவரசு , அஜித்தின் மேல் காண்டோடு அலையும் சுந்தர்.கே.விஜயன் எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கிறார்கள் ... 


படத்தின் பாடல்களை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருந்தாலும் யுவனின் பின்னணி இசை பிரமாதம் ... " மதுரை பொண்ணு " பாடல் முணுக்க வைக்கிறது ... நா.முத்துக்குமார் வரிகளில் " உனக்குள்ளே மிருகம் " பாடல் வரிகளும் , அதை படமாக்கிய விதமும் அருமை ...  சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன ... வன்முறைக்காக படத்திற்கு  சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தும் பெண்கள் , சிறுவர்கள் கூட்டம் நிறையவே இருக்கிறது ...படம் டெக்னிக்கலி செம சௌண்டாக இருக்கிறது ... ஒளிப்பதிவாளர் ராஜசேகரும் , எடிட்டர் சுரேஷ் அர்சும் அதற்கு முக்கிய காரணகர்த்தாக்கள் ... 




பில்லாவை போலவே பில்லா 2 வும் மேக்கிங்கில் படு ஸ்டைலாக இருக்கிறது ... அதற்காக இயக்குன்ர் சக்ரிக்கு ஒரு சபாஷ் போடலாம் .... ஜாபருடன் சேர்ந்து இவர் எழுதியுள்ள வசனங்களும் சார்ப் அண்ட் ஸ்வீட் ... ஒவ்வொரு காலகட்டத்திலும் பில்லாவின் முன்னேற்றத்தை சரியாக பதிவு செய்திருக்கிறார்கள் ... சட்ட சட்டென்று பில்லா எடுக்கும் முடிவுகள் மூலமும் திரைக்கதையில் வேகத்தை கூட்டியிருக்கிறார்கள் ...  


ஹீரோயின்களை போலவே மற்ற குறைகளும் படத்தில் உள்ளன ... முதல் பாதியில் நாயகனின்  பாதிப்பு நிறையவே இருக்கிறது ... இரண்டு மணி நேரத்திற்குள் பில்லாவின் வாழ்க்கையை காட்டி விட வேண்டுமென்ற முனைப்பால் திரைக்கதையில் வேகத்தை விட  அவசரமே அதிகம் தெரிகிறது ... முதல்வர் கொலையில் நடக்கும் சதி , ஓமனக்குட்டனை அஜித் காப்பாற்றும் காட்சி போன்ற ஒன்றிரண்டை தவிர மற்றவையெல்லாம் பெரிய ட்விஸ்ட் ஏதுமில்லாமல் ப்ளாட்டாக இருக்கிறது ... அஜித் ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடிக்கும் , மற்றவர்களுக்கு பில்லா , மங்காத்தாவுக்கு ஒரு மாற்று குறைவென்றாலும் பில்லா 2 டல்லடிக்காத டானாக வே இருப்பான் ... நிச்சயம் ரசிகர்களுக்கு பில்லா 2 - டான் பார் ஃபேன்  ( DON FOR FAN ) 

ஸ்கோர் கார்ட் : 43  







10 July 2012

நான் ஈ - நான் ஸ்டாப் பேன்ட்ஸீ ...



மதொங்கா , மஹதீரா போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் , கவனிக்க வைத்த ட்ரைலர் இந்த இரண்டிற்காக படத்திற்கு சென்றால் சரியாக பயன்படுத்தப்பட்ட க்ராபிக்ஸ் , மரகதமணியின் இசை , செந்தில்குமாரின் ஒளிப்பதிவு ,  சுதீப்பின் நடிப்பு இவைகளெல்லாம் படத்தின் பால் நம்மை மேலும் ர்க்கின்றன ...

நானி (நானி>எதிர் வீட்டிலிருக்கும் பிந்துவை ">( சமந்தா;) காதலிக்கிறார் ... வெளியில் சொல்லாத காதல் பிந்துவுக்கும் நானியின் மேல் இருக்கிறது ... இதற்கிடையில் சமந்தாவை அடைய நினைக்கும் கோடீஸ்வரர்சுதீப் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் நானியை கொன்று விடுகிறார் ... மறு பிறவியில் ஈயாக உருவெடுக்கும் நானி சுதீப்பை கொன்று பழி தீர்த்தாரா ? தன் காதலியை வில்லனிடமிருந்து காப்பாற்றினாரா? என்பதே மீதிக் கதை ... கதையென்னவோ பல வருடங்களாக பார்த்துப் பழகிப் போன பழி வாங்கும் கதை தானென்றாலும் , மூன்றே முக்கியமான கேரக்டர்களை மட்டும் வைத்துக் கொண்டு அதிலும் குறிப்பாக வெறும் யை கதையின் நாயகனான நானியாகவே நம்மை பார்க்க வைத்த விதத்தில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தான் ஒரு அனுபவசாலி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ...


