29 September 2014

ஒரு கைதும் சில கேள்விகளும் ...


ற்போது தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் சம்பவம் சொத்துக்குவிப்பு வழக்கில் நூறு கோடி அபராதத்துடன் நான்கு வருடங்கள் சிறைத் தண்டனை பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருப்பது . எனக்குத் தெரிந்த சில தி.மு.க அனுதாபிகள் கூட தண்டனைக்காக வருத்தப்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் கிட்டத்தட்ட 18 வருடங்கள் வழக்கை தீர விசாரித்து கொஞ்சம் கடினமாக இருந்தாலும் நியாயமான முறையில் தீர்ப்பு வந்திருக்கிறது என்று புத்திக்கு தெரிந்தாலும் , 91 - 96 இல் முதல் முறை முதல்வராக இருந்த போது செய்த தவறுகளுக்கு இப்பொழுது மூன்றாவது முறை முதல்வராகி மக்கள் நலத் திட்டங்களில் அதிக கவனம் செலுத்தி வருவதோடு கட்சியினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்துக்களை அறவே ஒழித்து நல்ல முறையில் ஆட்சி செய்து வரும் ஒரு நபருக்கு இப்படி தண்டனை கொடுத்து விட்டார்களே என்று படபடக்கும் மனசுக்கு தெரியவில்லை ...

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வின் அசுர வளர்ச்சிக்கு பிறகு அந்த கட்சியை எதிர்த்து அனைத்து கட்சிகளும்  ஒன்று சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பேரிடி . பா.ஜ.க வுக்கு திமுக வின் தூது , நீண்ட வருடங்கள் திமுக வை தீண்டாமலிருந்த வை.கோ கலைஞர் மேல் காட்டும் திடீர் பாசம் , பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீட்டு விஷேசத்திற்கு கலைஞருக்கு விடப்பட்ட தனிப்பட்ட அழைப்பு , அ.தி.மு.க வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டுமென்று விஜயகாந்த் விடுத்திருக்கும் அறைகூவல் இவையெல்லாம் நடந்து வருகின்ற நேரத்தில் இந்த கைது அ.தி.மு.க வுக்கு பெரிய பின்னடைவு . தனிப்பட்ட வாக்கு வங்கியை மட்டும் வைத்துப் பார்க்கும் போது  தி.மு.க வுக்கும் , அ.தி.மு.க வுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு கட்சியை வீழ்த்துவதற்காக அடுத்த கட்சிக்கு போடப்படும் ஓட்டுக்களே வெற்றி , தோல்விக்கான வித்தியாசத்தை தீர்மானிக்கின்றன . அந்த வகையில் பார்த்தால் 2016 சட்டசபைத் தேர்தலுக்கு அ.தி.மு.க மக்களுடன் மட்டுமே கூட்டணி வைக்க வேண்டியிருக்கும் ...

எதிர்பார்த்தபடியே முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஓ .பி
( பன்னீர்செல்வம் ) கடந்த முறை போல இந்த முறை பவ்யமாக மட்டுமிருந்து ஓ .பி அடிக்க முடியாது . ஏனெனில் இந்த முறை அவர் கிட்டத்தட்ட 2 வருடங்கள்  ஆள வேண்டியதோடு மக்களின் நன் மதிப்பையும் பெற்று கட்சியையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் .. ஹை கோர்ட்டுக்கு அப்பீல் செய்த போதிலும் தண்டனை குறைக்கப்படுவதற்கு குறைந்த வாய்ப்பே உள்ளன என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் . ஆனால் சீனியர் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இவருக்கு ஆதரவாக வாதாடப் போவது தண்டனையை குறைக்கும என்றும் , பெயில் கிடைக்கும் என்றும்  எதிர்பார்க்கிறார்கள் அ.தி.மு.க வினர் . ஒரு வேளை ஜெ பெயிலில் தமிழ்நாட்டுக்கு வருவது கட்சிக்கு போனசாக இருந்தாலும் முதல்வர் பதவியில் அமர்வதோ , மீண்டும் போட்டியிடுவதோ அடுத்த பத்து ஆண்டுகளுக்கு முடியாது ...

