27 April 2013

யாருடா மகேஷ் - YARUDA MAHESH - ஆ(ஏ)ய் பையன் ...


ட்ரைலரும்  , சான்றிதழும் படம் எப்படிப்பட்டது என்கிற அனுமானத்தை கொடுத்து விட்டதால் எதிர்பார்ப்பில்லாமல் சென்றேன் என்றே சொல்லலாம் . சில மொக்கைகள் உட்பட படம் முழுவதும் அடல்ஸ் ஒன்லி ஜோக்குகள் , மூன்று ஐட்டம் சாங்குகள் இந்த இரண்டின் கலவையில் கொஞ்சூண்டு கதையை சேர்த்தால் வருகிறான் மகேஷ் ...

படமே சதையை நம்பியிருப்பதால் கதை என்று பெரிதாய் ஒன்றுமில்லை . கல்லூரியில் அரியர்ஸ் வைத்து கோட்டடிக்கும் மாணவன் சிவா ( சுன்தீப் ) வுக்கும் அதே கல்லூரியில் படிக்கும் மாணவி சிந்தியா ( டிம்பிள் ) வுக்கும் இடையே கசமுசா  ( இதையெல்லாம் லவ்வுன்னு வேற சொல்லனுமா ! ) ஆகி அதில் சிந்தியா கர்ப்பமாக அது கல்யாணத்தில் முடிகிறது . அதன் பின் மனைவியின் சம்பாத்தியத்தில் வெட்டியாக இருக்கும் சிவாவுக்கு அவளின் கர்ப்பத்துக்கு காரணம் தானில்லை  மகேஷ் தான் என்று தெரிய வர யாருடா மகேஷ் என்று தேடி அலைகிறார் . கடைசியில் கண்டுபிடித்தாரா என்பதே க்ளைமாக்ஸ் ...


ஹீரோ வேடத்துக்கு சுன்தீப் சரியான தேர்வு . நண்பனின் காதலை கட் செய்வது , காதலிக்காக அலைவது , குழந்தைக்கு அப்பனில்லை என்று தெரிந்தவுடன் எரிந்து விழுவது என்று படம் முழுவதும் கேசுவலாக நடித்திருக்கிறார் . ஹீரோயினுக்கு தமனாவின் சாயல் இருக்கிறது . தூரத்து சொந்தமோ !? . முதல் சாங்குக்கு ஆடும் அயிட்டத்தை விட , சாரி அயிட்டம் சாங்குக்கு ஆடும் பெண்ணை விட தனக்கு இருக்கும் திறமையை அடுத்தடுத்த சாங்குகளில் நன்றாகவே வெளிக்கொணர்ந்திருக்கிறார் .  ( படம் பார்த்த பாதிப்பு இன்னும் போகலியோ ) வாழ்க அவர் தொண்டு ...

ஒன்றுமே இல்லாத படத்தில் உட்கார வைப்பது ஹீரோவின் நண்பன் வசந்தாக வரும் நண்டு ஜெகனின் காமெடியே . ஜாடை மாடையாக இரட்டை அர்த்த வசனங்கள்  பேசிக்கொண்டிருந்தவர் இதில்  வெளிப்படையாகவே புகுந்து விளையாடியிருக்கிறார் . பெண்மை கலந்த பேச்சும் , படம் நெடுக இவர் அடிக்கும் கமெண்ட்சும் மட்டுமே படத்திற்கு உயிர்நாடி . டிவிடி பையா
( வேகமாக சொல்லிப் பார்க்கவும் ) என்று கத்தி கூப்பிட்டு அடி வாங்குவதும் , பலான இடத்தில அடிபட்டவுடன் புலம்புவதும் , " என் மனைவி கர்ப்பமாயிட்டா , அதையும் கன்பார்ம் பண்ணிட்டேன் நான் தான் அப்பா " என்று சொல்லி நண்பனை வெறுப்பேற்றுவதுமாக ஜெகன் சில இடங்களில் முகம் சுழிக்க வைத்தாலும் ஜமாய்த்திருக்கிறார் ...

ஜெகன் இல்லாத சீன்கள் தொய்வு , அதிலும் ரோபோ சங்கரை வைத்து செய்திருக்கும் காமெடியில் ஓவர் காம நெடி . இந்த இடைச்செறுகலை தவிர்த்திருக்கலாம் . லிவிங்ஸ்டன் , சுவாமிநாதன் மற்றும் சின்ன சின்ன ரோல்களில் வருபவர்களும் கதையின் ஓட்டத்துக்கு உதவியிருக்கிறார்கள் . கோபி சுந்தர் இசையில் :" ஓடுற உனக்கு " , " புது " போன்ற பாடல்கள் நன்றாக இருக்கின்றன ...


