30 June 2013

அன்னக்கொடி - அவலக்கொடி ...




வயதானாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் இளைஞர்களுடன் சரிக்கு சமமாக விளையாடும் பெரியவர்களை பார்த்திருப்போம் . நாமும் அவர்கள சந்தோஷத்துக்காக அவர்களிடம் தோற்பது போல நடிப்போம் . ஆனால் அவர்களில் சிலர் உண்மையை உணர்ந்து கொள்ளாமல் தங்களிடம் நிறைய பலம் இருப்பவதாகவே இன்னும் நம்பிக் கொண்டிருப்பார்கள் . அந்த வரிசையில் தன் முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை புரட்டிப் போட்ட இயக்குனர் பாரதிராஜா சேர்ந்திருப்பது துரதிருஷ்டம் ...

அன்னக்கொடி ( கார்த்திகா ) யும் , கொடிவீரனும் ( லக்ஷ்மன் ) காதலிக்கிறார்கள் . சாதி அவர்களை பிரித்து அன்னக்கொடியை கொடுமைக்கார கணவன் சடையனிடம் ( மனோஜ் கே.பாரதி ) சேர்க்கிறது . கடைசியில் அன்னக்கொடி என்ன ஆனால்  என்பதை கல் தோன்றா மண் தோன்றா முன் தோன்றிய காதல் காட்சிகளை வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் இமயம் ...

கிராமத்து இளைஞனாக நன்றாகவே பொருந்துகிறார் லக்ஷ்மன் . அவருக்கு குரல் கொடுத்தவர் யாரென்று தெரியவில்லை , நன்றாக கணீரென்று இருக்கிறது . மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை . கோ வெற்றிக்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு வந்திருந்தாலும் கார்த்திகா விற்கு தனிப்பட்ட முறையில் அன்னக்கொடி முக்கியமான படம் . அவருடைய நடிப்பும் , இளமைத்துடிப்பும் ரசிக்க வைக்கின்றன ...


தாஜ்மஹால் படத்தில் மனோஜை கதாநாயனாக நடிக்க வைத்த பாவத்திற்கு பாரதிராஜா இந்த படத்தில் ஓரளவு பிராயச்சித்தம் செய்து கொண்டார் என்றே சொல்லலாம் . மனோஜின் நடிப்பு சில இடங்களில் ஓவர் டோசாக தெரிந்தாலும் இந்த படம் அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என நம்பலாம் ...

ஜி.வி.பிரகாஷ் குமாரரின் இசையில் பாடல்கள் , சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு போன்றவை படத்திற்கு பலம் . கிராமத்தில் இருக்கும் சாதிக்கொடுமை , ஆண்மை குன்றிய கணவனிடம் மாட்டிக்கொண்டு கார்த்திகா படும் அவஸ்தை  , தன் குறையை சீண்டுபவர்களிடம் வெறித்தனமாக நடந்து கொள்ளும் மனோஜின் கதாபாத்திரம் போன்றவற்றை சித்தரித்த விதத்தில் பழைய பாரதிராஜா கொஞ்சம் தெரிகிறார் ...


காலையில் பேஸ்புக்கில் பிக்கப் செய்து விட்டு மாலையில் பிரிந்து விட்டோம்  என்று ட்வீட் செய்யும் இந்த காலத்தில் காதலன் காதலியின்  விரலை சப்புவது, இருவரும் பாறையை சுற்றி கண்ணாமூச்சி ஆடுவது , காதலியின் செருப்பை பூஜை செய்வது என்று இன்னும் பாரதிராஜா பழைய ராஜாவாகவே இருப்பது கொடுமை . வெள்ளையுடை அணிந்த தேவதைகள் வராதது மட்டுமே ஆறுதல். கொடுமைக்காரனாக இருந்தாலும் கணவன் செய்த உதவியை கார்த்திகா நினைத்துப் பார்ப்பது  , காதலியை பிரிந்தவுடன் லக்ஷ்மன் வேறு திருமணம் செய்து கொள்வது போன்றவற்றால்  ஏற்கனவே பலவீனமாக இருக்கும் காதல் படு பாதாளத்துக்கு  போய் விடுகிறது . படம் முடிந்து வரும் போது ஒருவர் கார்ததிகாவோட முதுகுக்காக கொடுத்த காசுல காவாசி ஒ.கே என்று சொன்ன போது பாரதிராஜா வை நினைத்து மனம் லேசாக கனத்தது ...