இப்படி ஒரு இக்கட்டான நிலை வருமென்று அம்மாவே எதிர்பார்த்திருக்க மாட்டார் . இதற்கு முந்தைய 11 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டது போல இதில் முடியாமல் போனதற்கு காரணம் வழக்கின் தன்மை . மற்ற வழக்குகளில் குற்றம் சாட்டியவர்கள் இவரது குற்றத்தை நிரூபிக்க வேண்டும் . ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ தனது ஆவணங்களை சரியாக காட்டி தன மேல் குற்றம் இல்லையென்று நிரூபிக்க வேண்டும் . இந்த விஷயத்தில் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் . மேலும் வழக்கை 18 வருடங்கள் இழுத்தடித்ததும் , நீதபதி டிகுன்ஹா நேர்மையானவர் என்பதும் கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கும் . எல்லாவற்றிற்கும் அறிக்கை விடும் கலைஞர் இந்த கைதை பற்றி ஒன்றுமே சொல்லாமல் மௌனம்  காப்பது அவரது அனுபவத்தைக் காட்டுகிறது . சுப்ரமணியசாமியால் போடப்பட்ட வழக்கிற்கு கலைஞரின் கொடும்பாவியை எரித்து என்ன ஆகப் போகிறது ?...

எனக்கு தெரிந்த ஒருவரின் மாமா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அரசியலில் பார்ட் டைமாக இருந்தார் . பிறகு வேலையை விட்டு விட்டு முழு நேர அரசியலில் இறங்கி இப்போது கவுன்சலராகி விட்டார். அவருக்கு அப்போதே 10 லட்சம் கடன் இருந்தது . ஆனால் இப்போதோ வீடு , கார் என்று கிட்டத்தட்ட 4 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்.
தப்பு செஞ்சவங்க யாரா இருந்தாலும் ஒரு நாள் இல்லை ஒரு நாள் நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கையை இந்த தீர்ப்பு கொடுத்தாலும் , கவுன்சிலருக்கே இவ்வளவு சொத்து  என்றால் எம்.எல்.ஏ , எம்.பிககெல்லாம் ? . இது போல கணக்கில்லாமல் லஞ்சம் வாங்கிய எல்லா அரசியல்வாதிகளும் , அரசு அதிகாரிகளும் இதே போல தண்டிக்கப்படுவார்களா ?. அல்லது இதே போல விடாப்படியாக யாராவது கேசை நடத்துவார்களா ? . பிறகு ஏன் அம்மாவை மட்டும் தண்டிக்க வேண்டும்? போன்ற கேள்விகள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே தானிருக்கின்றன ...


28 September 2014

மெட்ராஸ் - MADRAS - வசிக்கலாம் ...


முந்தைய படம் ஒடிவிட்டாலே அடுத்த படத்திற்கான பொறுப்பு இயக்குனருக்கும் , ஹீரோவுக்கும் கூடி விடுகிறது . அந்த வகையில் இயக்குனர் பா.ரஞ்சித் , ஹீரோ கார்த்தி இருவரும் மெட்ராஸ் படத்தில் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார்கள் ...

வட சென்னை ஹவுசிங் போர்ட் ஏரியாவில் விளம்பர சுவரை கைப்பற்ற அடித்துக் கொள்ளும் இரண்டு அரசியல் கோஷ்டிகள் ,  ஒரு கோஷ்டியில் இருக்கும் அன்பு ( கலையரசன் ) , அவன் நண்பன் காளி ( கார்த்தி)
இருவரும் எதிர் கோஷ்டிக்கு கொடச்சலை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள் . ஒரு கட்டத்தில் எதிர் கோஷ்டியின் தலைவன் கண்ணனின் மகன் இவர்களால் கொல்லப்பட அடுத்து என்ன நடக்கிறது என்பதை இண்டர்வெலுக்குப் பின் கொஞ்சம் தடுமாறினாலும் மாஸ் ஹீரோ கார்த்திக்காக எந்த காம்ப்ரமைசும் செய்து கொள்ளாமல் க்ளாசாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ...

