29 January 2013

விஸ்வரூப கேள்வி - பதில் ...




எனது முந்தைய பதிவில்  விஸ்வரூபம் படத்திற்கு எதிராக எழுந்த ஆர்ப்பாட்டத்தையும் , அதை தொடர்ந்து விதிக்கப்பட்ட தடையையும் குறித்து எழுதியிருந்தேன் . அந்த பதிவில் நான் கருத்து சுதந்திரம் காக்கப்பட வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததை எதிர்த்து ஒருவர் பின்னூட்டம் இட்டிருந்தார் . அவர் கேட்டிருந்த கேள்விகளும்  , அதற்கான எனது பதில்களும் இதோ :

 Anonymous said...
!) ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய 
 கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999
 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக 
கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய
கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில் 
நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம் 
இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?

2) குஜராத் கலவரத்தில் நடந்த கொடுமைகளை மையபடுத்தி  
எடுக்கப்பட்ட பர்ஜானியா,பிராக் போன்ற படங்கள் சமூக 
ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று தடைசெய்யபட்டதே 
அப்போது கருத்துசுதந்திரம் பற்றி பேச யாரும் 
முன்வரவில்லையே? 

3) கமல்ஹாசனின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நல்லவர்களே 
இதே கமல் நாளை பகவகீதையை தீவிரவாத நூலாகவும்,கோவில்கள் 
ஆசிரமங்களை தீவிரவாதபயிற்சி முகாம்களாகவும்,ஹிந்துக்களை 
தீவிரவாதிகளாகவும் சித்தரித்து படம் எடுத்தால் அதனை கண்டித்து 
நிச்சயம் பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் வீதிக்கு 
வருவார்கள்.அவர்களை கண்டித்து ஸ்டேடஸ் போட 
தைரியம் இருக்கிறதா?


4) நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் இலங்கையில் 
நடந்தது இனப்படுகொலைகளாக தெரியலாம்.ஆனால் 
அந்நாட்டுமக்களின் பார்வையில் அது  ஒரு தீவிரவாதத்திற்கு 
எதிரான அரசின் சுதந்திரப்போர்.
அதில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவத்தினர் தியாகிகள்.
கமல்ஹாசன் ஒருவேளை சிங்கள படையின் தளபதியாக 
பொறுப்பேற்று ஈழப்புலிகளை வேட்டையாடி இலங்கையை 
ஆபத்திலிருந்து காப்பாற்றுவதுபோல் படமெடுத்தால் 
அதனை இருகரமேந்தி வரவேற்க நீங்கள் தயாரா?

5) சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவைத்த 
2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த சம்பங்கள் சினிமாவை மிஞ்சும் 
அளவிற்கு சுவாரஸ்யம் உள்ளவை.ஆனால் அதில் தொடர்புடைய 
அரசியல் தலைவர்களை மையபடுத்தி ஒரு படம் எடுக்க 
எந்த சினிமாகாரனிற்க்காவது தைரியம் உள்ளதா?

6) உசாமா இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்று சொல்லி 
லட்சகணக்கான அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா வீசிய 
குண்டில் தன் குடும்பத்தை இழந்த அப்பாவி ஆப்கான் இளைஞன் 
அமெரிக்க ராணுவத்தை பழிக்குபழி வாங்குவதாக படம் எடுத்து 
அதில் அப்கான் இளைஞனாக நடிக்க கமல் மட்டுமல்ல எந்த 
கலைகூத்தாடிக்காவது தைரியம் இருக்கா?

7) வெறும் 20 பேர் மிரட்டலுக்கு அரசு பணிந்து படத்தை தடைசெய்வதா?
என்று சிறுபிள்ளைதனமாக ஒருவர் கேள்விகேட்க்கிறார்.சுமார் 
80 லட்சம் முஸ்லீம் மக்கள் வாழும் தமிழகத்தில் அவர்கள் நடத்தும் 
போராட்டம் என்பது இவருக்கு இவ்வளவு அற்பமாக தெரிகிறது.
முடிவுகளை எடுப்பதில் மிகவும் உறுதியானவர் முதல்வர் ஜே 
என்பது சிறுபிள்ளைக்குகூட தெரியும்.அப்படி பட்டவர் இந்த 
விஷயத்தில் இப்படி ஒரு தடை முடிவை எடுத்திருக்கும்போதே 
அதன் தாக்கம் என்ன என்பது இவருக்கு தெரியவில்லையா?

ஒருவரின் கலைசுதந்திரம் காக்கப்படவேண்டும் என்றுபேச 
ஒருவேளை மெய்ஞானம் தேவைப்படலாம். ஆனால் 
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனஉணர்வுகளை 
புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் போதும்....


பெயரில்லா அல்லது பெயர் சொல்ல விரும்பாத நண்பரே உங்கள் கேள்விகளிலும் ஒரு நியாயம் இருக்கிறது , அதற்கு நான் தருகின்ற பதில்களை நடுநிலையோடு கேட்பீர்கள் என்கிற நம்பிக்கையில் சொல்கிறேன்.

1. நீங்கள் குறிப்பிட்ட டேம் 999 போன்ற படங்கள் இந்தியாவில் உள்ள இரண்டு மாநிலங்களுக்கிடையே நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையையோ அல்லது நடந்து முடிந்த கலவரங்களை  மேலும் ஊதி  பெரிதாக்குவது  போலவோ நீதிமன்றத்திற்கு பட்டதால் தடையை நீக்கவில்லை , ஆனால் தமிழகத்தில் இந்து - முஸ்லிம் பிரச்னை நடந்து கொண்டிருக்கிறதா ? அல்லது இந்த படம் அதனை ஊக்குவிக்கறதா ? சொல்லப்போனால் இது போன்ற எதிர்ப்புகள் தான் பிரிவினையை தூண்ட காரணமாய் அமைந்துவிடுகின்றன . மேலும் டா வின்சி கோட் , ஒரே ஒரு கிராமத்திலே போன்ற படங்களை தடை செய்ய முடியாது என்று கோர்டே உத்தரவிட்டதோடு , ஒரு சிலரின் சொந்த விருப்பு , வெறுப்புக்காக சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தணிக்கை செய்யப்பட படத்தை திரையிட விடாமல் தடுக்க முடியாது என்றும் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறது ...

2. இதற்கும் மேற்சொன்ன பதிலே பொருந்தும் ...

3. இந்துக்கள் கமல் படங்களை எதிர்த்திருந்தால் அன்பே சிவம் , தசாவதாரம் என்று ஒரு படமும் வந்திருக்காது . கமல் பகுத்தறிவு என்ற போர்வையில் இந்துக்களை தான் தன்  படங்களின் வாயிலாகவும் , பேட்டிகள் மூலமாகவும் தாக்கி வந்திருக்கிறார் . இந்துக்களின் சகிப்புத்தன்மையும் , மனப்பக்குவமுமே அவரை காத்து வந்திருக்கிறது . நீங்கள் சொல்வது போல ஹிந்து தீவிரவாதி (!) எவனாவது பகவத் கீதையை படித்து விட்டு கொலை செய்வது போல ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் அதை இயக்குனர்களுக்கு கொடுக்கலாம் . படத்தில் தான் காட்டிய எல்லா காட்சிகளுக்கும் உரிய ஆதாரங்களை கமல் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார் ...

4.நீங்கள் பிரச்சனையை திசை திருப்ப பார்க்கிறீர்கள் . அப்படியே  ஒரு வாதத்திற்கு எடுத்துக்கொண்டாலும் இலங்கையில் புலிகளின் ஈழ போராட்டத்துக்கு அங்குள்ள முஸ்லிம்கள் முட்டுக்கட்டையாக இருந்ததும் , அதனால் அவர்களுக்குள்ளேயும் கொலைகள் நடந்தாகவும் தான் வரலாறு சொல்கிறது ...

