20 April 2014

மாற்றம் நம் கையில் - 2014 ELECTION ...


மிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் யாருக்கு ஒட்டு என்கிற குழப்பம் குறிப்பாக முதன்முறை ஒட்டு போடப்போகிற இளைஞர்களுக்கு மட்டுமின்றி பரவலாக நிறைய பேருக்கு  இருக்கும் என்றே நினைக்கிறேன் . ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் தமிழக வாக்காளர்களிடையே உள்ள குழப்பத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கின்றன ...

நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அடுத்த பிரதமராக யார்  வர வேண்டும் என்கிற கேள்விக்கு நரேந்திர மோடி என்கிற பதிலையே பரவலாக காண முடிகிறது .  அதே சமயம் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கு அ .தி.மு.க வே முன்னணி வகிக்கிறது . பொதுவாக தமிழக மக்கள்  மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க முன்னுரிமை தருவார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் பதவிக்கு மோடியை யே மக்கள் முன்னிறுத்துவது அவர்களின் எண்ண  ஓட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது . அதே சமயம் அந்த தெளிவு ஒட்டு போடும் விஷயத்தில் சிலருக்கு இல்லை என்பதும் புலனாகிறது ...

ஒரு நாள் தெரிந்த நண்பருடன் பேசும் போது காங்கிரஸ் , தி.மு.க இரண்டையும் கடுமையாக சாடினார் . மத்தியில் மோடி தான் பிரதமராக  வேண்டும் என்று உறுதியாக சொன்னார் . ஆனால் அ.தி.மு.க வுக்கே எனது ஒட்டு என்றும்  குழப்பினார் . பா.ஜ .க வுக்கு ஒட்டு போட்டு அது வீணாகி தி.மு.க வந்து விடுமோ என்கிற பயமே  அ.தி.மு.க  பக்கம் சாய காரணம் என்று விளக்கமும் தந்தார் . நான் இதே போல அ.தி.மு.க வுக்கான ஒட்டு வீணாகி அதன் மூலம் தி.மு.க வந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட பிறகு அவரிடம் கொஞ்சம் தெளிவு பிறந்தது . இந்த உரையாடல் ஒரு சோறு பதம் . நிச்சயம் அவர் அ.தி.மு.க வின் அனுதாபியாக இருந்து அதற்கு தான் எனது ஒட்டு என்று சொல்லியிருந்தால் குழப்பமே இல்லை . ஆனால் மோடி பிரதமராக வருவதற்கு அ.தி.மு.க வுக்கு ஒட்டு என்பது நான் ஏற்கனவே முகநூலில் சொன்னது போல தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது ...

பா.ஜ.க போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியதும் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் உக்தி . அதே போல பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பது போல ஒரு வதந்தி தி.மு.க , காங்கிரஸ் போன்றவற்றால் பரப்பப்பட்டு வருவதும் , தேர்தலுக்கு பின் நிச்சயம் அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் இது போன்ற ஹேஷ்யங்களின் அடிப்படையில் நிச்சயம் ஒட்டு  போட முடியாது . ஏற்கனவே 13 மாதங்களில் அ.தி.மு.க வால் வாஜ்பாய்  அரசு கவிழ்ந்ததையும் யாரும்  மறந்திருக்கவும்  முடியாது ...

இப்போது மற்றவர்களின் தூண்டுதலினாலோ என்னவோ முதலில் காவிரி பிரச்சனையை வைத்து முதல்வர் பா.ஜ.க வை சாட பிறகு மோடி அ.தி.மு.க வும் , தி.மு.க வும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யாமல் மாறி மாறி பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சாடினார் . ஜெ பா.ஜ .க வை திடீரென திட்டுவதற்கு சிறுபான்மையினர் ஒட்டு வங்கியோ , நிர்பந்தமோ மட்டும் காரணம் அல்ல . முதலில் நாற்பதும் நமதே என்கிற நினைப்பில் பா.ஜ க அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவருக்கு  நிறைய தொகுதிகளில் தி.மு.க வை விட பா.ஜ .க வே தனக்கு சவாலாக இருக்கும் என்கிற தகவல்கள்  வர ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றமே இது.
என்ன நடந்தாலும் இந்த கட்சிக்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொல்லும் சொல்லும் தீவிர அனுதாபிகள் கூடுதலோ குறைவோ எல்லா  கட்சிகளுக்கும் உண்டு . ஆனால் அவர்கள் மட்டும் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து விட முடியாது .  சூழ்நிலைக்கேற்ப  தங்கள் முடிவுகளை எடுக்கும் நடுநிலையாளர்களும் அரசியல்  மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள்...