சென்னை ஸ்லாங் கொஞ்சம் இடித்தாலும் படித்த வடசென்னை வாலிபர் கதாபாத்திரத்துக்கு பொருத்தமாகவே இருக்கிறார் கார்த்தி . எதிர் கோஷ்டிகளுடன் மோதும் சண்டைகளோடு காதலியுடன் போடும் குட்டிச் சண்டைகளிலும் கவர்கிறார் . படித்து விட்டு வேலைக்கு போறவனுக்கு எதுக்கு சண்டை சச்சரவு என்று சுற்றியிருப்பவர்கள் தான் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்களே தவிர அதைப் பற்றி பார்ட்டி கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொகிறிக் கொண்டேயிருப்பது சறுக்கல் ...

தெலுங்கு வரவு கேத்தரின் பக்கத்து வீட்டுப் பெண் போல என்று வெறும் பேருக்கு சொல்வது போலல்லாமல் அயன் பண்ண சர்ட் போல அப்படியே இருக்கிறார் . இவரை பார்த்தவுடனே பிடிக்கவில்லை ஆனால் பார்க்க பார்க்க பிடிக்கிறது . அதிலும் கார்த்தியுடன் சண்டை போட்டுக்கொண்டே நீ தான் வேணும் என்று கொஞ்சுமிடத்தில் கூடுதல் அழகு . கார்த்தியின் நண்பனாக வரும் அன்பு , அவன் மனைவி மேரி இருவரும் படத்திற்கு பேக் போன்ஸ் . இவர்கள் இடையேயான காதல் முத்தக் காட்சிகள் கலீஜாக இல்லாமல் கேசுவலாக இருக்கின்றன . அன்புவின் மறைவுக்கு பிறகு படம் தடுமாறுவது நிஜம் . விஜி , பெருமாள்  , மாரி என்று வலம் வரும் அரை டஜன் கேரக்டர்களில் வாய்சில் புதுப்பேட்டை தனுஷை நியாபகப்படுத்தும் ஜானி லைக் அள்ளுகிறார் ...


படத்தின் மற்றொரு ஹீரோ பின்னணி இசையில் பின்னியெடுக்கும் சந்தோஷ் நாராயண் . மனுஷன் கானா வாகட்டும் , மெலடியாகட்டும் மிரட்டுகிறார் . இவர் தமிழ் இசையின் புது நம்பிக்கை . முரளியின் கேமரா ஹவுசிங் போர்ட் சந்து பொந்துகளுக்குள் புகுந்து விளையாடுகிறது . படத்தின் லைட்டிங் , பிரவீனின் எடிட்டிங் ரெண்டுமே சூப்பர் ...

அட்டக்கத்தி யில் தென்சென்னை புறநகர் வாசிகளை பதிய வைத்தது போலவே இதில் வடசென்னை வாசிகளை தனது நேர்த்தியான டீட்டைளிங்கில் மனதில் நங்கூரம் போட்டு உட்கார வைக்கிறார் ரஞ்சித் . படத்தோடு சேர்த்து சுவரையும் ஒரு கேரக்டர் போலவே உலவ விட்டிருப்பது நேர்த்தி . காதல் சீன்களை ஏதோ ஹீரோ சண்டை போட்டுவிட்டு வந்து வெறும் ரெஸ்ட் எடுப்பது மாதிரி தனி ட்ராக்காக வைக்காமல் படத்தோடு ஒன்றி வைத்திருப்பதை பாராட்டலாம் . அன்பு - காளி சம்பத்தப்பட்ட நட்புக்காட்சிகள் எல்லாமே நச் . சீன் இப்படித்தான் முடியும் என்று எதிர்பார்க்க விட்டு பிறகு எதிர்பார்க்காத நேரத்தில் வேறு மாதிரி முடித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம் ...