5. இது நல்ல கேள்வி . அப்படி ஒரு படம் வந்தால் சந்தோசம் தான் . அதே போல அரசியல்வாதிகளும் , போலீஸ்காரர்களும்  படங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலும் ஒரு படம் வெளியே வர முடியாது . அவர்களை அநியாத்துக்கு வில்லன்களாக மட்டும் தான் காட்டி  வருகிறார்கள் .

6. முதலில் ஆப்கான் தீவிரவாதிகள் எந்த முஸ்லீமையும் கொன்றதில்லையா ? அப்போது அங்கே செத்தவர்கள் எல்லாம் எந்த மதத்தினர் ? தலிபானுக்கு எதிராக குரல் கொடுத்ததால் கொடூரமாக சுடப்பட்ட மலிமா எந்த மதம் ? அமெரிக்கா ஆப்கானை தனியாகவா அழித்தார்கள் , அதற்கு உதவி செய்த சவூதி அரேபியாவும் , பாகிஸ்தானும்  இஸ்லாமிய நாடுகள் இல்லையா ? ஆப்கான் தீவிரவாதிகள் பற்றிய படத்தை பார்த்து விட்டு இங்குள்ள முஸ்லீம்கள் ஏன்  கோபப்பட  வேண்டும் ? அப்பொழுது அந்த தீவிரவாதத்தை அவர்கள் ஆதரிக்கிறார்களா ? இரட்டை கோபுரத்தை தகர்த்து பல உயிர்களை கொன்ற போது ஏன் அதை எதிர்க்கவில்லை ? காஷ்மீரில் இருந்து சொந்த நாட்டு மக்கள், பண்டிட்டுகள், படுகொலை செய்யப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டபோது, இப்போது நடுநிலை, ஜனநாயக உரிமை, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை என்று பேசும் ஒருசில இஸ்லாமியர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளும் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இந்த கேள்விகளுக்கான பதில்களை யோசிக்க ஆரம்பித்தால் உண்மை புரியும் ...

7. மனதை தொட்டு சொல்லுங்கள் எல்லா முஸ்லீம்களும் படத்தை எதிர்க்கிறார்களா ? மனுஷ்யபுத்திரன் , ஜாவேத் அக்தர் உட்பட  பல பக்குவமுள்ள முஸ்லீம்கள் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பேசி வருவது உங்கள் காதுகளில் விழ வில்லையா ? பொது மக்களில் எவ்வளவோ முஸ்லீம்கள்  இணைய தளம் மூலம் படத்தை தடை செய்யக் கோரி எழுந்த ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து தங்களின் அதிருப்தியையும்  , கமலுக்கான தங்களின் ஆதரவையும் தெரிவித்து வருவதை நீங்கள் பார்க்கவில்லையா ? நீங்கள் சொல்வது போல தற்போதைய முதல்வர் முடிவுகளை எடுப்பதில் துணிச்சலும் , உறுதியும் உடையவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை . இதே முதல்வர் 2004 ஆம் ஆண்டு அதே மன உறுதியுடனும் , துணிச்சலுடனும் கொண்டு வந்த மத மாற்ற தடை சட்டத்துக்கு பிறகு ஏன் அதரவு தெரிவிக்கவில்லை ? இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மற்ற மாநிலங்களில் கூட படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இங்கே மட்டும் தடை எனும் போதே யோசிக்க வேண்டாமா ? ...

கடைசியாக , எதை வைத்து ஒடுக்கப்பட்ட சமூகம் என சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை . அமெரிக்காவில் ரிலீசான படத்திற்காக பொது மக்களின் இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் இங்கே சென்னையையே சில நாட்கள் ஸ்தம்பிக்க வைத்ததோடு , இந்தியாவே திரும்பிப்பார்க்கும் ஒரு கலைஞனின் 100 கோடி முதலீட்டு படத்தை அவன் பிறந்த தமிழ்நாட்டிலேயே ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் அளவிற்கு வல்லமை படைத்தவர்கள்  ஒடுக்கப்பட்ட சமூகத்தினரா ?! . ஒரு வேளை இந்தியாவில் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்தர்கள் எந்த கால கட்டத்தில் என்று தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும் ...

ஒரு படம் ஒரு சாராருக்கு பிடிக்கவில்லையென்றால் அதை பார்க்காமல் இருப்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் அதை யாருமே பார்க்கக் கூடாது என்று தடுப்பதற்கு உரிமை இல்லை . என் முந்தைய பதிவில் சொன்னது போல ஒரு படத்தை பார்த்து விட்டு சகோதரர்களாக பழகி வரும்  இந்து - முஸ்லீம்கள் இடையே பிரிவினை வரும் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது . தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள் தான் அதற்கான வாய்ப்பை கொடுக்குமே தவிர கமல் எடுத்த படமல்ல ...

உண்மையிலேயே தொடர்ந்து ஒரு சமூகத்தை தவறுதலாக சித்தரிப்பது போல படங்கள் வந்தால் அதை தணிக்கை செய்வதில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க சொல்லி மத்திய  அரசிடம் மனு கொடுக்கலாமே ஒழிய தணிக்கை செய்யப்பட்டு ரிலீசா வதற்கு முதல் நாள் தடுப்பது என்பது நியாயமானதாக தெரியவில்லை . இந்த தடையை பார்த்து விட்டு அடுத்து ஆதி பகவன் படத்தை போட்டுக்காட்ட வேண்டுமென இந்து அமைப்புகள் மனு கொடுத்துள்ளன . இப்படி ஒவ்வொரு அமைப்பினரும் மனு கொடுக்க ஆரம்பித்தால் யாரும் படம் எடுக்க முடியாது . எனவே தயவுசெய்து சினிமாவை சினிமாவாக பாருங்கள் ...


25 January 2013

விஸ்வரூபம் ...


ன்று இந்நேரம் விஸ்வரூபம் படத்திற்கான விமர்சனத்தை எழுதிக் கொண்டிருக்க வேண்டிய நான் படம் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்ட விவகாரத்தை பற்றி எழுதிக்கொண்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.  விஸ்வரூபம் என்று தன் படத்திற்கு கமல்ஹாசன் எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ தெரியவில்லை படம் வெளிவருவதற்கு முன்னரே எக்கச்சக்க பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து ஆட ஆரம்பித்து விட்டன  .

படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்னரே டி.டி.எச் இல் திரையிட கமல் வகுத்த திட்டம் திரையரங்கு உரிமையாளர்களின் குறுக்கீடுகளால் தவுடுபொடியானது . ஜனவரி 11 வரவேண்டிய படம் ஒரு வழியாக பல சமரச முயற்சிகளுக்கு பிறகு ஜனவரி  25 இல் தியேட்டர்களிலும் , பிப்ரவரி 2 இல் டி.டி.எச் இலும் ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டு தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கான டிக்கட்டுகளும் புக் செய்யப்பட்டுவிட்டன.  இந்த நிலையில் பிரத்தியேகமாக தங்களுக்கு காட்டப்பட்ட படத்தின் ப்ரிவியு வை பார்த்து விட்டு அது இஸ்லாமியர்களையும் , இஸ்லாமிய மதத்தையும் தவறுதலாக சித்தரிக்கிறது என்று சொல்லி படத்தின் ரிலீசை தடை செய்யக்கோரி ஒரு அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் 15 நாட்களுக்கு படத்தின் ரிலீசி ற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதும் , அதை எதிர்த்து கமல் கொடுத்த்த மனுவை விசாரித்த நீதிபதி 26 ஆம் தேதி படத்தை பார்த்து விட்டு 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததே.

