27 October 2013

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ...


டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார்  யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்  என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே  இருந்தாலும் அதற்கான அரசியல் சூடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது . 2014 தேர்தலுக்கு  இன்னும் தயாராகாமல் தமிழகம் தடுமாறுகிறதா ?! ...

மோடி மேஜிக் நாடெங்கும் வியாபித்திருந்தாலும் தமிழகத்தில் மோடி வித்தையெல்லாம் பலிக்காது என்றவர்களை கூட அவர் தலைமையில் நடந்த திருச்சி மாநாடு திரும்பிப்  பார்க்க வைத்திருக்கும் . எந்த ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கும் பண , அரசியல் பலங்களையும் தாண்டி தன்னலமற்ற தொண்டர்களின் பங்களிப்பும் , புத்துணர்ச்சியும் மிக மிக அவசியம் . அதனை மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட பிறகு  பி.ஜே.பி யினரிடம்  கண் கூடாக காண முடிகிறது ...

தமிழகத்திலும் அதே புத்துணர்ச்சி எதிரொலித்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி  மோடியின் சென்னை வருகைக்கு பிறகும் உறுதி செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமே . இருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமிடையே  எந்த ஒரு உறுதியான பேச்சு வார்த்தையும் தொடங்கப்படாத நிலையில் எது  வேண்டுமானாலும் நடக்கலாம் . அரசியலில்  நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை என்பார்கள்  . தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுபவர்கள்  கூட அரசியல் அரங்கில் எதிர் எதிர் அணியில் மோதுவதும் , எதிர் அணியில் இருப்பவர்கள் தேர்தலை ஒட்டி கை கோர்ப்பதும் புதிதல்ல ...

இந்த சூழ்நிலையில் நிதியமைச்சருடன் ஒரே மேடையில் அ.தி.மு.க   மந்திரி அமர்ந்ததையும்  , பிரதமருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததையும் எதேச்சையாக  நடந்தது  என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது . இதையெல்லாம் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க   கூட்டணி அமையாமல் போனாலும் அதற்காக பி.ஜே.பி  சோர்ந்து விட வேண்டிய அவசியமிருக்காது  . கடந்த  சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.5 சதவிகித வாக்குகளை பெற்றதோடு கணிசமனான  இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்ததும் , உள்ளாட்சி தேர்தலில் 13 நகராட்சிகளை  கைப்பற்றியதும் கட்சி இங்கே வளர்ந்து வருகிறது என்பதை நன்றாகவே காட்டுகிறது . தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் பலம் வாய்ந்ததாக அறியப்பட்ட கட்சி மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 15 தொகுதிகளுக்கு மேல் பலம்  பெற்றிருப்பதும்  குறிப்பிடத்தக்கது . பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காமல் போவது இரு பக்கமும் இழப்பு என்பதே நிதர்சனம் ...

அதே வேளை மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு  அதிக வாய்ப்புள்ள கட்சி என்பதால் இங்கே வலுவான கூட்டணி அமைவது பி.ஜே.பி க்கு மிகவும் அவசியமாகிறது .  2004 இல் எந்தவொரு காரணமுமில்லாமல் பி.ஜே.பி யை கழட்டி விட்டு விட்டு காங்கிரசுடன் கை கோர்த்த தி.மு.க விற்கு இந்த முறை அதையே மாற்றி செய்வதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன . தி.மு.க வை கூட்டணியில் சேர்ப்பது மூலம் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் சிதைவதற்கு வாய்ப்பிருந்தாலும் கிட்டத்தட்ட  அ.தி.மு.க விற்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தி.மு.க வை பி.ஜே.பி யால் கழித்து  விட முடியாது . பத்து வருடங்களுக்கு முன்னாள் அ .தி.மு.க  ஆட்சியிலிருக்கும் போதே தி.மு.க தமிழகத்தில் நாற்பதையும் வென்றதை  மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . இங்கே  மாறி மாறி கழகங்களின் ஆட்சி தான்  நடந்து கொண்டிருக்கின்றன ...

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  தே.மு.தி.க இப்போது திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னை நிலைநிறுத்த பி.ஜே.பி யுடனான கூட்டணி ஓர் வாய்ப்பாக அமையலாம் . இந்த முறையும் கடவுளுடனோ அல்லது  மக்களுடனோ மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் விஜயகாந்த்  இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு  தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனதை அவர்  மறந்திருக்க மாட்டார் . தற்போதைய சூழ்நிலையில்  அவருக்கு சரியான புகலிடம் பி. ஜே .பி  மட்டுமே  . கடந்த சட்டசபை தேர்தலில் அ .தி.மு.க கூட்டணிக்குள் அவர் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதால் தி.மு .க விற்கு எதிரான அலை தே.மு.தி.க விற்கு கட்சி ஆரம்பித்து 8 வருடங்களுக்குள்ளாகவே பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தது . இந்த முறையும் காங்கிரஸிற்கு எதிரான அலையை அவர் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் சரிவிலிருந்து மீளலாம் ...