படத்தின் நீளம் , இரண்டாம் பாதியில் தடுமாறும் திரைக்கதை ,அரசியல் ஆதாயத்துக்காக காவு வாங்கப்படும் நண்பன் , அதற்காக ஆவேசப்படும் ஹீரோ என்ற நார்மல் ப்ளாட் போன்ற குறைகளையெல்லாம் தாண்டி படத்தின் கேரக்டர்களை பதிய வைத்த விதம் , படத்தை கொண்டு சென்ற பாங்கு இவற்றிக்காக சில இடங்களில் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக செல்லும் மெட்ராஸில் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 43 






24 September 2014

அரண்மனை - ARANMANAI - தங்கலாம் ...



பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ளாமல் தனக்கு தெரிந்த கமர்சியல் பார்முலாவை மட்டும் வைத்து வரும் ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புவதில்  வல்லவர் சுந்தர்.சி . ஹரர் லைனை கையில் எடுத்திருந்தாலும் வழக்கமான பேய் படத்துக்கு  தன்னுடையை காமெடி பெப்பை ஏற்றி அரண்மனை யை போரடிக்காமல் பார்க்க வைக்கிறார் இயக்குனர் ...

ரொம்ப நாட்கள் பூட்டிக் கிடக்கும் தங்கள் பூர்வீக அரண்மனையை விற்க முடிவெடுக்கிறார்கள் வாரிசுகள் . அரண்மனையில் தங்கும் சில நாட்களில் 3 வேலைக்காரர்கள் மர்மமான  முறையில் சாக அங்கு பேய் இருப்பது தெரிய வருகிறது . பேய்க்கு என்ன ப்ளாஷ்பேக் ? பேய் பீடித்திருக்கும் தன் தங்கையையும் , தன்  தங்கையிடமிருந்து மற்றவர்களையும் வக்கீல் சுந்தர்.சி எப்படி காப்பாற்றுகிறார் என்கிற இந்த சந்திரமுகி கதைக்கு சந்தானத்தை வைத்து கமர்ஸியல் சந்தானம் பூசியிருக்கிறார் சுந்தர்.சி ...

நடிகனாக அடக்கி வாசித்து படம் முழுவதும் நடிகர் பட்டாளத்தையே திறம்பட சமாளிததில் இயக்குனராக பாராட்டு பெறுகிறார் சுந்தர்.சி . ஹன்சிகா , ஆண்ட்ரியா , ராய் லக்ஷ்மி என மூன்று ஹீரோயின்களுக்கும் சம விகிதத்தில் ஸ்பேஸ் கொடுத்தது ,  சந்தானம் , சரளா , மனோபாலா என எல்லோரையும் சரியான முறையில் பயன்படுத்தியது என எல்லாவற்றிலுமே இயக்குனரின் அனுபவம் அசத்துகிறது ...


மூன்று பேரில் ராய் லக்ஷ்மி ராவாக இருந்து சுண்டி இழுத்தாலும் அடாவடி  ஆண்ட்ரியாவும் , அப்பாவி ஹன்சிகா வும் மனதை தொடுகிறார்கள் . க்ளோஸ் அப் காட்சிகளில் அதீத மேக் அப்புடன் வரும் ஆண்ட்ரியா பேயை விட பயமுறுத்துகிறார் . கொடுத்த காசுக்கு ராய் லக்ஷ்மி யை குனிந்து , நிமிர விட்டு நன்றாகவே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர் . நடிப்புக்காக இல்லாமல் நிஜமாகவே அம்மணி உடற்பயிற்சி செய்வது நல்லது . மூணு , நாலு டயர் ஏறியிருக்கிறது . வினய் , நிதின் சத்யா படத்தில் இருக்கிறார்கள் .
" பெட்ரோமாஸ் " பாடலுக்கான இசையில் பரத்வாஜும் , பின்னணி இசையில் கார்த்திக் ராஜாவும் கவர்கிறார்கள் . செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் , சி.ஜி வேலைகளும் படத்திற்கு பலம் ...