கமல் மட்டுமல்லாமல் அந்த படத்தை காண ஆவலாக காத்துக் கொண்டிருந்த கோடானு கோடி  தமிழர்களும்   இதற்கான தீர்ப்பை எந்த நேரமும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு , சென்சார் செய்யப்பட்டு , வினியோகஸ்தர்களாலும் , தியேட்டர்காரர்களாலும்  பல கோடி செலவில் வாங்கப்பட்டு , படம் பார்க்க விரும்புகிறவர்களால் புக் செய்யப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படத்தை  சட்டம் ஒழுங்கு குலையும் என்கிற ஒரு காரணத்தை சொல்லி அரசு தடை செய்திருப்பது கமலை மட்டுமல்ல நல்ல சினிமாவை நேசிக்கிற ஒவ்வொருவனையும் பெரிய வேதனைக்கு உள்ளாக்கியிறுக்கிறது .

இந்த நடவடிக்கை விஸ்வரூபம்   படத்தை தடை செய்யவேண்டுமென்று ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமே திரண்டு வந்தது போல ஒரு மாயையை ஏற்படுத்துகிறது . ஏனெனில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மலேசியா விலேயே படம் ரிலஸ் ஆகியிருப்பதொடு அனைவரின் வரவேற்ப்பையும் பெற்றிருப்பதே உண்மை  . 28 ஆம் தேதி தீர்ப்பு கமலுக்கு சாதகமாக இருந்து படம் ரிலீசானாலும் இந்த 3 நாள் விடுமுறையில் கிடைத்த ஒப்பனிங் கிடைப்பது சந்தேகமே , அதோடு மட்டுமல்லாமல் படம் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகி விட்டதால் திருட்டு வி.சி .டி வந்து வியாபாரத்தை கெடுக்கப் போவதும் உறுதி .

இதெல்லாம் தெரிந்தும் படம் தடை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது அதற்குண்டான நியாயமான காரணத்தை ஆராய வேண்டியதும் நம் கடமை . படம் மிலாடி நபி அன்று ரிலீஸ் ஆக இருந்ததும் , அதற்கு அடுத்த நாள் குடியரசு தினம் என்பதால் காவல் துறையின் கவனமெல்லாம் அங்கிருக்கும் என்பதாலும் , பட ரிலீசிற்க்கு  பிறகு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் காவல் துறையால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தாமல் முடியாமல் போவதற்கு நிறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது . அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய அமைப்பினர் படத்தை பார்த்து விட்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதையும்  மறுக்க முடியாது .


கமலுக்கும் , சர்ச்சைக்கும் தூரமில்லை எனவே இது கூட ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்றும் , கமல் புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரத்தை அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு பேசிவிட்டார் அதற்கு கிடைத்த பரிசு தான் இது எனவும் சிலர் கூறுகிறார்கள் . தன்  வளர்ச்சியில் இத்தனை  நாள் கூட இருந்த விநியோகஸ்தர்களையும் , தியேட்டர் உரிமையாளர்களையும் தன் சுய லாபத்துக்காக ஒரு நொடியில் கமல் மறந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மேல் வலுவாக இருப்பதால் திரையுலகில் நிறைய பேர் இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்  .

ரோஜா விற்கு பிறகு கடந்த இருபது ஆண்டு காலமாகவே இஸ்லாமியர்கள் படங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள் , அதனால் ஏற்பட்ட அதிருப்திகளின் வெளிப்பாடே இந்த எதிர்ப்புக்கு காரணம் என்பது ஒரு சாரரின் வாதம்  . இது போல எவ்வளவோ காரணங்களை அலசினாலும்    ஒரு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டிய   சென்சார் போர்டே படத்தை பார்த்து விட்டு  யு  ஏ சான்றிதழ் கொடுத்த பிறகு இது போன்ற  தடை தேவை தானா என்பது நம் கண் முன் நிற்கும் இமாலய கேள்வி .

படத்தை பார்க்காததால் அது எந்த வகையில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது போல அமைந்துள்ளது என்பதை பற்றி கருத்து கூற முடியாவிட்டாலும் கமல் அதை இஸ்லாமிய அமைப்பினருக்கு ரிலீசுக்கு முன்னரே போட்டுக்காட்டியதையும் , தடை செய்யக்கோரி சில அமைப்பினர்  மட்டுமே முனைப்பு காட்டி வருவதையும்  வைத்து பார்க்கும் போது படம் நிச்சயம் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருக்காது என்கிற நம்பிக்கை இருக்கிறது .

அதோடு மட்டுமல்லாமல் ஒரு சினிமாவை பார்த்து விட்டுத்தான் ஒருவன்  சமூகத்தின் மீதான பார்வையை வகுத்துக்கொள்கிறான் என்று சொல்ல முடியாது . பொழுதுபோக்கையும் மீறி சினிமாவை ரசிக்கலாம் , ஆராதிக்கலாம் அதற்காக அதில்  காட்டுவதெல்லாம் நிஜம் என்று யாரும் நினைக்க மாட்டார்கள் .  ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னரும் இப்படி திரையிட்டு ஒப்புதழ் பெற வேண்டுமென ஒவ்வொரு அமைப்பினரும் எதிர்பார்த்தால் யாருமே சினிமா எடுக்க முடியாது...
.
" இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் " என்கிற படம் அமெரிக்காவில் ரிலீசாகி உலகமெங்கும் பெரிய சர்ச்சையையும் , வன்முறையையும் ஏற்படுத்தியது . வன்முறை தவறென்றாலும் அதற்க்கெதிரான போராட்டங்கள் நியாயமானதே என்று படம் பார்த்தவர்கள் சொன்னார்கள் . ஆனால் படம் பற்றி சிறிதும் அறிந்திராதவர்கள் கூட  உலக அளவிலான எதிர்ப்புக்கு பிறகே படத்தை பார்த்திருக்கிறார்கள் . அதே  போல துப்பாக்கி படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது  சில சீன்களை நீக்க சொல்லி ஆர்ப்பாட்டம் நடந்தது . அதற்கு அடிபணிந்து சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டதோடு படத்தின் சில சீன்களையும் நீக்கினார்கள். இந்தியாவில் வேறங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது  நாமிருப்பது தமிழ்நாட்டில் தானா என்கிற  அச்சத்தை நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறது  ...

ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லி படங்களை முடக்க நினைத்தால் இந்த துறையை நம்பியிறுக்கும் லட்சோப லட்ச மக்களின் எதிர்காலம் என்னவாவது என்கிற கவலையும் நம்மை தொத்திக் கொள்கிறது . எப்படி தனது ஆக்கங்கள் எந்தவொரு சாதியையோ , மதத்தையோ , இனத்தையோ , சமூகத்தையோ இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு கலைஞனின் கடமையோ அதே போல சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டியதும் பொது மக்களின் கடமை . இதற்கான எல்லைகளை அவரவர்கள் மீறும் போது  பிரச்சனை வெடிக்கிறது ...


பணத்தால் மட்டுமல்லாமல் , மனதாலும்  பாதிக்கப்பட்டுள்ள கமல் தனது அறிக்கையில் " நான்  இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல , படத்தை பார்த்து விட்டு பாராட்டியவர்கள் பிறகு ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை , நான் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடும்
" இந்தியா ஹார்மோனி " என்கிற அமைப்பில் இருக்கிறேன் , இந்த படத்தை சுய லாபத்துக்காக சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள் , எனவே இந்த படத்திற்கான தடையை நீக்க வேண்டும் " என்று மனமுறுக கேட்டுக் கொண்டுள்ளார் . இது வரை திரையுலகில்  யாரும் வாய் திறக்காத வேளையிலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கமலுக்கு ஆதரவுக்கரம்  நீட்டியுள்ளார் ...

இவரையும் , பிரகாஷ்ராஜையும்  தவிர கமல் தான் எங்களுக்கு முன்னோடி , குரு என்றெல்லாம் ஆஹோ , ஓஹோ வென்று புகழும் யாரும்  வாயே திறக்காதது ஆச்சர்யமே . எழுத்தாளர்களில் ஞானியும் , முஸ்லீமாக இருந்தாலும் மனுஷ்யபுத்திரனும்  இந்த தடையை வன்மையாக கண்டித்துள்ளார்கள்  .

