12 December 2012

12.12.12 ...



மிழ் சினிமாவில் சிவாஜிக்கு பின் நடிப்பில் ஏற்பட்ட வெற்றிடத்தை கமல் நிரப்ப , எம்.ஜி.ஆருக்கு பின் வசூலில் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்று வரை நிரப்பிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . எனக்கு தெரிந்து ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்த பிறகு  விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே  வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்திருக்கும் . அதோடு நஷ்டமடைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமல் எடுத்து வரும்  பரீட்சார்த்த முயற்சிகளை சமன் செய்யும் விதமாக ரஜினியின் கமர்சியல் படங்கள் அமைந்து வந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது .
வேறு எந்த ஒரு நடிகருக்கும் இவருக்கு வாய்த்தது போல உணர்ச்சிப்பூர்வமான ரசிகர் பட்டாளம் வாய்த்தது இல்லை . 12.12.12 அன்று  பிறந்த நாள் காணும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எல்லோர் சார்பாகவும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்வதோடு எனக்கு பிடித்த சூப்பர் ஸ்டாரின் 12 படங்களையும் இதோ வரிசைப்படுத்தியுள்ளேன் . உங்களுக்கு பிடித்த 12 படங்கள் என்னென்ன ?

மூன்று முடிச்சு 

கமல் , ரஜினி இருவர் நடிப்பில் அவர்களின் குரு கே.பாலச்சந்தர் இயக்கிய படம் . காதலுக்காக நண்பனையே கொலை செய்யும் கதாபாத்திரத்தில் கலக்கியிருப்பார் ரஜினி . ஆற்றில் விழுந்து கமல் இறந்த பிறகு ரஜினி பார்க்கும் குரூர பார்வை இன்றும் நம் கண்களில் நிற்கும் . சிகரெட்டை தூக்கி போட்டு பிடிக்கும் ஸ்டைல் , நடை இவற்றோடு தன் சிற்றன்னையாக ஸ்ரீதேவியே வந்த பிறகு நன்றாக நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் ரஜினி...

16 வயதினிலே 

தமிழ் சினிமாவின் சிறந்த பத்து படங்களில் நிச்சயம் இடம்பிடிக்கும் படம் பாரதிராஜாவின் " 16 வயதினிலே " . சப்பாணியாக கமல் , மயிலாக ஸ்ரீதேவி இருவரின் நடிப்பும் எப்படி நம் மனதில்  பதிந்ததோ அதே போல " இது எப்படி இருக்கு " என்று வசனம் பேசும் பரட்டையாக ரஜினியின் நடிப்பும் மனதில் என்றென்றும் பதிந்திருக்கும் ...

ஆறிலிருந்து அறுபது வரை 

ரஜினியை வைத்து 25 படங்கள் இயக்கிய பெருமை இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கு மட்டுமே உண்டு . ரஜினியை வைத்து அவர் முரட்டுக்காளை , பாயும்புலி என்று எத்தனையோ கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு பாசமிகு அண்ணனாக நடிப்பில் ரஜினியின் மற்றொரு பரிமாணத்தை காட்டும் படம் ...

முள்ளும் மலரும் 

விசுவலாக கதை சொல்வதில் முன்னோடி மகேந்திரன் . அவர் இயக்கத்தில் வழக்கமான கோபக்கார இளைஞன் வேடமென்றாலும் தன் யதார்த்தமான நடிப்பால் அதற்கு தனி முத்திரையை கொடுத்திருப்பார் ரஜினி . தங்கை ஷோபாவிற்காக சரத்பாபுவிடம் பேசும் இடம் சூப்பர் ஸ்டார்  நடிப்பில் ஒரு மைல்கல் ...

பில்லா 

ரஜினி நடித்த அமிதாப்பின் பல ரீ மேக் படங்களில் எத்தனையோ  வருடங்கள் கழித்து மீண்டும் வேறொரு நடிகரை வைத்து ரீ மேக் செய்த போதும்  மெகா ஹிட்டடித்த படம் பில்லா . மிரட்டும் டான் , மிரளும் அப்பாவி என்று இரண்டு வேடங்களிலும் புகுந்து விளையாடிருப்பார் சூப்பர் ஸ்டார் .