படம் ஆரம்பித்தவுடனேயே நேரத்தை கடத்தாமல் அரண்மனைக்குள் நம்மை திகிலுடன் அமர வைத்து விடுகிறார்கள் . நடுநடுவே காமெடி இருந்தும் இடைவேளை வரை திரைக்கதையும்  க்ரிப்பாகவே  செல்கிறது . " மூடு வரதுக்கு முருங்கைக்காய் சாப்பிடலாம் , இங்க ஒரு முருங்கைக்காயே மூடோட சுத்துதே " என்று மனோபாலாவை சந்தானம் சத்தாய்க்கும் வசனங்கள் நச் . இடைவேளைக்கு பிறகு தான் படம்  கோவில் திருட்டு , அந்த பழியை பெண்ணின் மேல் போட்டு அவளை கொல்வது போன்ற வழக்கமான ப்ளாஷ்பேக் , பேயை விரட்ட வரும் சாமியார் என மாமூல்  பயணத்தில் தடுமாறுகிறது  ...

சந்திரமுகியில் சந்திராஷ்டம் என்றால் இதில் சூரிய கிரகணம் , ரஜினிக்கு பதில் சுந்தர்.சி , பிரபு - ஜோதிகா இடத்தில் வினய் - ஆண்டிரியா , வடிவேலுவுக்கு பதில் சந்தானம் , நயன்தாராவுக்கு பதில் ராய் லக்ஷ்மி என்று பார்க்கும் போதே நமக்கு தோன்றும் ஒப்பீடுகள் படத்தை சந்திரமுகி - 2 வோ என்று நினைக்கத் தோன்றுகின்றன . வழக்கமான  பார்முலா படங்களில் உள்ள எல்லா குறைகளும் இதில் இருந்தாலும் அதையும் மீறி படத்தை ரசிக்கும் படியாக தந்த விதத்திற்காக புதுசாக எதையும் எதிர்பார்த்து அலட்டிக் கொள்ளாமல் ஒரு முறை இந்த அரண்மனை யில் தங்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


13 September 2014

பர்மா - BURMA - பிட்ஸ் அண்ட் பீஸ் ...


சில லோ பட்ஜெட் படங்கள் ஏதோ ஒரு காரணத்தால் நம்மை கவனிக்க வைப்பதுண்டு . அந்த  வகையில் பர்மா படத்திற்காக இயக்குனர் தரணீதரன் எடுத்துக்கொண்ட கார் சீஸிங் ( கடனை ஒழுங்காக திருப்பி செலுத்தாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்வது ) என்கிற கதைக்களன் படத்தை பார்க்க வைத்தது . ஆனால் ஒரு படம் வெற்றி பெற வெறும் கதைக்களன் மட்டும் போதாது என்பதை நிரூபிக்கிறது பர்மா ...ஸி

கார் சீசிங் கிங் குணா ( சம்பத்ராஜ் ) விடம் வேலை செய்யும் பரமானந்தம் ( எ ) பர்மா ( மைக்கேல் ) உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் குணா வை போலீசில் சிக்க வைத்து விட்டு அந்த இடத்திற்கு வருகிறான் . சேட்டுக்காக
( அதுல் குல்கர்னி ) சீஸ் செய்த கார்களில் ஒரு பி.எம்.டபிள்யூ மிஸ்ஸாக அதற்கு பதில் பர்மாவின் காதலியை ( ரேஷ்மி மேனன் ) சேட் பிடித்து வைத்துக் கொள்ள பர்மா காரை கொடுத்து காதலியை மீட்டானா என்கிற இந்த நீட்டான ஒன் லைனை வைத்துக் கொண்டு க்ரிப்பான திரைக்கதை அமைக்கத் தெரியாமல் தடுமாறியிருக்கிறார்கள் ...