சினிமாவில் கதைக்கேற்றவாறு காட்சிகளை அமைப்பது ஒவ்வொரு கலைஞனின் கடமை . அது ஒரு தரப்பினருக்கு அதிருப்தியாக இருக்கும் பட்சத்தில் அதை சமரசமாக பேசித் தீர்த்து சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க சொல்லலாமே தவிர இது போன்ற முழு தடையை கோருவது கருத்து  சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது . எல்லா தரப்பையும் அலசி ஆராய்ந்த பிறகு தான் சென்சார் போர்ட் ஒ.கே சொல்கிறது அதையும் மீறி மாநில அளவில் படத்தை எதிர்ப்பதை விட்டு விட்டு சென்சார் போர்டுக்கு தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியதே நியாயமான செயல் என்றும் பத்திரிக்கைகளும் , டி .வி மீடியாக்களும் சுட்டிக் காட்டுகின்றன ...

இது  ஏதோ கமல் மற்றும் அவர் ரசிகர்கள் சம்பந்தப்பட் பிரச்சனை  மட்டும் என்று நினைத்து ஒதுக்கி விட முடியாது . ஏனெனில் இந்த பிரச்சனை  நாளை குடியரசு தினத்தை கொண்டாடவிறுக்கும் ஒவ்வொரு குடிமகனின் கருத்து சுதந்திரத்துக்கும் விடப்பட்டிருக்கும் சவால் . கமல் போல சட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடானு கோடி இந்தியர்களும் இதற்கான தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் . சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதற்காக படத்தை தடை செய்யும் தைரியமான முடிவை எடுத்த தமிழக அரசு அதே போல நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு படம் வெளியிடப்பட்டால்  இதே போன்றதொரு நடவடிக்கையை எடுத்து படத்தை காண வருபவர்களுக்கு  எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் நிறையவே இருக்கிறது . அந்த நம்பிக்கையுடன் கமலோடு சேர்த்து நாமும் காத்திருப்போம் ...


22 January 2013

என்று தணியும் திராவிட மோகம் ... ?!

இந்த முறை புத்தக கண்காட்சிக்கு போக முடியாத குறையை ஓரளவு தீர்த்துவைத்தது கீழ்கண்ட பதிவு . வெகு நாட்களாகவே நம் தமிழ்நாட்டில் மட்டும் தான் சுய லாபத்திற்காக ஆரிய - திராவிட வாதத்தை தேவையில்லாமல் தூக்கிப்பிடித்துக் கொண்டு தமிழர்களின் ஒற்றுமையையும் , வளர்ச்சியையும் குழைக்கிறார்கள் என்கிற மனத்தாங்கல் எனக்கு உண்டு . நம்மை சுற்றியிருக்கும் எந்த மாநிலமும் இதைப் போல பிதற்றிக்கொண்டு திரியாமல் ஒற்றுமையாக அவரவர்கள் மாநில  வளர்ச்சியை பார்த்துக்கொள்கிறார்கள் . திராவிடம்  என்பது தென் இந்தியாவில் இருக்கும் ஐந்து மாநிலங்களையும் குறிக்கிறது . இங்கே திராவிடம் பேசுகிற யாராலாவது கர்நாடகாவிலிருந்து தண்ணீரை கொண்டு வரவோ அல்லது  கேரளாவிடம் உள்ள முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்கவோ  முடிந்ததா ? முடியாத போது எதற்கு மக்களை முட்டாளாக்கும் இந்த வீண் வாதம் ? ஆங்கிலேயன் நம்மை விட்டு போனாலும்  அவன் விட்ட ஆரிய - திராவிட கதையை இன்றளவும் பரப்பி வரும் அடிமை புத்தியுள்ள பல அடித்தொடிகள் இதை படித்த பிறகாவது திருந்தட்டும் அல்லது மேற்கொண்டு இந்த புருடாவை பரப்பாமல் இருக்கட்டும் என்கிற நல்லெண்ணத்தில் இந்த பதிவினை பகிர்ந்து கொள்கிறேன் . பகிர்ந்து கொண்ட பத்மனுக்கு நன்றி ... 

புலாலும் ஆரியமும்


முகநூல் (பேஸ்புக்) இணையதளத்தில், மாட்டுப் பொங்கலுக்கு மாட்டைக் குளிப்பாட்டி வணங்கிவிட்டு, ஆட்டை வெட்டித் தின்னலாமா? என்று ஒரு நண்பர் கருணை உள்ளத்தோடு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்துள்ள மற்றொரு நண்பர், இப்படியெல்லாம் ஆரியத்தனமாக கேள்வி எழுப்பலாமா? என்று அங்கலாய்த்திருந்தார். இந்தப் பதிலுரையில்  பொதிந்துள்ள சித்தாந்த, இனவாதக் குழப்பத்தைப் போக்கி, தெளிவுபடுத்தும் முகமாக, மயக்கம் அறுக்கும் மறுமொழியாக இந்தக் கட்டுரையைப் படைத்துள்ளேன்.

ஆங்கிலேயன் தன் வயிற்றுப்பிழைப்புக்காகச் சொன்ன ஆரிய – திராவிட வாதம் சுத்த அபத்தம் என்பது ஒருபுறம் இருக்கட்டும். அதை உண்மை என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். ஜீவ காருண்யம் என்பது ஆரியத்துக்கு மட்டுமே சொந்தமா? ஆரியர் என்பவர் பார்ப்பனர் மட்டும் தானா? க்ஷத்திரியர், வைசியர் எல்லாம் ஆரியர் கணக்கில் அடங்க மாட்டார்களா? ஆரியர் என்போர் வடநாட்டார் அனைவருமேவா? இல்லை, அதிலும் திராவிடச் சான்றிதழ் பெற்றவர் உள்ளனரா?

ஆரியர் கணக்கில், கொல்லாமையை வலியுறுத்திய வடநாட்டுப் புத்தரும், மகாவீரரும் இடம் பெறுகிறார்களா? இல்லையா? நமது திருவள்ளுவர்கூட, ‘கொல்லாமை’ மற்றும் ‘புலால் மறுத்தல்’ என இரண்டு அதிகாரங்களைப் படைத்து, இருபது குறள்களை எழுதியுள்ளாரே? அவையெல்லாம் ஆரியத்தின் குரலா?


“அறவினை யாதெனில் கொல்லாமை”, “நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை”, “தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் செயல்” எனக் கொல்லாமையிலும்,  “தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்?”, “தினல்பொருட்டால் உண்ணாது உலகுஎனின் யாரும் விலைபொருட்டால் ஊன்தருவார் இல்”, “அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றின் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”, “கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்” என்று புலால் மறுப்பிலும் அய்யன் திருவள்ளுவர் வலியுறுத்தியிருப்பது அய்யர்களுக்கோ அன்றி அனைத்துத் தமிழர்களுக்கோ?

ஒருவேளை திருவள்ளுவர் வாக்கெல்லாம் ஆரிய மாயையில் அகப்பட்டதன் வெளிப்பாடா? அல்லது இன்றளவும் ஆராத, பொய்மான்கரடாய் ஆரியம்(!) வெறுக்கும் திராவிட ஆவேசப் புளுகுவாதத்தை மறுதலிக்கும் இலக்கிய ஆதாரங்களா?


சமணத்தைப் பின்பற்றும் நயினார் என்றழைக்கப்படும் தமிழ்ச் சாதியினர், வைதீகர்களைக் காட்டிலும் மிகத் தீவிரமாக புலால் மறுப்பை வலியுறுத்திக் கடைபிடிக்கிறார்களே? அவர்களும் ஆரியரோ? ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய’ அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை வடிவான வள்ளலார் ஆரிய இனத்தவரோ? அவர்காட்டும் சமரச சன்மார்க்க நெறியிலும், அதற்கு முன்பிருந்தே சுத்த சைவ நெறியிலும், புலால் மறுக்கும் வைணவ நெறியிலும் வாழும் தமிழர் எல்லாம் ஆரியக் கலப்புற்றனரோ? அன்றி ஆரியக் கலகத்துக்கு ஆட்பட்டனரோ?