இந்த கூட்டணிக்குள் ம.தி.மு.க வும் இணைவது கூடுதல் பலம் சேர்க்கும் . கட்சி ரீதியாக ம.தி.மு.க பெரிய அளவில் வளர்ந்திருக்கா விட்டாலும் அதன்  தலைவர் வை.கோ விற்கு மக்களிடம் இன்னும் நல்ல பெயர் இருக்கிறது . இந்த கூட்டணியில் தொகுதிகளுக்காக அவர் தன்மானத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நம்பலாம் . பா .ம.க தலைவர் ராமதாஸ் திருமாவளவனை தவிர்த்து  ஜாதி கட்சிகளை இணைக்கும்  முயற்சியை  கை விட்டு விட்டு இந்த கூட்டணிக்குள் வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் . இது போன்ற ஒரு வலுவான மூன்றாவது கூட்டணி அமைவதில் சிக்கல் இருந்தாலும்  , அப்படி அமையும் கூட்டணி  தேசிய அளவில் மட்டும் இல்லாமல் அடுத்த  சட்டசபை தேர்தலில் இரண்டு பிரதான கழகங்களுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் அமையக் கூடும் . தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதில்  உள்ளது போன்ற இடியாப்ப சிக்கல் நிச்சயம்  இதில் இருக்காது எனவும் எதிர்பார்க்கலாம் ...

இப்படி அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் கூட்டு சேரலாம் . கடந்த வருகையின் போது மோடி தொண்டர்களிடையே  சொன்னது போல வரும் தேர்தல் அவர்களுக்கு பரிசோதனை முயற்சி அல்ல , நிச்சயம் மத்தியில்  மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  அருமையான வாய்ப்பு . இதை அவர்கள் நழுவ விட மாட்டார்கள் . ஏனெனில் காங்கிரஸ்  மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்  . மூன்றாவது அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி . அதே சமயம் சிறந்த பிரதமராவதற்குரிய தகுதி மோடிக்கு இருப்பதும் , பத்து  கோடிக்கும் மேல் இளைஞர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடன் இருப்பதும் பி.ஜே.பி க்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயங்கள் ...

ஆனால்  நிலையான ஆட்சி அமைவதற்கும்  272 தொகுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு தேவை . தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லாத போதும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை உணர்ந்து  கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களின் நியாயமான கோபத்தை வாக்களிப்பில் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த முறையும் அதே போல நாடாளுமன்ற தேர்தலில் செய்வார்களா ? அல்லது கூட்டணியையும் , சொந்த விருப்பு , வெறுப்புகளையும் பார்த்து தடுமாறுவர்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...



12 October 2013

நய்யாண்டி - NAYYAANDI - நாடகம் ...


னது இரண்டாவது படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனரும் , நடிப்பிற்க்காக தேசிய விருது பெற்ற நடிகரும் ஒன்று சேர்ந்தால்
எதிர்பார்ப்புக்கு பஞ்சமா இருக்கும் ? ஆனால் எதிர்பார்த்த ரசிகர்களை இருவருமாக சேர்ந்து நய்யாண்டி செய்து விட்டார்கள்
என்று தான் சொல்லத் தோன்றுகிறது ...

40 வயதை நெருங்கியும் திருமணமாகாத இரண்டு முதிர்கன்னர்களின் கடைக்குட்டி தம்பி சின்ன வண்டு ( தனுஷ் ) . மாமா பையனின்
( சூரி ) ஊர்த்திருவிழாவில் சின்ன வண்டு வன ரோஜாவை ( நஸ்ரியா ) சந்திக்க , வேலை வெட்டி இல்லாத ஹீரோக்களுக்கு என்ன பிறக்குமோ அது பிறக்கிறது . ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களது காதல் கல்யாணத்தில் முடிய ஹீரோ தனது குடும்பத்தாரை எப்படி சமாளிக்கிறார் என்பதை நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் சற்குணம் ...

தேசிய விருதுக்கு  பிறகு தொடர்ந்து சீரியசான படங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய நினைத்து விட்டார் போலும் . அவர் எண்ணப்படி ஜாலியான கேரக்டர் . கேசுவலாக செய்திருக்கிறார் . ஆனால் கதையை கொஞ்சம் சீரியசாகவே கேட்டிருக்கலாம் பாஸ் . சிறந்த நடிகர் கிடைத்துவிட்டார் என்று நாம் நெஞ்சை நிமிர்த்தும் வேளையில் சிவாவுக்கும் , சிவ கார்த்திகேயனுக்கும் போட்டியாக இதெல்லாம்  தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது ...