ஒரு பக்கம் மோடி பிரதமராக வர அ.தி.மு.க வுக்கு ஒட்டு போடுங்கள் என்று அவர்கள் ரகசிய பிரச்சாரம் செய்வதாக செய்திகள் கசிய , இன்னொரு பக்கம் 15 வருடங்களாக மாறி மாறி  மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்து விட்டு 10 வருடங்களாக நடந்த அவலங்களுக்கும் தனக்கும்   சம்பந்தம் இல்லாதது போல பால் விலை  ஏறிப் போச்சு , பவர் கட் ஆகிப் போச்சு என்று பிரச்சாரங்களிலும் , விளம்பரங்களிலும் அ.தி.மு.க  வை மட்டும் குறை கூறி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் தி.மு.க வினர் மக்களின் ஞாபக மறதியின் மேல் நம்பிக்கை வைத்து ஒட்டு கேட்க , மற்றொரு பக்கமோ கை கொடுக்க யாருமின்றி  திரும்ப திரும்ப மோடி மதவாதி என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் மதத் தலைவர் புஹாரியிடம் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களை முன்னேற்றுவதற்கு வகை செய்யாமல் போலி மதவாதத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் இந்த தருணத்தில் மத்தியில் நிலையான , வலுவான அரசாங்கம் அமைவதற்கு மோடியின் தலைமையிலான பா.ஜ.க வை அரியணையில் ஏற்றுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் ...

இது இப்பொழுதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவேயொழிய நிரந்தரமான முடிவல்ல . ஒரு வேளை நாம் எதிர்பார்த்தது போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்படாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதனை ஜனநாயக ரீதியில் மாற்றுவதற்கான அதிகாரம் நம் கையில் இருக்கிறது . ஏனெனில் எப்பொழுதுமே மாற்றம் நம் கையில் ...

14 April 2014

நான் சிகப்பு மனிதன் - NAAN SIGAPPU MANITHAN - அரிதாரம் ...


பாண்டிய நாடு ஹிட் டான மகிழ்ச்சியில்  அடுத்ததிலும் பழி வாங்கும் கதைக்கு ஓகே சொல்லி தனது ஃபேவரட் இயக்குனர் திருவின் இயக்கத்தில் தயாரித்து நடித்திருக்கிறார் விஷால் . படம் பாண்டியநாடு அளவிற்கு இல்லாவிட்டாலும் போரடிக்காமல் இருக்கிறது ...

ஹீரோ இந்திரனுக்கு உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடுகிற நார்கோலெப்சி  எனும் வியாதி .  தூங்கினாலும் அவரால் மற்றவர்கள் பேசுவதை  உணர முடியும் . இந்த வியாதியால் கண்ணெதிரிலேயே காதலி கற்பழிக்கப்பட்டும் கண்களில் கண்ணீரோடு தூங்கிக் கொண்டிருக்கிறார் விஷால் . பின்னர் முகம் தெரியாத அந்த நான்கு பேரையும் தன் நினைவுகளின் உதவி கொண்டு எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை ...