அதுசரி, யார் ஆரியர்? பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் வாழ்ந்து, தமிழ் மொழியையே தாய்மொழியாய்க் கொண்டு, தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்துக்கும் தொண்டாற்றிவரும் பார்ப்பனர்கள், தமிழர் அல்லரோ? தமிழ் இலக்கியங்களை ஊன்றிப் படிக்காத அறிவிலிகளின், பகுத்தறிவாளர் என்ற பிரகடனத்தைத் தமக்குத் தாமே சூட்டிக்கொண்டு பகுத்தறிவின் வாசம் இம்மியும் அறியாத கசடர்களின் கவைக்கு உதவாத பேச்சு அது.

குறிஞ்சிக்கோர் கபிலன் என்று புகழ்பெற்ற பண்டைக் கவிஞரும், மன்னன் பாரி வள்ளலின் மகள்களை மூவேந்தர் பகையையும் பொருட்படுத்தாமல் வளர்த்த மானுடப் பண்பாளருமான கபிலர், தன்னை “அந்தணன் புலவன்” என்றுதான் குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடுகிறார். அந்தக் குறிஞ்சிப் பாட்டே, ஆரிய மன்னன் பிருகதத்தனுக்கு தமிழ் உணர்த்துவதற்காக உரைக்கப்பட்டது என்று மொழியப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்தணர் (பார்ப்பனர்) ஆகிய கபிலர், ஆரியர் அல்லர் என்பது அறியப்படுகிறது. அவ்வாறெனில், ஆரியர் யார்? ஆரிய மன்னர் கனக, விசயர்கள் என்று சிலப்பதிகாரத்திலும் பிற இலக்கியங்களிலும் சொல்லப்பட்டுள்ளனவே? எனில், வடநாட்டு மன்னர்களில் சிலர் ஆரிய என்று பட்டம் சூட்டிக்கொண்டார்கள். ஆரிய என்பதற்கு, சிறந்த, உயர்ந்த என்று பொருள் உரைக்கப்படுகிறது. அதனால்தான் புத்தர்கூட, தனது சங்கத்தை ஆரிய சங்கம் என்று அழைத்தார். (பிராமணத்துவம் என்பது அடையக் கூடிய தகுதியே அன்றி, பிறப்பின் அடிப்படையில் வருவது அல்ல என்பதையும் அவர் நன்கு விளக்கியிருக்கிறார், இது இக்கால பிராமணர்களுக்கு மட்டுமின்றி, பிராமண எதிர்ப்பாளர்களுக்கும் புரியவில்லை என்பது வேறு விஷயம்.)

ஆரிய என்பதற்கு உயர்ந்த, சிறந்த என்று பொருள் இருப்பதால்தான், சமணப் பெண் துறவிகளுக்கு ஆர்யை என்று பெயர். விவசாயத்திலும், கல்வியிலும், போர்களிலும் சிறந்து விளங்கிய வட இந்தியாவின் ஒரு பகுதி ஆர்ய  வர்த்தம் என்று அழைக்கப்பட்டது. அம்மன்னர்களில் ஒரு பிரிவினர் ஆரிய என்ற பட்டம் சூட்டிக்கொண்டனர். (இந்தியாவின் வடபகுதி மட்டுமல்ல, இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ் மன்னர்களில் ஒரு பிரிவினரும் ஆர்ய மன்னர்கள் என்று அழைக்கப்பட்டார்கள் என்பது ஆய்வுக்குரிய கிளைச் செய்தி.)


ஆர்ய என்பது இனம் அல்ல, அது உயர்ந்த, சிறந்த என்ற பொருள்தரும் பதம் மாத்திரமே என்பதை மகாகவி பாரதியார் அறிந்திருந்ததால்தான், “ஆரிய நாட்டில் நாரியரும் நரசூரியரும் சொல்லும் வீரியமந்திரம் வந்தேமாதரம்” என்றும் “அச்சம் கொண்டவன் ஆரியன் அல்லன்” என்றும் அவரால் அடித்துச் சொல்ல முடிந்தது. (அவரையும், அழியும்நிலையில் இருந்த தமிழ் நூல் சுவடிகளைத் தேடிப்பிடித்துச் சேகரித்து முதன்முதலில் பதிப்பித்தவருமான உ.வே.சாமிநாத ஐயரையும் பிறப்பால் பிராமணர் என்பதால் ஆரியர் என்றே நினைக்கிறது, அழைக்கிறது, உதாசீனப்படுத்துகிறது ஓர் அறியாக் கூட்டம்.)

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஆரியர்கள் அல்லர் என்பதற்கு, பழந்தமிழ் சங்க இலக்கியங்களில் ஓரிடத்தில்கூட அந்தச் சாதியினர் ஆரியர் என்று குறிப்பிடப் படவில்லை என்பதே சான்று. பார்ப்பனர், அந்தணர், மறையோர், வேதியர் என்றெல்லாம் அழைக்கப்பட்டவர்கள் ஏன் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை? சிலப்பதிகாரத்தில்கூட, கண்ணகி - கோவலன் திருமண நிகழ்வை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து மணம் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதே அன்றி, ஆரியர் கட்டிய “தீவழியில்” திருமணம் புரிந்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

கபிலர் மட்டுமின்றி, பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடிப் பரவிய மாங்குடி மருதனார், நக்கீரர், பதுமனார், வடம வண்ணக்கண் பேரிச் சாத்தனார், வடம வண்ணக்கண் தாமோதரனார் (வடமர் என்பவர் தமிழ்ப் பார்ப்பனர்களில் ஒரு பிரிவினர்), மலைபடுகடாம் இயற்றிய பெருங் கௌசிகனார், கள்ளில் ஆத்திரையனார், கடம்பனூர் சாண்டில்யனார் (கௌசிகம், ஆத்ரேயம், சாண்டில்யம் என்பதெல்லாம் பிராமணர்களின் கோத்திரப் பெயர்கள் – கோத்திரம் என்பது இன்ன முனிவர் கால்வழியில், அதாவது பரம்பரையில், தோன்றியவர் என்பதைக் குறிக்கும் சொல்) உள்ளிட்ட பழந்தமிழ்ப் புலவர்களும் பார்ப்பனர்களே. தூய தமிழில் அகமும், புறமும் பாடிய இந்தப் புலவர்கள் எல்லாம் அந்தணர் என்பதால் அன்னியர் ஆகிடுவாரோ?


இதுபோல் சங்கப்பாடல் இயற்றிய புலவர் பெயரில் எல்லாம் ஆரிய என்ற முன்னொட்டு இல்லை. கபிலர், ஆரிய மன்னன் பிருகதத்தனுக்குத் தமிழ் உரைத்தார் என்பதை முன்னர் கண்டோம். தமிழ் கற்றுக்கொண்ட மற்றொரு  ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் பாடல், எட்டுத்தொகை நூலான குறுந்தொகையில், 184-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. ஆக, அரசர்கள் மட்டுமே ஆரியர் என்று அழைக்கப்பட்டனர் என்பதும், அக்காலப் பார்ப்பனர்கள் ஆரியர் என்று அழைக்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது.

வேதவழியைப் பின்பற்றிய வேந்தர்கள் சங்க காலந்தொட்டே, அல்லது அதற்கு முன்பிருந்தே தமிழகத்தில் வாழ்ந்திருக்கின்றனர். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, ராஜசூயம் வேட்ட சோழன் பெருநற்கிள்ளி, மகாபாரதப் போரில் இருதரப்பாருக்கும் உண்டி கொடுத்த பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகியோரின் பெயர்களும், அவர்தம் பெருமை குறித்த பாடல்களும் இவற்றை நமக்கு விளக்குகின்றன.