தனது நடிப்புத் திறமையை சினிமாவை  தாண்டியும் சமீபத்தில் நிரூபித்திருக்கும் நஸ்ரியா விற்கு இதில் படித்த  பல் டாக்டராக இருந்தாலும் பல்லிளிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப்பெண் பாத்திரம் . ஜெனிலியா போல  ஓவர் ஆக்ட் செய்து வெறுப்பெற்றாமல் அளவாக நடித்திருப்பதை பாராட்டலாம் ...

சந்தானம் இல்லாத  குறையை சூரியை வைத்து ஓரளவு சமாளித்திருக்கிறார்கள் . மற்ற நண்பர்களில் இமான் அண்ணாச்சி கவனிக்க வைக்கிறார் . அண்ணன்கள் ஸ்ரீமன் , சத்யன் இருவரில் தொப்பையை இறுக்கி சிவாஜி போன்ற முகபாவத்தில் ஸ்ரீமன் மட்டுமே சிரிக்க வைக்கிறார் . ஜிப்ரான் இசையில் இனிக்க இனிக்க , டெடி பீர் பாடல்கள் நன்றாக இருக்கின்றன . பின்னணி இசையில் எஸ்.ஏ.ராஜ்குமார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார் . காமெடி படமாக இருந்தாலும் குத்துவிளக்குகளுக்கு நடுவில் புகுந்து தனுஷ் , நஸ்ரியாவை காட்டும் ஷாட்டில் வேல்ராஜ் ஒளிர்கிறார் ...

கரண்ட் ட்ரெண்டிற்கு ஏற்றபடியான கதை , இரண்டு அண்ணன்களின் ஜொள்கலுக்கிடையே வழிந்தோடும்  இரண்டாம் பாதி , தனுஷ் - நஸ்ரியா ஜோடி , ஒளிப்பதிவு போன்றவை நய்யாண்டி யில் தர்பார் செய்கின்றன . இரண்டு சீரியஸான  ஆட்கள் சேர்ந்து ஜாலியான படம் பண்ண நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை சீரியசாக பண்ண வேண்டாமோ ? . நஸ்ரியாவை கவர தனுஷ் ஐடியா வாக என்னென்னமோ பண்ணி காமெடி என்ற பெயரில் கடிக்க அவரோ சப்பென்ற காரணத்திற்காக காதலில் விழுந்து " இதுக்கு ஏம்பா இத்தன நேரம் இழுத்தீங்க " என்று சொல்ல வைக்கிறார் ...

செண்டிமெண்டிற்காக  அப்பா நரேன் , தனுஷிற்காக இரண்டு சண்டை , க்ளைமாக்சில்  வந்து மிதி வாங்கும் வில்லன் , எதிர்பார்த்த படி வரும் அடுத்தடுத்த காட்சிகள் இப்படி நத்திங் நியூ இன் நய்யாண்டி . சற்குணத்தின் முதல் படம் களவானியில் இருந்த ப்ரெஷ்னெஸ் இதில் இல்லாமல் போனது கூட பரவாயில்லை , ஆனால் மொத்த படமும் ஏதோ நாடகம் பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தை தவிர்த்திருக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 39



5 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ONAK - மனதை வேட்டையாடும் ...



சில படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டுமென்று தோன்றினாலும் ஏதோ சில காரணங்களால் பார்க்க முடியாமல் போகும் . அந்த லிஸ்டில் சமீபத்திய படம் மூடர் கூடம் . அதே லிஸ்டில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே தாமதமானாலும் பார்த்து விட்டேன் ...

துப்பாகியால் சுடப்பட்டு ரோட்டில் சாகக்கிடக்கும் ஒருவனை மருத்துவக் கல்லூரி மாணவன் சந்துரு ( ஸ்ரீ ) தன் சொந்த முயற்சியால் காப்பாற்றுகிறான் . காபாற்றப்பட்டவன் போலீசால் தேடப்படும் கிரிமினல் ஊல்ப் ( மிஸ்கின் ) என்று தெரிய வர சந்துருவுக்கு என்ன நேர்ந்தது ? ஊல்பின் பின்னணி என்ன ? என்பதே இரண்டரை மணி நேர படம் . ஹீரோ , ஹீரோயின் , காமெடி , காதல் என்று தமிழ் சினிமாவின் வழக்கங்கள் எதுவுமில்லாமலேயே இந்த இரண்டரை மணி நேரத்தில் ( மொட்டைத்தலை அடியாள் , வெறித்துப் பார்க்கும் கேரக்டர்கள் , ஸ்டாண்ட்ஸ்டில் ஷாட்ஸ் போன்ற மிஸ்கினத்தனங்கள் இருந்தாலும் ) தன் விறு விறு திரைக்கதையால் லயிக்க வைக்கிறார் மிஸ்கின் ...

