தீனா தவிர்த்து பொங்கலுக்கு ரிலீசான அஜித்தின் அத்தனை படங்களும் அட்டர் ஃப்ளாப் . அதோடு கோட் சூட் , கூலிங் க்ளாஸ் , கையில் துப்பாக்கி என்று அல்டரா மாடல் போல சுற்றிக் கொண்டிருந்தவரை வேட்டி சட்டை , விபூதி , அரிவாள் என்று கிராமத்து ஆளாக காட்டினால் எடுபடுமா ? இப்படி பல சந்தேகங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் அஜித்தை வைத்து தல பொங்கல் கொடுத்து பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா ...
குடும்பம் பிரிந்து விடுமோ என்கிற பயத்தில் 4 தம்பிகளுடன் கட்டை பிரமச்சாரியாக வாழ்கிறார் விநாயகம் ( அஜித்குமார் ) . தம்பிகளோ கோப்பெரும்தேவி ( தமன்னா ) யை அண்ணனுக்கு கரெக்ட் செய்ய , காதலியின் அப்பா ( நாசர் ) சம்மதம் வாங்க அவளுடன் ஊருக்கு செல்லும் அஜித் அந்த குடும்பத்திற்கு ஏற்படவிருக்கும் பெரிய அபாயத்தை அவர்களுக்கே தெரியாமல் தன் வீரம் காட்டி முறியடிக்கிறார் ...
சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டாலும் பேச்சில் அமைதியையும் , சண்டையில் ஆக்ரோஷத்தையும் அழகாக காட்டி வசீகரிக்கிறார் அஜித் . மாஸ் ஹீரோக்களில் ரஜினிக்கு அடுத்து " Larger than Life" இமேஜை ஸ்க்ரீனில் படம் முழுவதும் கேரி செய்யும் தகுதி தனக்கிருப்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறார் . சண்டையில்லாமல் அறிமுகம் ஆகிறாரே என்று சந்தோசப்பட்டால் அதன் பிறகு பல பேரை அடித்து கொன்றே அதை சிதைத்து விடுகிறார் . ஆனாலும் ரயில் சண்டையில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அபாரம் . இது வரை ஒப்பனிங் கிங் என்று அறியப்பட்டவர் தொடர் வெற்றிகளின் மூலம் மாஸ் கலெக்சன் கிங்காகவும் மாறியதற்கு வாழ்த்துக்கள் ...
தமன்னா பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ரசிகர்களை தம்மடிக்க அனுப்பாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . நான்கு தம்பிகளுள் விதார்த் தேறுகிறார் . அடிதடி குடும்பத்தை பெயிலில் எடுக்கவே வீட்டோடு இருக்கும் வக்கீல் சந்தானம் கொடுக்கும் காதல் ஐடியாக்கள் கல கல . முதல் பாதி இவர் உபாயத்தில் வேகமாகவே போகிறது . வில்லன்கள் ராவத் , அதுல் இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களில் பழைய நெடி இருந்தாலும் அஜித் சண்டை போடும் போது வீரம் பின்னணி பாடல் முறுக்கேற்றுகிறது ...
புதிதாய் எதுவும் இல்லாத கதை , அஜித் - தமன்னா இருவரின் காதலை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியது , பாடல்கள் , அளவுக்கதிகமான சண்டைகள் போன்ற குறைகள் இருந்தாலும் சந்தானத்தின் காமெடி , அஜீத் தை
கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொங்கல் விருந்து கொடுத்த விதத்தில் வீரம் வெல்லும் ...
ஸ்கோர் கார்ட் : 43