மேலும் ஒரு விஷயம். தென்னாட்டுப் பார்ப்பனர்கள்தாம் புலால் உண்ணாதவர்கள். வடநாட்டுப் பார்ப்பனர்கள், குறிப்பாக வங்காள பிராமணர்கள் மீனையும், ஒரிய பிராமணர்கள் அனைத்துவித புலாலையும் உண்ணும் வழக்கமுடையோர். (அக்காலத்திலே, அனைத்துப் பிராமணர்களும் வேள்வித் தீயில் விலங்குகளைப் பலியிட்டு உண்டு மகிழ்ந்தவர்கள்தாம் என்றும், கொல்லாமை என்ற அறக்கோட்பாட்டின் செல்வாக்குக்கு ஆட்பட்டும், ஆன்மீக வளர்ச்சியின் விளைவாகவும் புலால் உணவுப் பழக்கத்தைத் துறந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர்.)

பிராமணர்கள் என்றால் ஆரியர்கள் என்றும், தமிழர்கள் அல்லர் என்றும் கருதுவது அறியாமையே. தமிழ் இலக்கியங்களையும், கலாச்சார மாண்புகளையும், முறையாக அறியாததால் ஏற்பட்டுள்ள மதிமயக்கமே அது. அந்த மயக்கத்தில் இருந்து தமிழர்கள் விடுபட்டு சுய நினைவுக்கு, சுயம் பற்றிய நேர்மைப் புரிதலுக்குத் திரும்பவிடாமல் சில சில்லறை அமைப்புகளும், சில்லறை மனிதர்களும் பாடுபட்டு, பாடுபடுத்தி வருகின்றன(ர்).

ஆகையினால் புலால் மறுப்பு என்பது ஆன்மீக ரீதியிலும், ஜீவகாருண்யம் மற்றும் இயற்கை நேசம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடைபிடிக்கப்படும் கொள்கையே அன்றி வேறொன்றுமல்ல. இதற்கு இனவாதமும், மொழிவாதமும் அவசியமில்லை.


முடிவாக ஒரு விஷயம்: எளியதை வலியது கொல்லும் என்பது காட்டு நியதி, எளியதை வலியது காக்கும் என்பதே நாட்டு நியதி, நல்லோர் நியதி. இயற்கை, மனிதர்களுக்காக இதரபிற  உயிரினங்களை உருவாக்கவில்லை,  இயற்கையின் தன்மையான பல்லுயிர்ப் பெருக்கத்தில் மனிதனும் ஓர் அங்கம் என்பதே உண்மை. இதுவரையான பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலையில் உள்ள ஓர் அங்கம், அவ்வளவே. அந்த வகையில் மனிதனுக்குப் பிற உயிரினங்கள் மீது உள்ள உரிமையைவிட, அவற்றுக்குச் செய்ய வேண்டிய கடமையே அதிகம்.

-    பத்மன்


21 January 2013

சமர் - சுமார் ...


ஹாலிவுட் படங்களின் இன்ஸ்பிரேஷனில் ஒரு சஸ்பென்ஸ் கதையை ரெடி பண்ணி , அதில் விஷால் , திரிஷா , யுவன் என்று ஒரு கூட்டணியுடன் கை கோர்த்தது வரை சமர்த்தாகத்தான் இருந்திருக்கிறார் இயக்குனர் திரு . ஆனால் அந்த கதையை விறுவிறுப்பாக படமாக்குவதில் மட்டும் ஏனோ அசடு வழிந்து விட்டார் ...

ட்ரெக்கிங் கைட் ஷக்தி ( விஷால் ) பிரிந்து போன பழைய காதலி ரூபா
( சுனைனா  ) வின்  அழைப்பின் பேரில் ஊட்டியில் இருந்து பேங்காக்  போகிறார் . போகிற வழியில் மாயா ( திரிஷா ) வின் நட்பு கிடைக்கிறது . பேங்காக்கில் லேன்ட்  ஆனவுடன் அவர் சந்திக்கும் பிரச்சனைகளே சமர் ...


விஷால் நல்ல உயரம் , உடற்கட்டுடன் கட்டுமஸ்தானாக இருக்கிறார் . முதல் சீனில்  சண்டையுடன் அறிமுகமாகும் போதே " அச்சச்சோ அவ்வளவு தானா " என்று வயிற்றில் புளியை கரைத்தாலும்  பின் பிரச்சனைகளில் சிக்கி தவித்து கதையுடன் வேறு ரூட்டில் பயணித்து ஆறுதல் அளிக்கிறார் . கேசுவல் லுக் என்கிற நினைப்பில் தலை கூட வாராமல் அழுக்கு பாண்டையாக படம் முழுவதும் சுற்றி வெறுப்பேற்றுகிறார் ...

திரிஷா வின் அறிமுகம் மொக்கையாக இருந்தாலும் பாடல் காட்சிகளில் தாராளமான நடிப்பால் ஸ்கோர் பண்ணுகிறார் . எவ்வளவு தண்ணி அடித்தாலும் ( படத்துல தாங்க ) ஸ்லிம்மாகவே இருக்கும் அம்மணியின் பரந்த முதுகை பார்க்கும் போது  தான் டூப்போ என்று லேசாக சந்தேகம் வருகிறது ...


சுனைனாவிற்க்கு ஒரு சீன் , ஒரு பாட்டோடு வேலை முடிந்து விடுகிறது . ஜெயப்ரகாஷ் , ஜான் விஜய் , மனோஜ் பாஜ்பாய் , சக்ரவர்த்தி , சம்பத் , ஸ்ரீமன் இவ்வளவு பேர் இருந்தும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி ஏதுமில்லை . மனோஜ் பாஜ்பாயின் தமிழ் அறிமுகம் வீணாய் போனதில் சிறிது ஏமாற்றமே . ஸ்ரீமன் சீரியசாக பேசினாலும் தியேட்டரில்  விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் .

காதலியிடம் " நீ எல்லாத்துக்கும் கணக்கு பாக்குற , நான் காதல்ல கணக்கே பாக்குறது இல்ல " என்று விஷால் சொல்கிற வசனத்தில் மட்டும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிகிறார் . ரிச்சர்டின் ஒளிப்பதிவு இதம் . வருடத்துக்கு ஒரு படம் யுவனுக்கு திருஷ்டியாக அமைந்து விடுவதுண்டு , இந்த வருடம் சமர் . தரன் குமாரின் பின்னணி இசை ஒ.கே...

சமர் என்றால் போர் ( யுத்தம் ) என்று அர்த்தம் , ஆனால் படம் முதல் அரை மணி நேரம் படு போராகவே நகர்கிறது , பிறகு சுதாரித்து இடைவேளை வரை விஷாலுக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று நம்மை இயக்குனர் கதைக்குள் தாமதமாக இழுத்தாலும் பிறகு அதற்கான விளக்கங்களில் கோட்டை விட்டு விடுகிறார் . த்ரில்லர் கதையால் சர்ப்ரைஸ் செய்தாலும் சறுக்கலான திரைக்கதையால் சமர் சுமாராகவே இருக்கிறது .

SAMAR - SURPRISED BUT NOT SUSTAINED ...

ஸ்கோர் கார்ட் : 39 

17 January 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - சின்ன லட்டு பெத்த பிசினசு...


த்தனை முறை பார்த்தாலும் சலிக்காத கே.பாக்யராஜின் " இன்று போய் நாளை வா " படத்தை சந்தானமும் , இயக்குனர் மணிகண்டனும் பவர் முந்திரி தூவி இனிப்பு லட்டாய் தந்திருக்கிறார்கள் . டைட்டிலில் பாக்யராஜிற்க்கு நன்றி மட்டும் போட்டு விட்டு  அதற்குரிய பேமென்டை கொடுக்கவில்லை  என்கிற சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும் பார்ப்பவர்களை யோசிக்க விடாமல் சிரிக்கவைக்கிறது லட்டு ...

நெருங்கிய நண்பர்களான கே.கே ( சந்தானம் ) , பவர் ( ஸ்ரீநிவாசன் ) , சிவா ( சேது ) மூவருமே சேதுவின் எதிர்த்த வீட்டுக்கு குடி வரும் விசாகாவை லவ்வுகிறார்கள் . கடைசியில் லவ் போட்டியில் யார் ஜெயித்தார்கள் என்பதே கதை ...