வழக்கு என் னிற்கு பிறகு ஸ்ரீ க்கு மற்றுமொரு பெயர் சொல்லும்படியான பாத்திரம் . நிறைவாக செய்திருக்கிறார் . முன் பின் தெரியாதவனுக்காக
ஒருவன் இவ்வளவு ரிஸ்க் எடுப்பனா என்று தோன்றினாலும் அவனை காப்பாற்ற இவர் படும் பாடு நமக்கே பாவமாக இருக்கிறது .
மிஸ்கின் தன்னைப் பற்றிய பின்னணியை காட்டமால் இடைவேளை தாண்டியும் பயணப்பட்டிருப்பது பலம் . அதே போல பிளாஷ்பேக் எதுவும் வைக்காமல் குழந்தைக்கு கதை சொல்வது போல ஒரே ஷாட்டில் தன் பின்னணியை சொல்லிவிடுவது வித்தியாசமாக இருந்தாலும் ஏனோ நிறைவாக இல்லை . மிஸ்கின் சண்டைக் காட்சிகளில் ரசிக்க வைத்தாலும் உடல் எடை உறுத்துகிறது ...

 

முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என்று டைட்டிலில் போடுகிறார்கள் . அதை நிரூபிப்பது போல இசை சில காட்சிகளில் முன்னில் வந்து அதிகப்பிரசங்கித்தனம் செய்தது போல இருக்கிறது . மற்ற படி வசனங்கள் இல்லாத நிறைய இடங்களில் ( குறிப்பாக கல்லறை சீன் , க்ளைமாக்ஸ் ) நம்மை ஒன்ற வைக்கிறது இசைஞானியின் இசை . படம் முடிந்தவுடன் செல்லாமல் பொறுமையாக இருந்தால் டைட்டில் கார்ட் உடன் வரும் இசையில் நனையலாம் . இசைஞானியை தவிர வேறெந்த டெக்னீசியன் பெயரையும் மிஸ்கின் போஸ்டர்களில் போடா விட்டாலும் ஜூனியர் ரங்காவின் ஒளிப்பதிவு சென்னையின் சந்து பொந்துகளில் புகுந்து இரவையும் ரசிக்க வைக்கிறது ...

படத்தின் நீளம் , திரைக்கதையில் பெப் இருந்தாலும் ஸ்லோ மூவிங் காட்சிகள் இப்படி சில குறைகள் இருந்தாலும் டாப் ஆங்கிள் ஷாட்டில் ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்கு சற்று முன்பு வரை டாப் கியரிலேயே செல்வது , அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்தது , ஒரே இரவில் ஓநாய் ஆட்டுக்குட்டியுடன் காட்டுக்குள் நம்மை ஒன்ற வைத்தது போன்ற வகையில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்கு பிறகும் தற்போதைய காமெடி ட்ரெண்டுக்கு மடங்காமல் நம் மனதை வேட்டையாடுகிறார் மிஸ்கின் ...

நந்தலாலா , முகமூடி இரண்டிற்கும் ஓவர் பில்டப் கொடுத்து ஓடாமல் போனதாலோ அல்லது பணப்பற்றாக்குறையாலோ ப்ரோமோ அதிகம் இல்லாமல் தன் படத்தை மட்டும்  பேச வைத்திருக்கிறார் மிஸ்கின் . நிறைய தியேட்டர்களை  ராஜா ராணி ஆக்ரமித்துக் கொள்ள ஓநாய் ஒடுக்கப்பட்டதென்னமோ உண்மை . என்ன தான் மவுத் பப்ளிசிட்டி இருந்தாலும் ரசிகனுக்கு ஏற்ற விதத்தில் ஷோ இல்லாமல் போவதால் என்ன பிரயோஜனம் . உலக நாயகன் முயற்சியால் டி.டி.எச் முறையில் படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கபட்டால் தன் படத்திற்கு தானே போஸ்டர் ஓட்டும் நிலைக்கு மிஸ்கின்களும் , இது போன்ற படங்களை தயாரிக்க முன் வந்ததால் கடனாளியாகும் நிலைக்கு முதலாளிகளும் தள்ளப்பட மாட்டார்கள் . மனமிறங்குவார்களா பெரிய முதலைகள் ? ...

ஸ்கோர் கார்ட் : 47
Related Posts Plugin for WordPress, Blogger...