ஸ்கோர் கார்ட் : 37


15 June 2013

தீயா வேலைசெய்யணும் குமாரு - TVSK - வெல்டன் ...


வ்வொரு காலகட்டத்திலும் தமிழ் சினிமாவுக்கு ஒரு சீசன் இருக்கும் . இப்பொழுது தமிழ் சினிமாவிற்கு காமெடி சீசன் போலும் . ஒரு பக்கம் இது ஆரோக்கியமானது தானா  என்கிற கேள்வி இருந்தாலும் வியாபரத்திற்கு அது தவிர்க்க முடியாதது என்பது ஒரே நாளில் ரிலீசாகி இருக்கும் இரண்டு காமெடி படங்களிலிருந்தே விளங்கும் . அந்த வகையில் கலகலப்பு வெற்றிக்கு பிறகு யுடிவி யுடன் இணைந்து தீயா வேலை செய்திருக்கிறார் சுந்தர்.சி ...

பரம்பரை பரம்பரையாக காதலித்து கல்யாணம் செய்து வரும் குடும்பத்தில் பிறந்த குமார் ( சித்தார்த் ) சிறு வயதிலிருந்தே எந்த ஒரு பிகரையும் கரக்ட் செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறார் . கடைசியில் உடன் வேலை பார்க்கும் சஞ்சனாவை ( ஹன்சிகா ) காதலை சேர்த்து வைப்பதையே தொழிலாக செய்து கொண்டிருக்கும் மூக்கையா ( சந்தானம் ) வின் உதவியுடன் தன்னை காதலிக்க வைக்கிறார் . பிறகு தன் தங்கை தான் சஞ்சனா என்று தெரிய வர காதலை பிரிக்கும் முயற்சியில் மூக்கையா ஜெயித்தாரா ? என்பதை இயக்குனர் தன் வழக்கமான பாணியிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு சொல்லியிருப்பதே தீவேகு  ...

உதயம் பாதிப்பிலிருந்து இன்னும் சித்தார்த் வெளிவரவில்லை போல , இதிலும் உம்மனாமூஞ்சியாகவே இருக்கிறார் . ஸ்மார்டாக இருக்கும் சித்தார்த் தன் கேரக்டருக்காகவும் , சந்தானத்தின் காமெடிக்காகவும் அடக்கியே வாசித்திருப்பதை பாராட்டலாம் . அசத்தலான அறிமுகத்துடன் வரும் சந்தானம் படம் நெடுக எஸ்.எம்.எஸ் , ஒ.கே.ஒ.கே வரிசையில் குமாரையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் . தன் வழக்கமான கவுண்டர் , பஞ்ச் வசனங்களில் கலாய்க்கும் சந்தானம் டபுள் மீனிங்கை தவிர்த்திருப்பது ஆச்சர்யம் . சித்தார்த்திற்கு காதல் பாடம் எடுக்கும் போதும் சரி , அதற்காக பணத்தை கறக்கும் போதும் சரி நன்றாகவே சிரிக்க வைக்கிறார் சந்தானம் ...


ஒப்பனிங் சீனிலேயே ஒருபக்கம் ஹெட்லைட்டை காட்டிக்கொண்டே வரும் ஹன்சிகா தனக்கு விடப்பட்ட பணி  என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார் . க்யூட்டாக இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் க்ளைமேக்ஸில் காணாமல் போகும் ஐ.டி மாப்பிள்ளை போல படத்தின் பாதியிலேயே காணாமல் போயிருப்பது பரிதாபம் . சித்தார்த்தின் ஐ.டி நண்பர் , பாஸ்கி , ஹன்சிகாவின் தோழியாக வரும் மோகன்ராமின் மகள் என்று எல்லோரும் கவனிக்க வைக்கிறார்கள் . சிறிது நேரமே வந்தாலும் டெல்லி கணேஷ் , மனோபாலா இருவரும் நன்றாகவே கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் ...