கதை இருக்கிறதோ இல்லையோ சந்தானம் கால்ஷீட் இருந்தால் போதுமென்கிற நிலை இருக்கும் போது , அவரே தயாரித்து நடிக்கும் படத்தில் காமெடிக்கு  பஞ்சமிருக்குமா ?  அவர் லைனில் சொல்ல வேண்டுமென்றால் " ஓசிக்குடிக்கு அலையறவனுக்கு ஒயின்ஷாப்பே கிடைச்சா "  என்பது போல படம் முழுவதும் பவரை மட்டுமல்லாமல் எல்லோரையும் போட்டு தன் ஸ்டைலில் கலாய்க்கிறார் சந்தானம் . வழக்கமாக சந்தானம் படங்களில் வரும் டபுள் மீனிங் வசனங்கள் படத்தில் இல்லாததும் ஆரோக்கியமான விஷயம் ...


படத்தின் சர்ப்ரைஸ் பாக்கேஜ் பவர் ஸ்டார் தான் . மனிதர் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார் . அப்பாவித்தனமான இவரின் முகபாவமும் , செய்யும் கோணங்கி சேட்டைகளும் சந்தானத்தை விட அதிகமாகவே பவருக்கு கிளாப்ஸ் வாங்கித்தருகின்றன . இந்த வெற்றியை வைத்துக் கொண்டு பவர் சரியான பாதையில் பயணித்தால் ரசிகர்கள் நிறையவே ஆனந்த தொல்லைகளை எதிர்பார்க்கலாம் ...

நிஜ வாழ்க்கையிலும் சந்தானத்தின் நண்பரான சேதுவிற்கு நல்ல அறிமுகம் , ஆனால் சந்தானம் , பவர் இருவருக்கு மத்தியில கிங்காங் கையில் மாட்டிக்கொண்ட ஹீரோயின் போல நம்மை கவர முடியாமல் தவிக்கிறார் . முதல் படமாதலால் மன்னிக்கலாம் ...


மூன்று பேர் விழுந்து விழுந்து காதலிக்கும் அளவிற்கு விசாகா அழகாய் இல்லை . காமெடி  படத்திற்கு இவர் போதுமென்று நினைத்து விட்டார்களோ என்னவோ ? !... கோவை சரளா , வி.டி.வி கணேஷ் , சிவங்கர் மாஸ்டர் , தேவதர்ஷினி என்று ஒரு பட்டாளமே கிச்சு கிச்சு மூட்டினாலும் குண்டு பையனும் , பவரின் அண்ணனாக வருபவரும்  கவனிக்க வைக்கிறார்கள்  . தமன் இசையில் " லவ் லெட்டெர் " , " லட்டு தின்ன ஆசையா " பாடல்கள் முணுமுணு வைத்தாலும் இடைவேளைக்கு பிறகு வரும் பாடல்கள் ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் ...

படம் நெடுக பஞ்ச் இருந்தாலும் ஒரிஜினலில் வரும் "ரஹ்தாதா"  அளவிற்கு  மனதை தொடும் சீன் எதுவும் இல்லை , அதே போல ஹீரோயினுக்கு அறிவுரை வழங்கும் கதாபாத்திரத்தில் தேவதர்ஷினியை போட்டு ஒரிஜினலில் இருந்த இம்பேக்டை  கெடுத்து விட்டார்கள் என்று சொல்லலாம் . முதல் பாதியில் திருப்பதி லட்டு போல சுவையாய் இருக்கும் படம் பின் பாதியில் சிம்புவுடன் விசாகா காதல் என்கிற ரீதியில் தேவையில்லாமல் படம் பயணித்து பூந்தி போல உதிர்ந்து விடுகிறது ...

இந்த குறைகளை தவிர சிரிக்க  மட்டும் தான் இனி சினிமாவா என்கிற கவலை ஒருபுறம் மனதை அரித்தாலும் , பல பிரச்சனைகளால் மன அழுத்தத்துடன் அலையும் பலருக்கு ஒரு வடிகாலாகவும் அமைந்து , படத்துடன் சம்பத்தப்பட்டவர்களுக்கு குறைந்த முதலீட்டில் நல்ல லாபத்தையும் தரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா - சின்ன லட்டு பெத்த பிசினசு ...

ஸ்கோர் கார்ட் - 42

12 January 2013

அலெக்ஸ் பாண்டியன் - அரைத்த மாவு ...


குனி பட சறுக்கலில் இருந்து கார்த்தி மீண்டு வர அலெக்ஸ் பாண்டியன் மூலம் சுராஜ் கை கொடுப்பார் என்று பார்த்தால் அதில் ஏமாற்றமே மிச்சம் . கதை , லாஜிக் இந்த வஸ்துக்களையெல்லாம் கழட்டி விட்டு விட்டு ஒரு பொழுதுபோக்காக மட்டும் கூட படத்தை பெரிதாக ரசிக்க முடியவில்லை . படம் பார்க்கும் போது  " கேட்கறவன் கேனையா இருந்தா கேப்பையில நெய் ஒழுகுதும்பான் " என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது ...

முதல்வர் ( விசு ) மகளை ( அனுஷ்கா ) பத்து லட்சத்திற்காக கடத்தும்  அலெக்ஸ் பாண்டியன் ( கார்த்தி ) வில்லன் கும்பலின் (சுமன் / மிலன் சோமன்) நோக்கம் தெரிய வர அவர்களிடமிருந்து மகளை காப்பாற்றி மீண்டும் முதல்வரிடமே ஒப்படைக்கிறார் ...

" பருத்திவீரன் " படத்திற்காக தேசிய விருது பெற்ற ப்ரியாமணி கவர்ச்சிக்குப் பின்னால் போய் விட முதல் படத்திற்கே  பெரிய அங்கீகாரம் பெற்ற கார்த்தி யும் கமர்சியல் சக்சஸ் என்கிற பெயரில் சகதிக்குள் சிக்கிக்கொண்டிருப்பது துரதிருஷ்டம் . விஜய் , விஷால் , சிம்பு  இவர்களை தொடர்ந்து கார்த்தியும்  பட்ட பின் திருந்துவார் என இப்போதைக்கு நம்புவோமாக ! ...


பரபரவென்று முதல் சீனில் ஓடி வரும் அனுஷ்கா பிறகு இடைவேளை வரை காணாமல் போய்விடுகிறார் . கிளைமாக்ஸ்சில் வில்லன்களால் கடத்தப்பட்டு " கட்டிப்போட்டு அடிக்கிறீங்களே . நீங்கல்லாம் ஆம்பளைங்களா ? " என்று வில்லன்களை பார்த்து கேள்வி கேட்டு உசுப்பேற்றி கார்த்தியிடம் செம உதை வாங்க விடுகிறார் . வில்லன்கள் ரொம்ப்ப்ப நல்லவர்களாய் இருப்பதால் அழகான அனுஷ்காவிடம் ஆண்மையை நிரூபிப்பதற்கு வேறெந்த முயற்சியிலும் ஈடுபடாமல் கார்த்தியின் கட்டை அவிழ்த்து விட்டு தர்ம அடி வாங்குகிறார்கள் ...

கதையாவது , மண்ணாவது சந்தானம் காம்பினேஷன்ல காமெடி இருந்தா போதாது என்று நினைத்து விட்ட  இயக்குனர் அவருக்கு மூன்று தங்கைகளை கொடுத்து காம நெடியையும் கூட்டியிருக்கிறார் . படத்திற்கு சந்தானம் ஆறுதலாய் இருந்தாலும் முதல் பாதி  முழுவதும் இதை வைத்தே ஒட்டியிருபப்து சலிப்பை தருகிறது . சுராஜின் முந்தைய படங்களில் இருந்த காமெடி பெப் இதில்  மிஸ்ஸிங் . இரண்டாம் பாதியில்  காட்டுக்குள் மனோபாலாவை வைத்து கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் . சரவணன் எபிசோட்  படத்திற்கு தேவையில்லாத திணிப்பு . நாலு பக்கம் , தய்யா பாடலும் தாளம் போட வைக்கின்றன ...