நெற்றிக்கண் 

காமுக அப்பா , ஒழுக்கமான பையன் என்று இரண்டு வேடங்களில் ரஜினி கலக்கிய படம் . " இது கட்டில் , நீ பொண்ணு , நான் பையன் " என்று வசனம் பேசிய படியே குறும்புப்பார்வை பார்க்கும் கிழட்டு ரஜினியின் நினைவுகள் இன்றும் இளமையாக நெஞ்சில் நிற்கின்றன ...

தில்லு முல்லு 

ஆக்சன் ஹீரோவாக மட்டும் வளம் வந்து கொண்டிருந்த ரஜினியை முழு நீள காமெடியில் கலக்க வைத்திருப்பார் கே.பாலச்சந்தர் . சந்திரன் , இந்திரன் என்று மாறி மாறி ரஜினி தேங்காய் ஸ்ரீனிவாசனை ஏமாற்றும் சீன்கள் உம்மனாமூஞ்சியையும் சிரிக்க வைத்துவிடும் . எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ரஜினி படம் . இப்பொழுது மிர்ச்சி சிவாவை வைத்து இப்படத்தை ரீ மேக் செய்து கொண்டிருக்கிறார்கள் , படம் பெயரை கெடுக்காமல் இருக்கிறதா என்று பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும் ...

ஜானி 

மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி நடித்த மற்றுமொரு மனதில் நிற்கும் படம் ஜானி . முடி திருத்துபவர் , திருடன் என்று இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நிறைய வித்தியாசம் காட்டியிருப்பார் ரஜினி . ரஜினி - ஸ்ரீதேவி காதல் காட்சிகள் இன்றும் இனிப்பவை . இசைஞானியின் இசை படத்திற்கு பெரிய பலம் ...

தளபதி 

வழக்கமான ஸ்டைல்கள் எதுவும் இல்லாவிட்டாலும் ரஜினியை ரசிக்க வைத்திருப்பார் மணிரத்னம் . படம் முழுவதும் ரஜினியின் நடிப்பு , மம்முட்டியுடனான காம்பினேஷன் , " சுந்தரி " பாடலில் ரஜினியின் கெட்டப் என்று எல்லாமே படத்தின் ஹைலெட் . இசை , ஒளிப்பதிவு இவற்றிற்க்காகவும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடிய படம்...

அண்ணாமலை 

ரஜினி நண்பனுக்கு நண்பன் , எதிரிக்கு எதிரி என்பதை அனைவருக்கும் உணர்த்திய படம் . படத்தில் தீய அரசியவாதிக்கு எதிராக ரஜினி குரல் கொடுக்க நிஜத்திலும் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வர வேண்டுமென்று ரசிகர்களை ஏங்க வைத்த , வைத்துக்கொண்டிருக்கின்ற படம் ...

பாட்ஷா 

சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலுக்கு மிக கச்சிதமாக பொருந்தும்  படம் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளி வந்த பாட்ஷா . கமல் ரசிகனான  என்னை ரஜினியின் பக்கம் அதிகமாக ஈர்த்த படம் . " பாட்ஷா , பாட்ஷா " என்று பின்னணியில்  அதிர சூப்பர் ஸ்டார் நடந்து வரும் அழகுக்காகவே படத்தை பல தடவை பார்க்கலாம் ...

சிவாஜி 

ஷங்கரின் வழக்கமான சமூக சீர்திருத்த பாணி படம் தானென்றாலும் விறு விறு திரைக்கதையால் நம்மை கட்டிப்போடும் படம் . குறிப்பாக சில சீன்களே வந்தாலும் மொட்டை தலையுடன் வளம் வரும் ரஜினி சும்மா அரங்கத்தையே அதிரவிட்டிருப்பார் . ரஹ்மான் இசையில்  பாடல்கள் , விவேக் காமெடி , கிராபிக்ஸ் இவையெல்லாம் படத்தின் ஹைலைட் ... இன்று சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளை முன்னிட்டு 3 டி யில் வந்து அனைவரையும் மீண்டும் குஷிப்படுத்த போகிறது சிவாஜி ...










No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...