பீட்சா வை ஒளிப்பதிவிய கோபி அம்ர்நாத்தா இது என்று ஆச்சர்யப்படும் படி இருக்கிறது ஒளிப்பதிவு . சத்யாவின் இசையில் சஞ்சனா பாடல்  தவிர மற்றவை புகை பிடிப்பவர்களுக்கும் , சக்கரை வியாதி இருப்பவர்களுக்கும் மட்டும் உதவியிருக்கின்றன . எஸ்.எம்.எஸ் . ஒகே பாணி கதை என்றாலும் நலன் குமாரசாமி - வெங்கட் ராகவனின் வசனங்களும் , அவர்கள் சுந்தர்.சி யுடன் இணைந்து அமைத்திருக்கும் திரைக்கதையும் படத்தை ஒருபடி மேலே எடுத்து செல்கின்றன . குறிப்பாக திருமணத்திற்காக சித்தூர் கூப்பிடும் நண்பனிடம் " அவனவன் வீட்ல பொணம் இருந்தாலே பேஸ்புகல மட்டும் அப்டேட் போட்டுட்டு சும்மா இருக்கான் " என்பது போல வரும் வசனங்கள் நச்..


குமாரை அறிமுகப்படுத்தும் ஆரம்பக் காட்சியிலேயே நம்மை கவனிக்க வைக்கும் திரைக்கதை பின் இரண்டு மணிநேரங்கள் தொய்வில்லாமல் நம்மை கட்டிப்போடுகிறது . சந்தானத்தை தவிர்த்து ஐ.டி நண்பர்கள் வரும் காட்சிகளையும் ரசிக்க வைத்ததில் சுந்தர்.சி யின் உழைப்பு தெரிகிறது . கணேஷை காதலித்து விட்டு சித்தார்த்தின் தில்லு முல்லுகளை நம்பி அவரை காதலிப்பது போல வரும் ஹீரோயின் கேரக்ட்ரைசேஷன் , நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் போல காணாமல் போய்விடும்  கணேஷ் வெங்கட்ராமன் , ஸ்பீட் ப்ரேக்கர் பாடல்கள் , நோ லாஜிக்ஸ் போன்ற குறைபாடுகள் இருந்தாலும் நம்மை போரடிக்காமல் சிரிக்க வைத்தற்காக குமாரின் வேலைக்கு வெல்டன் சொல்லலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41

8 June 2013

மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ...


2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி யின் பிரதம வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படுவாரா  என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் இன்று கோவாவில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்ககுகிறது . ஏற்கனவே  2014 தேர்தல் - மன்னராட்சியா ? மக்களாட்சியா ? என்கிற பதிவில் மோடி பிரதமராவதற்கான  வாய்ப்புகளை அலசிவிட்டோம்.

இன்றைய சூழ்நிலையில் கட்சியினரின் அலை மோடிக்கு சாதகமாக இருந்தாலும் பி.ஜே.பி யில் பிரதமர் பதவிக்கு தகுதி வாய்ந்த அத்வானி , ராஜ்நாத் சிங் , அருண் ஜெட்லி போன்ற மற்ற தலைவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது . அதிலும் குறிப்பாக வாஜ்பாய் அரசில் துணை பிரதமாராகவும் , உடல்நிலை காரணமாக வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி விட்ட நிலையில் கட்சியின் மூத்த தலைவராகவும் இருக்கும் அத்வானியின் பெயரும் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது . இவர்கள்  இருவருக்கும் இடையே இருக்கும் சிறு இடைவெளியை மீடியாக்கள் ஊதி பெரிதுபடுத்தினாலும் அதை முற்றிலும் ஒதுக்கி விட முடியாது ...

உடல்நிலை சரியில்லாததால் அத்வானி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும் நாளை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . மோடி , அத்வானி இருவருக்கும் மிக நெருக்கமான உமா பாரதிக்கு தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்திலேயே காய்ச்சல் வந்துவிட்டதாகவும் , அதனால் அவரும் கூட்ட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன . மற்ற கட்சிகள் போல இல்லாமல் உண்மையிலேயே ஜனநாயக ரீதியில் இயங்கும் பி.ஜே.பி யை  பொறுத்தவரை மோடிக்கு ஆர்.எஸ்.எஸ் சின் ஆதரவு இருந்தாலும் கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்ட பிறகே அவரை பிரதம வேட்பாளராக அறிவிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ...


சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் இடைத்தேர்தலில் 2 பாராளுமன்ற மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரசிடமிருந்து மோடி தலைமையிலான பி.ஜே.பி கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது . அதே போல பீகாரில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு மோடியை எதிர்த்து வரும் நிதிஷ் குமாரின் நிலைப்பாடில் மாற்றம் அவசியம் என்பதும் ஊர்ஜிதமாகிறது . மோடிக்கு இந்த அளவு செல்வாக்கு வளராமல் இருந்திருந்தால் வாஜ்பாய் பிரதமாரக இருந்த போது அவருக்கு பக்கபலமாக இருந்த அத்வானி யின் பெயர் பிரதமர் பதவிக்கு இப்பொழுது ஒருமனதாக அறிவிக்கப்பட்டிருக்கும் . அத்வானிக்கு இதில் மனஸ்தாபம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை ...

கட்சியின் சீனியர் என்ற முறையிலும் , தகுதியின்  அடிப்படையிலும் மோடிக்கு அத்வானி சளைத்தவரில்லை என்ற போதிலும் இப்போழுதுள்ள சூழ்நிலையில் மோடி காலத்தின் கட்டாயம் . சுயநலமில்லாமல் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட அத்வானி இந்த உண்மையை புரிந்து கொண்டு மோடிக்கு வழிவிடுவார் என்று எதிர்பார்க்கலாம் . பொதுவாக அதிக திறமை வாய்ந்தவர்கள் ஒருமித்த முடிவை உடனடியாக எடுக்க முடியாது என்பார்கள் . ஒருவர் கட்டளையிட மற்றவர்கள் அடிபணியும் வழக்கத்திற்கு மாறாக அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும் எல்லா விதத்திலும் பிரதமர் பதிவிக்கு தகுதி வாய்ந்த மோடி முன்னிறுத்தப்படுவாரா என்கிற மக்களின் கேள்விக்கு தாமதிக்காமல் இந்த தேசிய செயற்குழு கூட்டம் முடிவதற்குள்ளாகவே பி.ஜே.பி அறிவிக்கும் என நாம் எதிர்பார்க்கலாம் ...


2 June 2013

குட்டிப்புலி - KUTTI PULI - ஒண்டிப்புலி ...


ரு நடிகனாக தனக்கென்று தனி மார்கெட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு சுந்தரபாண்டியன் வெற்றிக்கு பிறகு வந்திருக்கும் படம் குட்டிப்புலி . வழக்கமான நண்பர்கள் சென்டிமெண்டிலிருந்து அம்மா சென்டிமெண்டிற்கு மாறியிருக்கும் சசிகுமார் வெற்றியடைந்தாரா ? பார்க்கலாம் ...

ஊர்ப்பெண்ணை அசலூர்க்காரன் கிண்டல் செய்ததற்காக அவனை போட்டு விட்டு தானும் சாகும் ஒரு நல்ல ! மனிதனின் ( லால் ) பிள்ளை குட்டிப்புலி
( சசிகுமார் ) . அப்பனை போலவே  இருப்பதால் உசுருக்கு உத்திரவாதம் இல்லை என்று காரணம் சொல்லி  கல்யாணம் செய்ய மறுக்கும் குட்டிப்புலிக்கு கால்கட்டு போட நினைக்கிறார் அம்மா ( சரண்யா ) . இதற்கிடையில் தெருப்பெண் பாரதி ( லக்ஷிமேனன் ) இவரை லவ்வ அம்மாவின் எண்ணம் நிறைவேறியதா என்பதை வழக்கமான பாணியில் சொல்லியிருக்கிறார்கள் ...


விருமாண்டி , பருத்திவீரன் ஸ்டைலில் இருந்தாலும்  கைகளை பின்னே கட்டிக்கொண்டு தலையை தொங்கப்போட்டு நடக்கும் மேனரிசத்தில் ரசிக்க வைக்கிறார் சசிகுமார் . சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷத்தையும் , காதல் காட்சிகளில் வெட்கத்தையும் காட்டி தனக்கும் நடிக்க வரும் என்று நிரூபிக்கிறார் . என்ன தான் ஹீரோயிச படம் என்றாலும் தனியாளாக எந்திரன் ஸ்டைலில் பற்றியெறியும் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை காப்பாற்றுவதெல்லாம் ரொம்ப ஓவர் . சசி ரசிக்க வைத்தாலும் அவரை மாஸ் ஹீரோவாக ஏற்க மட்டும் ஏனோ மனம் மறுக்கிறது ...