மகனிடமே பலான சீடி கேட்கும் அப்பா , காதலி பி.எப் ( ப்ரேக்பாஸ்ட் ) காக வா என்றவுடன்  தவறாக புரிந்து கொண்டு காண்டமுடன் போகும் ஹீரோ , கல்லூரி படிப்புக்காக டூர் செல்லும் போது ரயிலிலேயே முதலிரவுக்கு ஏற்பாடு செய்யும் ஜெகன் இப்படி படம் நெடுக இயக்குனர் மதன்குமார் பலான மேட்டர்களை மட்டுமே கட்டவிழ்த்து விட்டு கொஞ்சம் கடுப்பேற்றினாலும் ஆபாசத்தை வசனங்களோடு மட்டும் நிறுத்திக் கொண்டதற்கு பாராட்டலாம் . டைரக்ட் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் சிரிக்க வைத்தாலும் " ரங்கவேலு வை சுருக்கி ராண்டி னு கூப்புடுவீங்க , அப்போ குழந்தைவேலு வை சுருக்கி ..ண்டி னு கூப்புடுவீங்களா " போன்ற சக கலைஞனை இழிவுபடுத்தும் வசனங்கள் கண்டிக்கத்தக்கவை ...

கடைசியில் யாருடா மகேஷ் என்பதற்கான விடை எதிர்பார்த்ததை போலவே படு மொக்கையாக இருந்தாலும் போருடா மகேஷ் என்று நம்மை சொல்ல வைக்காமல் படத்தை வேகமாக முடித்து விடுகிறார்கள் . ஜாலியாக நண்பர்களுடன் பொழுதை கழிப்பவர்களுக்கும் , அடல்ஸ் ஒன்லி ஜோக்குகளை ரசிப்பவர்களும் படம் நல்ல விருந்து . அரங்கில் வந்திருந்த இளம்பெண்கள் கூட ரசித்து சிரிப்பதை பார்த்தால் இயக்குனர் குறி வைத்த  டார்கெட்டட் ஆடியன்சுக்கு படம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கலாம் . மற்றபடி குடும்பத்துடன் மட்டுமே படம் பார்ப்பவர்களுக்கோ , கலாச்சார காவலர்களுக்கோ இந்த படம் உகந்ததல்ல ஏனெனில் யாருடா மகேஷ் - ஆ(ஏ)ய்  பையன் ...

ஸ்கோர் கார்ட் - 40 


26 April 2013

500000 ஹிட்ஸ் ...



அடுத்தடுத்த மாதங்களில் என் " நல்லதோர் வீணை " குறும்படம் 100000 ஹிட்ஸ்களையும் , என்  " வாங்க ப்ளாகலாம் " சைட் 500000 ஹிட்ஸ்களையும் கடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது .  இது நடப்பதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் இந்நேரத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . உங்களின் ஆதரவு என்றென்றும் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ...

அன்புடன் அனந்து ...






24 April 2013

உதயம் NH4 - UDHAYAM NH4 - தடம் மாறிய பயணம் ...


தேசிய நெடுஞ்சாலை என்கிற டைட்டிலை பவர் பறித்துக்கொண்டதால் உதயம் NH4 என்ற பெயர் மாற்றத்துடன் வந்திருக்கிறது படம் . வழக்கமான காதல் கதை தான் என்றாலும் சொன்ன விதத்தில் படத்தின் தலைப்பை போலவே  மாற்றம் காட்டியிருக்கிறார்கள் ...

பெங்களூருவில் படிக்கும் வடசென்னை மாணவர்கள் பிரபு ( சித்தார்த் ) & கோ பெரிய அரசியல்வாதியின் பெண்ணை ( அர்ஷிதா செட்டி ) கடத்துகிறார்கள் . விஷயம் வெளியே தெரியாமல் பெண்ணை மீட்டு விட்டு கடத்தியவர்களை கொல்வதற்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டை ( கே.கே.மேனன் ) பணிக்கிறார் அரசியல்வாதி . கே.கே. மேனனுக்கு இது கடத்தல் அல்ல காதல் என்று தெரியவருகிறது . கடைசியில் என்ன ஆனது என்பதை வழக்கமான முடிவுடன் சொல்லியிருக்கிறார்கள் ...