கேரக்டருக்கு ஏற்ற தோற்றம்  இருந்தாலும் ஹீரோ மைக்கேல் கவரவில்லை . நிறைய இடங்களில் இவருடைய ரியாக்சன் மிஸ்ஸிங் . ஹீரோயின் ரேஷ்மி மேனன் ( கேரளத்திலிருந்து மற்றுமொரு புதுவரவு ) ஜம்மென்று இருக்கிறார் . ஹீரோவை கிஸ் அடிக்கும் போது ஹெராயின் போல போதை ஏற்றுகிறார் . சரியான வாய்ப்புகள் கிடைத்தால் ஒரு ரவுண்ட் வரலாம் . வா என்னைக் கடத்து என்பது போல கார் சீஸிங் செய்யும் இடத்திற்கெல்லாம் இவரும்  கூடவே அலைவது அபத்தம் . நல்ல திறமையிருந்தும் சரியான உயரத்தை தொடாதவர் சம்பத்ராஜ் . அவருக்கு இந்த படம் யானைப்பசிக்கு சோளப்பொறி . சேட் கேரக்டரில் அதுல் சரியான தேர்வு . யுவனின் ஒளிப்பதிவும் , சுதர்சன் எம்.குமாரின் பின்னணி இசையும் படத்திற்கு பலம் ...

நிறைய மெனக்கெடாமல் கார் சீஸிங் என்பதை கார் சீட்டிங் போல ஹீரோ வெறுமனே கள்ள சாவி போட்டு திறந்து கொண்டிருக்கிறார் . படத்திற்கு முக்கியமான உயிர்நாடியே இந்த விஷயம் தான் . அதில் இன்னும் சுவாரசியமாக டீட்டைலிங் செய்திருந்தால் படம் தேறியிருக்கும் . அதே போல பெண் தலைமையில் வரும் கடத்தல் குழுவும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை . புது கதைக்களன் , ரசிக்க வைக்கும் வசனங்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்மா பிட்ஸ் அண்ட் பீஸ் களாக மட்டுமே கவர்கிறது ...

ஸ்கோர் கார்ட் : 39

11 September 2014

தெருக்கூத்து - 4 ...


மோடி 100 என்ற தலைப்பில் எக்கச்சக்க விவாதங்கள் , கட்டுரைகள் என கடந்த ஒரு வாரமாகவே எல்லா ஊடகங்களும்  அலசி ஆராய்ந்து காயப் போட்டு விட்டதால் நாம் பெரிதாக சொல்வதற்கேதுமில்லை . ஒரு ஷோவை பார்த்து விட்டு விமர்சனம் செய்வதற்கு இது சினிமா அல்ல . ஒரு புதிய அரசாங்கத்தை சரியாக கணித்து சொல்வதற்கு 100 நாட்கள் நிச்சயம் பத்தாது . ஆனாலும் அது எந்த டைரக்சனில் செல்கிறது என்பதை வைத்து அதன் எதிர்கால செயல்பாட்டை கணிக்கலாம் . அந்த வகையில் சார்க் , ப்ரிக் நாடுகளுடனான உறவு , அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம் , ஜப்பானிலிருந்து 2 லட்சம் கோடி முதலீடு . பாசிட்டிவான  சென்செக்ஸ் குறியீடு போன்றவை இந்த அரசாங்கம் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி பயணப்படுகிறது என்பதை உணர முடிகிறது . கார்ப்பரேட் நிறுவனங்கள் ஸ்டைலில் அரசாங்க நிறுவனங்களிலும் சில ஒழுங்கு முறைகளை கடைபிடிக்க சொல்லி அமைச்சர்கள் வலியுறுத்தி வருவதும் ஆரோக்கியமான விஷயம் ...

உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள அ.தி.மு.க வுக்கு எதிராக பா.ஜ.க மட்டும் நிற்கும் சூழல் உருவானது . ஆனால் நிறைய இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் விலகிக்கொள்ள அ.தி.மு.க அன்னபோஸ்டில் செலெக்ட் ஆகி விட்டார்கள் . ஆளுங்கட்சியின் மிரட்டல் தான் இதற்கு காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்ட , இரண்டு கட்சிகளின் கூட்டு சதி தான் இது என்று கம்யூனிஸ்ட் சொல்கிறது . எது எப்படியோ பா.ஜ.க நல்ல வாய்ப்பை இழந்து விட்டது . இதே போல 2016 இல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் . இல்லையேல் கட்சியின் கனவு அம்பேல் ! ...

ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் என்கிற பெயரில் கொண்டாடப்படுவதற்கு பயங்கர எதிர்ப்பு ஒரு பக்கம் இருக்க பெரிய  சம்பளம் இல்லாத காரணத்தால் தன்னார்வத்துடன் பணிபுரியும் ஆசிரியர்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக  படித்த செய்தி இது போன்ற கொண்டாட்டங்களையே கேள்விக்குறியாக்கி விடுகிறது . நவாப் செரீப் பிரதமருக்கு  மாம்பழங்களை பரிசாக அனுப்பியிருக்கிறார் . " ஏண்டா காஷ்மீர்ல எங்க ஆளுகள சுட்டுட்டு இங்க மாம்பழத்த கொடுத்தா அத திங்க நாங்க என்ன மாங்கா மடையனுங்களா , அவ் " என்று விஜயகாந்த் ஸ்டைலில் மோடி சொல்லியிருக்கலாமோ ?! ...

நேற்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் அர்னாப் தலைமையில் ஒரு விவாதம் . அதில் மீடியா வினரை கழுத்தை நெரித்து விடுவேன் , குழிக்குள் புதைத்து விடுவேன் என்றெல்லாம் மிரட்டிய தெலுங்கானா முதல்வரை ஹிட்லர் என்று வர்ணித்தர்கள் . அது சரி , ஆனால் யார் விவாதத்திற்கு வந்தாலும் பேச விடாமல் தானே மிரட்டல் தொனியில் பேசிக் கொண்டேயிருக்கும் அர்னாப் கோஸ்வாமி என்ன முசோலினியா ?! ...

ஒரு படம் ஹிட்டானால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவதும் தோற்றால் தூக்கிப் போட்டு மிதிப்பதும் பலரது வாடிக்கை . அந்த வகையில் சிறந்த அரசியல் பத்திரிக்கையான துக்ளக் ஒரு கட்டுரையில் அஞ்சான் படத்தை அறுவை சிகிச்சை செய்திருக்கிறது . அந்த கட்டுரையை எழுதியவர் ஆர்வக் கோளாறில் சதுரங்க வேட்டையை இயக்கியவர் லிங்குசாமி எனவும் ( லிங்குசாமி அந்த படத்தின் தயாரிப்பாளர் / விநியோகஸ்தர் )  , தமிழ் தாதா வை மையப்படுத்தி வந்த படம் மும்பை எக்ஸ்ப்ரெஸ்  (அந்த படம் சென்னை எக்ஸ்ப்ரெஸ் ) எனவும் குறிப்பிட்டிருந்தார். படத்தில் தான் லாஜிக் இல்லை அதை விமர்சிக்கும் கடிதத்திலுமா ?!. இப்படி சினிமாவுக்கு சம்பந்தம் இல்லாத பத்திரிக்கைகள் கூட படத்தை கழுவி கழுவி ஊற்ற குமுதம் மட்டும் நன்று என்று விமர்சனம் போட்டிருப்பது அடடா ஆச்சர்யக்குறி ! ...