மாநிறமாக இருந்தாலும் மேக்கப்பும்  , உயரமான உடல்வாகும்  லக்ஷ்மிமேனனை கவனிக்க வைக்கின்றன  . அம்மணி பத்தாவது பரீட்சை இப்பொழுது தான் எழுதினார் எனும் போது தான் எத்தனாவது தடவை என்று கேட்கத் தோன்றுகிறது . பெரிய வேலை வெட்டியில்லாமல் சண்டை போட்டுத்திரியும் ஹீரோவை வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்தின் படி காதலித்துத் தொலைக்கிறார் லக்ஷ்மி . இவர் உயரத்தை கணக்கில் கொண்டு  சசியை லாங் ஷாட்டில் நடக்கவிட்டே சமாளித்திருக்கிறார்கள் . நான்கைந்து நண்பர்களுடன் திரியும் சசிக்கு இந்த படத்தில் முருகதாஸ் மட்டுமே இருப்பது ஆறுதல் . இவரை தவிர காமெடிக்காக சிலர்  இருந்தும் ( பப்பு & கோ ) பெரிய அளவிற்கு சிரிப்பு வரவில்லை . சித்தப்பா , மாமா என்று வரும் ஊர்க்காரர்கள் ரசிக்க வைக்கிறார்கள் ...

டெம்ப்ளேட் அம்மாவாக சரண்யா . அவரை விட அவருடன் வரும் ரமா பிரபா கவனிக்க வைக்கிறார் . மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் முதல் சில சீன்கள் மிக சிறப்பு . கிப்ரான் இசையில் சசியின் சண்டியரே அறிமுக பாடலும் , காதல் பாடலும் அருமை . பின்னணி இசையை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை . இசைஞானியின் பாடல்களை வைத்தே நிறைய சீன்களை ஒட்டிவிட்டார்கள் ...


பெருசாக எதையும் யோசிக்காமல் சேபாக முதல் படத்தில் கமர்சியல் ரூட்டை  கையில் எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் முத்தையா . முதல் காட்சியில் நம்மை நிமிர வைத்ததில் , சசிகுமார் கேரக்டரை எஸ்டாப்ளிஷ் செய்த விதத்தில் , " நான் ஒண்ணுமே செய்யலம்மா " எனும் ஊர்க்காரனிடம் " அதானே செஞ்சுட்டாதான் இந்நேரம் குருவம்மாவுக்கு நாலு பிள்ளை பொறந்துருக்குமே " என்று சரண்யா முணுமுணுப்பது உட்பட ஆங்காங்கே வரும் வட்டார வசனங்களில் , சசிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயத்தை கொடுத்து விட்டு பின் க்ளைமேக்சில்
வைத்த ட்விஷ்டில் இப்படி நிறைய இடங்களில் இயக்குனர் பளிச் ...

கதை தான் பழசு சீன்களில் எதையாவது புதிதாய்  யோசித்திருக்க வேண்டாமோ ? ! . இந்த இடத்தில் கோட்டை விட்டு விட்டார் முத்தையா . சசிகுமார் செய்யும் அளப்பரைகளை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியிருப்பது போர் . இண்டெர்வல் ப்ளாக் அதிர்ச்சி கொடுத்தாலும் , குத்துயிரும் , கொலையுயிருமாக வெட்டப்படும் சசி பின் சக்திமான் போல மீண்டு வந்து ஒத்தையாளாக வில்லன் கோஷ்டியை அடித்து சாய்ப்பதெல்லாம் போங்கு . அம்மா சென்டிமெண்டில் இருக்கும் அழுத்தம் கூட ஹீரோ - வில்லன் மோதலில் இல்லை .  சென்டிமெண்ட் , காதல் , காமெடி , சண்டை என்று பழசானாலும் புளியோதரையாய்  ருசிக்க வைத்தாலும் , மாஸ் ஹீரோவாக சசிகுமாரை முன்னிறுத்தும் முயற்சியில் ஒண்டிப்புலியாக அவரை மட்டுமே நம்பி வந்திருக்கும் படம் குட்டிப்புலி . சசிகுமாரை ரசிப்பவர்களுக்கு  படம் விருந்து , மற்றவர்களுக்கு பத்தில் ஒன்று ...

ஸ்கோர் கார்ட் : 40


Related Posts Plugin for WordPress, Blogger...