வெப்பம் படத்தில் முழு நேர ஹீரோவாக வந்தாலும் பெரிதாக கவராத நானி இந்த படத்தில் அரை மணி நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் ... சமந்தா க்யூட்டாக இருக்கிறார் , அளவாக நடிக்கிறார் , ஆனாலும் பட ஆரம்பத்திலிருந்தே சோகமாக இருப்பது போலவே படுகிறது ..


சுதீப்பை இந்த படத்திற்கு வில்லன் என்று சொல்வதை விட ஆன்டி  ஹீரோ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் ... கிராபிக்ஸ் என்ன தான் கலக்கலாக இருந்தாலும் இவர் மட்டும் நடிப்பில் சோடை போயிருந்தால் படம் சப்பென்று ஆகியிருக்கும் ... படத்தின் ஆரம்பத்தில் ஒரு ஆன்டியை கரக்ட் செய்வதில் ஆரம்பித்து உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் ஈயை விரட்டுவது , ஈக்கு பயந்து சவம் போல உடம்பெல்லாம் போர்த்திக் கொண்டு படுப்பது ,





ஏனோ தானோ என்று க்ராபிக்ஸ் செய்து எரிச்சலை கிளப்பாமல் அருமையாக க்ராபிக்ஸ் செய்து அட போட வைத்த மேக்ஷிமா குழிவினரே படத்திற்கு முதுகெழும்பு ...மரகதமணியின் பின்னணி இசையும் , செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் படத்தின் மற்ற முக்கிய பலங்கள் ... சந்தானம் மற்றும் கிரேஸியை  பற்றி சொல்வதற்கு படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை ...


சட்டென்று ஆரம்பித்து உணர்வதற்குள் முடிந்து போன நானி - சமந்தா காதல் , இது மாதிரி பேண்டசி படங்களுக்கு லாஜிக்  பார்க்க கூடாது என்றாலும் " ஐ வில் கில் யு " என்றெல்லாம் எழுதிக் காட்டி வில்லனை ஈ மிரட்டுவது உட்பட நம் ஆறாம் அறிவை அதிகமாய் நோண்டிப்  பார்க்கும் சில காட்சிகள் , சொத்துக்காக சுதீப் பார்ட்னரை கொல்லும் போது  வீசும் தெலுங்கு வாடை போன்ற சில குறைகள் படத்தில் இருந்தாலும் ,  
" கோஸ்ட் " படத்திலிருந்து கதையை தழுவியும் கூட அதில் ஈயை புகுத்தி அடுத்தடுத்து என்ன ஆகுமோ என்று நம்மை ஒன்ற வைத்த திரைக்கதை , யுனிவர்சல் தீம் உள்ள கதையை அருமையாக கையாண்ட விதம் , முக்கிய கதாபாத்திரங்களின் நடிப்பு , பின்னணி இசை , ஒளிப்பதிவு , க்ராபிக்ஸ் மற்றும் போரடிக்காமல் நம்மை கொண்டு செல்லும் பொழுதுபோக்கு அம்சங்கள் இவைகளெல்லாம் " நான் ஈ " யை நான் ஸ்டாப் பேன்ட்ஸீயாக பறக்க வைக்கின்றன ...


ஸ்கோர் கார்ட் - 43 

1 July 2012

அரையாண்டு சினிமா ( 2012 ) - ஓர் அலசல் ...


திரைப்பட தயாரிப்பாளர்கள் - தொழிலாளர்கள் இடையேயான இழுபறியால் இந்த  வருடம் பெரிய பட்ஜெட் படங்கள் பெரிதாய் வராத நிலையில் சிறிய முதலீட்டு படங்கள் நிறையவே ரிலீஸ் ஆகியிருந்தாலும் , அவற்றுள் வழக்கு எண் 18/9 , ராட்டினம் தவிர மற்றவையெல்லாம் வெறும் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியிருக்கின்றன ...