சித்தார்த் திற்கு படம் முழுவதும் உம்மென்று வருவதை தவிர வேறு வேலையில்லை . நல்ல நடிகர் தான் என்றாலும்  சொல்லிக்கொள்ளும் படியாக படத்தில் ஏதுமில்லை ... அர்ஷிதா செட்டி சில காட்சிகளில் அழகாக இருக்கிறார் ( மேக் அப் உபயம் ?! ) . பல காட்சிகளில் சுமாராக இருக்கிறார் . யார் சொன்னாலும் நம்பி விடக்கூடிய அந்த வயதிற்கான இம்மெச்சூரிட்டியை அழகாக சொல்லியிருக்கிறார்கள் . ஆனாலும்  அம்மணி இன்னும் மேஜராகவில்லை ( 18 வயசுங்கோ ...! ) எனும் போது இடிக்கிறது ...

 

நீண்ட நாள் கழித்து நெகட்டிவ் கேரக்டரை ரசிக்க வைத்திருக்கிறார் கே.கே.மேனன் . படத்தின் ஹீரோவே இவர் தானோ என்று நினைக்குமளவிற்கு தமிழில் வெயிட்டான அறிமுகம் . இவரையும் வழக்கம் போல ஆய் , ஊய் என்று கத்தவிட்டு ஹீரோவிடம் அடிவாங்க மட்டுமே விடாமல் கோலிவுட் காப்பாற்றக்கடவது . இவர்களை தவிர சித்தார்த்தின் நண்பனாக வரும் குண்டு பையன் , அர்ஷிதாவின் நண்பனாக வரும் பெங்களூரு பையன் , புதிதாய் வேலைக்கு சேர்ந்திருக்கும் சைபர் க்ரைம் போலீஸ்  போன்றோரும் ரசிக்க வைக்கிறார்கள் ...

வேல்ராஜின் ஒளிப்பதிவும் , ஜி.வி யின் பி.ஜி யும் படத்திற்கு பலம் . பாலாவின் கானா பாடலும் , " யாரோ இவன் " மெலடியும் முணுமுணுக்க வைக்கின்றன ... வெற்றிமாறன் கதை , வசனம் எழுதி தயாரித்திருக்கிறார் . கதை , வசனம் இரண்டிலுமே புதிதாய் எதுவுமில்லை என்றாலும் ப்ளாஷ்பேக்  நகரும் முதல் பாதி திரைக்கதை வேகத்தையும் , என்ன நடக்குமோ என்கிற விறுவிறுப்பையும் கொடுக்கத்  தவறவில்லை ...


கடத்தல் என்கிற போது இருந்த ஆர்வம் காதல் ரூட்டுக்குள் பயணிக்கும் போது படுத்து விடுகிறது . பண்ணிரெண்டு மணியை  கடந்து விட்டால் பெண் மேஜராகி விடுவாள் என்பதும்  , தன் அரசியல் லாபத்திற்காக பெண்ணையே  அப்பா கொல்ல சொல்வதும் ஐந்தாம் நூற்றாண்டு தமிழ் சினிமா . செல்போன் டவரை வைத்து சித்தார்த்தை கண்டுபிடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும் உடனுக்குடன் அவர் அனுப்புகிற எஸ்.எம்.எஸ் சை கூட போலீஸ் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை ...

அர்ஷிதா சித்தார்த் மேல் காதல் வயப்படுவதற்க்கான காரணங்கள் க்யூட்டாக இருந்தாலும் இருவரும் எந்நேரமும் பப்புக்குள்ளேயே மப்பாக இருப்பதால் அவர்கள் காதல் சேர வேண்டுமே என்கிற பரபரப்பு  டோட்டல் மிஸ்ஸிங் . அதனால் தானோ என்னமோ ஆரம்பிக்கும் போதிருந்த ஆர்வத்துடன் நம்மால் படத்தோடு தொடர்ந்து பயணப்பட முடியவில்லை ...

புதுமுகம் மணிமாறன் இயக்கத்தில் ஸ்டார்ட் செய்தவுடன் இண்டர்வல் வரை ஸ்பீடாக செல்லும் படம் பின் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தடம் மாறி  ஊருக்குள் சென்றது போல சொங்கி விடுகிறது ...

ஸ்கோர் கார்ட் - 41


5 April 2013

சேட்டை - SETTAI - சறுக்கல் ...