புரட்சி தளபதி என்கிற டைட்டிலை விட்டதிலிருந்து உருப்படியான படங்களில் நடித்து விருகிறார் விஷால் . படம் பார்ப்பவர்களையும் தனது நடிப்பால் கேரக்டருடன் சேர்ந்து பயணப்பட வைக்கிறார் . ஒரே ஒரு சண்டைக்காட்சி  அதிலும் க்ளைமேக்ஸில் மட்டும் வருவது பொருத்தம் . விஷாலுடன் லிப்லாக் , குளியல் காட்சி என்று போல்டான கேரக்டரில் லக்ஷ்மி மேனன் .  பக்கத்து வீட்டுப் பெண் போலிருப்பவரை பென்ஸ் காரில் வரும் பெண்ணாக மாற்றுவதற்கு மேக்கப் மேன் மெனக்கட்டிருப்பது தெரிகிறது . விஷாலுடன் ஷகிலா படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போவது , கல்யாணத்திற்கு  முன்னே கர்ப்பமாவது போன்றவற்றால் கற்பழிக்கப்படும் போது இந்த கேரக்டரின் மேல் ஏற்ப்படவேண்டிய பரிதாபம் மிஸ்ஸாகி விடுகிறது ...

சின்ன சின்ன ஒன் லைனரால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஜெகன் . சரண்யா , ஜெயப்ரகாஷ் இருவரும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள் . சுந்தர் ராமு வின் நடிப்பு பசிக்கு படம் நல்ல தீனி . இனியா இடைவேளைக்கு பின் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் . ஜி.வி யின் இசையில் லவ்லி லேடீஸ் , பெண்ணே பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன . பின்னணி இசை வசனங்களை மீறி வருவதை தவிர்த்திருக்கலாம் ...


விஷாலின் குறைபாட்டை தெளிவாக  புரிய வைத்து அதனையொட்டி பின்னப்பட்ட முதல் பாதி திரைக்கதை சில இடங்களில் நம்மை தூங்க வைத்தாலும் வேகமாகவே போகிறது . கதைப் பின்னணி கஜினி போல இருந்தாலும் காதல் காட்சிகள் முன்னதைப் போல நம்மை கவராமல் போவது குறை . இடைவேளைக்குப் பின் கதை நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றாலும் இனியா - சுந்தர் ராமு சம்பந்தப்பட்ட காட்சிகள் தையிரியமாக படமாக்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் ...

திரு தனது முந்தைய  படங்களை போலவே இந்த  படத்திலும் ஒரு மெகா கமர்சியல் வெற்றியை நழுவ விட்டிருக்கிறார் . உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடும் ஹீரோ தேவைப்படும் சில  இடங்களில் தூங்காமலிருக்கும் லாஜிக் சொதப்பல் , வழக்கமான பழி வாங்கும் கதை போன்ற குறைகள் இருந்தாலும் நார்கோலெப்சி  என்னும் புது அரிதாரத்தைப் பூசி நாம் சிகப்பு மனிதனை கவனிக்க வைத்திருக்கிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 41


10 April 2014

ஒரு கன்னியும் மூணு களவானிகளும் - OKMK - கன்னித் திருட்டு ...




மௌன குரு வெற்றிக்குப் பிறகு அவசரப்படாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அருள்நிதி ஃபேண்டசி டைப் இயக்குனர் சிம்புதேவனுடன் கை கோர்த்திருக்கும் படம் ஒ.க.மூ.க . முந்தைய படம் பெரிய அளவில் போகாததால் வெற்றிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் அருள்நிதி க்கு இப்படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் ...

காதலியின் திருமணத்தை முறியடித்து அவளை சர்ச்சிலிருந்து தன் சகாக்கள் உதவியுடன் கடத்த திட்டமிடுகிறார் தமிழ் ( அருள்நிதி ) . இந்த சிம்பிளான கதையின் முடிவு ஒரு நிமிட  தாமதத்தால் எப்படி மாறுகிறது என்பதை மூன்று கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மூன்று  விதமான பின்னணியில் 12பி பட பாணியில் சொல்வதே படம் ...