வேலாயுதத்தை தொடர்ந்து  நண்பன்   வணிக ரீதியான வெற்றியை கொடுத்ததோடு , வழக்கமான பாணியிலிருந்தும்  சற்று மாறி விஜய்க்கு தோள் கொடுத்திருக்கின்றான்   ...  வேட்டை யுடிவியிடம் பெரிய விலைக்கு விற்கப்பட்டாலும் , திரைக்கதையை பொறுத்தவரை வேகத்தடையாகி போனதால்  ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை பெறவில்லை ...  


மெரினா  மூலம் பாண்டிராஜ் ஒரு தயாரிப்பாளராக ஜெயித்த போதும் இயக்குனராக அவரின்   மெரினா  அலைகள்  கால் தொடவில்லை ...  எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள் - 2012  இல் இருந்த  தோனி அரவான் இரண்டுமே அதை பூர்த்தி செய்யாமல் போனதில் வருத்தமே , அதே போல நல்ல முயற்சியான  அம்புலி அரை  நிலவாய் போனதும் துரதிருஷ்டமே ... 

கழுகு பறந்த உயரம் குறைவாக இருந்தாலும் பாடல்கள் மற்றும் எடுக்கப்பட்ட விதத்தால் இயக்குனர் சத்ய சிவாவிற்கு நல்ல பெயரோடு சேர்த்து அடுத்த படத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கிறது ... குறும்படமாக நல்ல பெயரை பெற்ற காதலில் சொதப்புவது எப்படி படமாகவும் சொதப்பாமல் வசூலை பெற்று குறும்படம் எடுப்பவர்களுக்கிடையேயும் ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது ... 



வெறும் பாடல்களும் , பப்ளிசிட்டியும் மட்டுமே படம் ஓடுவதற்கு போதுமானதாகி விடாது என்பதை முப்பொழுதும் உன் கற்பனைகள் , 3 இரண்டுமே நிரூபித்திருக்கின்றன , அதிலும்  3 - ஐஸ்வர்யா தனுஷின் கொலவெறி  என்று சொல்லுமளவிற்கு ரசிகர்களை வெறுப்பேற்றி விட்டது ...  கர்ணன்  நூறு நாட்களுக்கும் மேல் ஓடி காலத்தால் அழியாமல் எல்லோர் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்துவிட்டான் ...

ராஜேஷ் தனக்கு எது வருமோ அதை சரியாக செய்து   ஒரு கல் ஒரு கண்ணாடி  யை டபுள் ஓகே செய்துவிட்டார் . இவருடைய பாச்சா அடுத்தமுறை பலிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . இதே பாணிக்கு பெயர் போன சுந்தர்.சி யின்  கலகலப்பு வெற்றி பெற்றதிலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை ... அர்பன் ரொமாண்டிக் ஸ்டோரியை ஸ்டைலாக சொன்ன விதத்தில்  லீலை ஏமாற்றவில்லை என்றே சொல்லலாம்... 


தரமான படங்களின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் தீராத பசியை தீர்த்து வைத்த வகையில்  வழக்கு எண் 18/9 - வளர்ச்சிக்கான பாதை ...  ராட்டினம் சுற்றலாம்  என்ற போதும் அழகி , விடிவி வரிசையில் ஒரு படம் என்றெல்லாம் சொல்லுமளவிற்கு பெரிதாக ஒன்றுமில்லை .  கிருஷ்ணவேணி பஞ்சாலை  நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தால் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருப்பாள்.

பில்லாவின் ரிலீஸ் தேதியையே ஒத்திப் போடுமளவிற்கு ஓவர்
பில்ட் அப்புடன் வந்த சகுனி ரசிகர்களை சலிப்பூட்டியதை தவிர வேறோன்றும் உருப்படியாக செய்யவில்லை ... வருட முடிவிற்குள் வருமென்று எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களுள் கமலின் விஸ்வரூபம் , அஜித் நடிப்பில் பில்லா 2 , விஜய் நடிப்பில் துப்பாக்கி , சூர்யா நடிப்பில் மாற்றான் இவைகளெல்லாம் மிக முக்கியமானவை ... 



Related Posts Plugin for WordPress, Blogger...