டெல்லி பெல்லி யை தமிழுக்கு ஏற்றவாறு எப்படி எடுத்திருப்பார்கள் என்கிற ஆர்வமே படம் பார்க்க தூண்டியது . சில அஜால் குஜால் காட்சிகளை அகற்றி விட்டு ஐந்து பாடல்களை மட்டும் இணைத்து விட்டால் தமிழ் பெல்லி ரெடி என்று இயக்குனர் கண்ணன் நினைத்து விட்டது ஏமாற்றமே ...

கதை மும்பையில் நடக்கிறது . பத்திரிக்கை துறையை சேர்ந்த ஜே.கே
( ஆர்யா ) , நடுப்பக்கம் நக்கி ( சந்தானம் ) , கார்ட்டூனிஸ்ட் ( பிரேம்ஜி ) மூவரும் ரூம் மேட்ஸ் . ஆர்யாவுக்கு பணக்கார காதலி ஹன்சிகா மூலம் கடத்தல் வைரம்  கிடைக்க கடத்தல் கும்பல் தலைவன் நாசரிடமிருந்து மூவரும் தப்பித்தார்களா  என்பதை அதிகம் மெனக்கெடாமல் ஒரிஜினலில் இருந்து காப்பி பேஸ்ட செய்து சொல்லியிருக்கிறார்கள் ...

ஆர்யாவுக்கு அல்வா வேடம் . ஹன்சிகா , அஞ்சலி இரண்டு தலுக் முலுக் குகளுக்கிடையில் சுகமாக அவஸ்தைப்பட்டிருக்கிறார் கொடுத்த வைத்த ஆர்யா . ஹன்சிகா டூயட் ஆடுவது தவிர கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்டுக்கொண்டே ஆர்யா மேல் விழுந்து புரள்கிறார் . அஞ்சலி க்கு கண் மையை மாற்றி விட்டால் மாடர்ன் கேர்ள் லுக் வந்து விடும் என்று நினைத்து விட்டார்கள் போல . பாவம் மிடில் கிளாஸ் இமேஜை தாண்டி மனதில் பதிய மறுக்கிறார் ...


ஆர்யா - அஞ்சலி உதட்டு முத்தத்திலும் சரி , காதலிலும் சரி அழுத்தமே இல்லை . சந்தானம் வழக்கம் போல டைமிங்கில் ரசிக்கவைத்தாலும் இவர் ஸ்டொமக் அப்சட் மேட்டரை ஜவ்வாக இழுத்து தியேட்டரை நாறடித்திருக்க வேண்டாம் . பிரேம்ஜி மொக்கையாக வந்து போனாலும் காதல் தோல்வியில் பரிதாபம் காட்டுகிறார் . நாசர் ஒ.கே ...

தமன் இசையில் " அகலாதே " பாடல் தவிர மற்றவை ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . பின்னணி  இசைக்கு மெனக்கெடாமல் ஹிந்தியில் இருந்தே உருவி விட்டார் தமன் . ஆர்யா - சந்தானம் கூட்டணி பாஸ் அளவிற்கு வொர்க் அவுட் ஆகா விட்டாலும் ஓரளவு ரசிக்க வைக்கிறது .  பாடல்களை திணித்து படத்தின் நீளத்தை கூட்டியிருக்க வேண்டாம் . அதிலும் குறிப்பாக படம் சூடு பிடிக்கும் போது வரும் பிளாஷ்பேக் டூயட்  , அஞ்சலியின் கனவு டூயட் எல்லாம் படத்தின் வேகத்தை குறைக்கின்றன ...


ஒரிஜினலில் நண்பர்களுக்கிடையே இருந்த கெமிஸ்ட்ரி யும் , இரண்டாம் காதலில் இருந்த அழுத்தமும் சேட்டையில் மிஸ்ஸிங் . ஹிந்தியில் ஹிட்டடித்த செக்ஸுவல் காமெடியை தமிழில் படமாக்குவது எளிதல்ல . அடிப்படையில் உள்ள கலாச்சார வேறுபாடு   நிச்சயம் இடையூறாக இருக்கும் . அது மட்டுமல்லாமல் இந்த வகையான படங்களுக்கு இங்கே ரசிகர்களும் குறைவு . அதையும் மீறி வெற்றி பெறுவதற்கு நிறைய ஹோம் வொர்க் தேவை . அதில் தவறியதால் தான் " ஜப் வே மெட் " டை " கண்டேன் காதலை " என்று ஹிட்டாக்கிய கண்ணன் சேட்டையில் சறுக்கியிருக்கிறார் ...

ஸ்கோர் கார்ட் : 40   


Related Posts Plugin for WordPress, Blogger...