ஆறடி உயரம் என்றவுடன் ஆக்ஷன் அவதாரமெல்லாம் எடுக்காமல் வித்தியாசமான காமெடி படத்தை தேர்ந்தெடுத்தமைக்கு அருள்நிதி க்கு பாராட்டுக்கள் . பெரிதாய் ரியாக்ஷன் எதுவும் கொடுக்காமல் அண்டர்ப்ளே செய்தாலும் சின்ன சின்ன வசன உச்சரிப்புகளில் ரசிக்க வைக்கிறார் . " எதுக்கு சார் என்ன போய்  கடத்த சொன்னீங்க , போக வர கன்வேயன்ஸ் கொடுத்தா நானே வந்துடப் போறேன் " என்று நாசரிடம் அப்பாவியாய் சொல்லுமிடம் நைஸ் ...


பிந்துமாதவி படம் நெடுக பனியனை போட்டுக்கொண்டு நடித் ... சாரி ஓடியிருக்கிறார் . பெரிய கண்களை உருட்டிக் கொண்டு அவர் ஓடும் போது நமக்கு தான் கொஞ்சம் பி.பி ஏறுகிறது  . " இவரும் பார்ட்னரா " என்று படம் நெடுக பதட்டப்படும் பகவதிபெருமாள் தான் படத்திற்கு பெரிய ப்ளஸ் . அருள்தாஸ் , நரேன் உட்பட  படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார்கள் . நாசர் , எம்.எஸ்.பாஸ்கர் இருவரையும் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் ...

பிரம்மா , நாரதர் என்று நாடக பாணியில்  கதை ஆரம்பித்தாலும் அருள்நிதி கடத்தல் ப்ளானை சொல்ல ஆரம்பிக்கும் போதே டேக் ஆஃப் ஆகி முதல் எபிசோட் வரை படு ஸ்பீடாக போகிறது . அதன் பிறகு அடுத்தடுத்த எபிசோட்கள் என்ன தான் சுவாரசியமாக இருந்தாலும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதால் வரும் சலிப்பை தவிர்க்க முடியவில்லை . அதே சமயம் ஒரே ஆர்டிஸ்டுகளை வைத்துக்கொண்டு வேறு வேறு விதமாக கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல . ஆனால் வசனங்களிலும் , காட்சியமைப்புகளிலும் நல்ல வேறுபாடுகள் காட்டி திரைக்கதையை திறம்பட செதுக்கியிருக்கிறார் சிம்புதேவன் . குறிப்பாக நடுநடுவே வரும் அருள்நிதி - ஹர்ஷிதா ரெட்டி காதல் காட்சிகள் ரசிக்க வைக்கும் ஹைக்கூஸ் ...



தர்பூசிணி கடை வைத்திருக்கும் பெண் , கேக்குடன் ஊர்ந்து செல்லும் எறும்புகள் , ஃபோன் பேசும் பெண் என்று சின்ன சின்ன விஷயங்களிலும் கண்டினுட்டி மிஸ் ஆகாமல் உழைத்திருப்பவர்கள்  பெரிய பில்டப்புடன் ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஃபிளாட்டில் இருந்தே ஓட ஆரம்பிப்பவர்களை அதன் பிறகு வழி மறிப்பவர்களுடன் எல்லாம் சாகவாசமாக பேச வைப்பது பேத்தல் ...

முக்கியமாக மூன்றாவது எபிசோட  வரும் போதே நாம் பொறுமையை  இழக்க தொடங்கி விடுகிறோம் . இயக்குனருக்கும் இந்த எண்ணம் தோன்றியதலோ என்னவோ வி.எஸ்.ராகவனை " இவுங்கள நாம சேத்து வக்கலேனா அடுத்த கதைய ஆரம்பிச்சுருவாங்க " என்று சொல்ல வைத்து சமாளித்திருக்கிறார் . இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் ந.கொ ப.கா அளவிற்கு  ஹிட் ஆகியிருக்க வேண்டிய வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்கள் . படு ஸ்லோவான ப்ரொமோ , " ரன் லோ ரன் " படத்தை தழுவிய  கதை போன்ற சில குறைகள் இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நல்ல விதத்தில் நம் பொழுதைக் கடத்திய மூணு களவானிகளின் கன்னித் திருட்டை ரசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 42 

Related Posts Plugin for WordPress, Blogger...