படத்தில் ஏற்கனவே இருக்கும் வில்லன்கள் பத்தாது என்று கடைசியில் பிரதாப்போத்தன் வேறு வில்லனாய் மாறி வெறுப்பேற்றுகிறார் . ட்விஸ்ட் குடுக்குறாங்கலாம் ! அட போங்கப்பா ! . ரயிலடி சண்டையில் தடாலடியாக ஆரம்பிக்கும்  படம் போக போக தடம் புரண்டு விடுகிறது . அடுத்தடுத்த காட்சிகள் சொல்லி வைத்தது போலவே எந்த வித ட்விஸ்டும் இல்லாமல் வருவதும் , சுத்தமாக நம்மை ஒன்ற வைக்காத திரைக்கதையும் கொட்டாவியை வரவைக்கின்றன ...


இந்த மாதிரி படங்களுக்கு லாஜிக் பார்க்க கூடாது தான் , இருந்தாலும் சில சாம்பிள்ஸ் . டாடா சுமோ , ஸ்கார்பியோ போன்ற வாகனங்களில் வரும் வில்லன் அடியாட்களை கார்த்தி ஆம்னி ஒட்டிய படியே இடித்து அந்தரத்தில் பறக்க விடுகிறார் . பயங்கர பாதுகாப்புடன் கப்பலில் இருக்கும் முதல்வரின் மகள் அனுஷ்காவை  ஏதோ பெட்டிக்கடையில் இருந்து கமர்கட்டை களவாடுவது போல கார்த்தி கடலுக்கடியில் நீந்திய படியே கடத்தி வருகிறார், ஆயிரம் கோடி பிசினசுக்காக முதல்வர் மகளை கடதுவார்களாம் , அவர் சைன் பண்ணி முடித்தவுடன் மகளை விட்டு விடுவார்களாம் . தன்  மகளை கடத்தியதால் தான் அக்ரிமெண்ட் சைன் செய்தேன் என்று சொல்லி அதை கேன்சல் செய்து விட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு மாநில முதல்வருக்கு எத்தனை நேரம் ஆகும் ? ஒரு வேளை படம் விறுவிறு திரைக்கதையால்  கட்டிப்போட்டிருந்தால் இந்த கேள்விகளெல்லாம் நம்மை உறுத்தாமல்  இருந்திருக்கும் ...

கார்த்தி , சுராஜ் இருவருக்குமே இதற்கு முன்னாள் பொங்கலுக்கு ரிலீசான படங்கள் பெரிய வெற்றியை தந்திருக்க அது போலவே   அலெக்ஸ் பாண்டியனும் பொங்கலுக்கு விருந்தாக அமைவான் என்று எதிர்பார்த்தால் அவன் அரைத்தமாவாகவே இருக்கிறான் . இதையும் மீறி பொங்கலுக்கு புதுப்படம் போவேன் என்று ஆயா மீது சத்தியம் செய்தவர்கள் ,  அனுஷ்காவை அரை நிஜாருடன் பார்க்க நினைப்பவர்கள் , கார்த்தி - சந்தானத்தின் தீவிர ரசிகர்கள் , தெலுங்கு டப்பிங் படங்களை எத்தனை முறை டி.வி யில் போட்டாலும் அத்தனை முறையும் விரும்பிப் பார்ப்பவர்கள் அரைத்த மாவை ருசித்துப் பார்க்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 38 

5 January 2013

தமிழ் சினிமா 2012 ...



கடந்த வருடம் 168 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகியிருந்தாலும்  குறைந்த அளவிலான படங்களே வெற்றியடைந்திருக்கின்றன ... சில வருடங்களாகவே இந்த நிலை தொடர்வது துரதிருஷ்டமே , ஆனாலும் கார்த்திக் சுப்பராஜ் , பாலாஜி தரணீ தரன் போன்ற புதுமுக இயக்குனர்கள் நம்பிக்கை தருகிறார்கள் . 2012 ஆம்  வருடத்தின் முதல் அரையாண்டு கால சினிமா சற்று மந்தமாகவே இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்கள் நன்றாக இருந்து அதனை சமன் செய்தது என்றே சொல்லலாம் ...
காண்க : அரையாண்டு சினிமா ( 2012 ) - ஓர் அலசல் 
இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2012  

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1. நண்பன்
 2. கழுகு 
 3. வழக்கு எண் 18/9
 4. அட்டகத்தி
 5. நான் ஈ
 6. பில்லா 2 
 7. பீட்சா
 8. துப்பாக்கி
 9. போடா போடி
10.நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

 1. நண்பன்
 2. வழக்கு எண் 18/9
 3. ஒரு கல் ஒரு கண்ணாடி
 4. கலகலப்பு
 5. நான் ஈ
 6. சுந்தரபாண்டியன்
 7. பீட்சா
 8. துப்பாக்கி
 9. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 
10.கும்கி 

ப்ளாக்பஸ்டர் : துப்பாக்கி

டாப் டென் பாடல்கள்

 1. அஸ்க்கு லக்ஸா  ( நண்பன்  )
 2. ஆம்பளைக்கும்  ( கழுகு  )
 3. இதழின் ஓரம்  ( 3 )
 4. அகிலா அகிலா  ( ஓ .கே. ஓ .கே.)
 5. மதுரை பொண்ணு  ( பில்லா 2  )
 6. ஜல் ஜல் ( மனம் கொத்திப்பறவை )
 7. வாய மூடி  ( முகமூடி  )
 8. கால் முளைத்த ( மாற்றான்  )
 9. சாய்ந்து சாய்ந்து  ( நீ தானே என் பொன்வசந்தம்  )
10. அய்யய்யய்யோ ஆனந்தமே  ( கும்கி )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - வழக்கு எண் 18/9
 கவர்ந்த நடிகர் - விஜய் சேதுபதி  ( பீட்சா  )
 கவர்ந்த நடிகை - சமந்தா   ( நீதானே என் பொன்வசந்தம்  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - தம்பி ராமையா ( கழுகு  )
 கவர்ந்த காமெடி நடிகர் - சந்தானம் ( ஓ .கே. ஓ .கே )
 கவர்ந்த வில்லன் நடிகர் - சுதீப் ( நான் ஈ  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - அனிருத்  ( 3 )
 கவர்ந்த பின்னணி இசை - கழுகு ( யுவன் ஷங்கர் ராஜா  )
 கவர்ந்த ஆல்பம் - நீதானே என் பொன்வசந்தம் ( இளையராஜா  )
 கவர்ந்த பாடல் - ஆத்தாடி ( கழுகு  )
 கவர்ந்த பாடகர் - விஜய் பிரகாஷ்  ( அஸ்க்கு லக்ஸா  )
 கவர்ந்த பாடலாசிரியர் - நா.முத்துக்குமார்   ( நீதானே என் பொன்வசந்தம் )
 கவர்ந்த வசனகர்த்தா - அன்பழகன் ( சாட்டை )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் - சுகுமார்  ( கும்கி  )
 கவர்ந்த இயக்குனர் - கார்த்திக் சுப்பராஜ்  ( பீட்சா  )
 கவர்ந்த புதுமுகம் - லக்ஷ்மி மேனன்  ( சுந்தரபாண்டியன்  )


வசூல் ராஜாக்கள் 

 விஜய்  ( துப்பாக்கி )
 சசிகுமார்  ( சுந்தரபாண்டியன்  )
 விஜய் சேதுபதி ( பீட்சா  )


ஏமாற்றங்கள் 

 
 சகுனி
 முகமூடி
 தாண்டவம்
 மாற்றான்



Related Posts Plugin for WordPress, Blogger...