இரண்டாவது பாதி திரைக்கதைக்காகவும் , வசனத்திற்காகவும் சலீம் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது . பெரிய ஹீரோ இல்லாமலேயே  விறுவிறு திரைக்கதை பார்ப்பவர்களை கட்டிப் போட்டாலும் விஷால் , ஆர்யா யாராவது படத்தில் நடித்திருந்தால் பெரிய கல்லா கட்டியிருக்கும்  என்பது பரவலான கருத்து  . தொடர்ந்து இரண்டு வெற்றிகளை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு வாழ்த்துக்கள் . நாளை ரிலீசாகும் சிகரம் தொடு , வானவராயன் வல்லவராயன் , பர்மா ஆகிய மூன்று படங்களில் போஸ்டர்கள் பர்மா வை பார்க்க தூண்டுகிறது . கே டிவி யில் சுப்ரமணியபுரம் போட்டிருந்தார்கள் . என்ன படம் ! . ஒரு சாதாரண நடிகன் சசிகுமாருக்காக சிறந்த  இயக்குனர் சசிகுமாரை நாம் இழந்து விட்டோமோ ! ...

நொறுக்குத்தீனி :

கணவன் : நம்ம பையன நினைச்சா எனக்கு ரொம்ப கவலையா இருக்கு ..

மனைவி : ஏன் உங்கள விட ரொம்ப புத்திசாலியா இருக்கானேன்னா ! ...


மீண்டும் கூடுவோம் ...




5 September 2014

இரும்புகுதிரை - IRUMBUKUTHIRAI - நோ மைலேஜ் ...


ரதேசி க்கு பிறகு அதர்வா மேலிருந்த எதிர்பார்ப்பு , கேட்சியான டைட்டில் , ரேசிங் பற்றிய கதை , எல்லாவற்றுக்கும் மேல் பிரபல பதிவர் நர்சிமின் வசனம் என எல்லாமுமாக சேர்ந்து படத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன . ஆனால் இதையெல்லாம் இரும்புகுதிரை பூர்த்தி செய்ததா ?. பார்க்கலாம் ...

சி.ஏ படித்துக்கொண்டே பார்ட்டைமாக பீட்சா கடையில் வேலை பார்க்கும் ப்ரித்வி க்கு ( அதர்வா  முரளி ) வேகமாக பைக் ஒட்டுவதென்றாலே அலர்ஜி . ப்ரித்வி  பைக் ஒட்டி  பில்லியனில் உட்கார்ந்திருந்த அப்பா ஆக்சிடெண்டில் இறந்து போனதே அந்த அலர்ஜிக்கு காரணம் . கடைசியில் காதலிக்காக
( ப்ரியா ஆனந்த் ) பைக் ஓட்ட வேண்டிய கட்டாயம் வர அதுவே பெரிய பிரச்சனையில் போய் முடிகிறது . பிரச்சனைக்கு என்ன காரணம் ? அதிலிருந்து ப்ரித்வி மீண்டானா ? என்பதை குதிரை ரேஸ் வேகத்தில் சொல்லாமல் ஜானவாஷம் போல நீட்டி முழக்கியிருக்கிறார்கள் ...

அழுக்கான பரதேசிக்கு பிறகு அதர்வா விற்கு ஏற்ற நீட்டான கேரக்டர் . முந்தைய படத்தில் நிறைய நடித்துவிட்டதாலோ என்னவோ இதில் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை . காதலியை பற்றி பேசும் போது வெட்கப்படும் இடத்தில் கவர்கிறார் . வெட்கமா அப்படின்னா என்று கேட்கும் அளவிற்கு இருக்கும் ப்ரியா ஆனந்தை பார்த்தவுடன் எல்லா ஹீரோக்களையும் போல அதர்வாவுக்கும்  லவ் வந்து விடுகிறது . ( என்னமோ தெரியல ப்ராக்டிகலா பசங்களுக்கு இந்த மாதிரி பொண்ணுங்கள பார்த்தா முதல்ல மூடு தான் வருது ) ...


ஜெகன் கொஞ்சம் கடிக்கிறார் . ராய் லக்ஷ்மி அங்கங்கே காட்டி நகம் கடிக்க வைக்கிறார் . ஜி.வி க்கு பேமன்ட் பாக்கியோ என்று எண்ணுமளவிற்கு தான் பாடல்கள் இருக்கின்றன . அதிலும் அதை நடுநடுவே சொருகியது அபத்தம் . குருதேவின் ஒளிப்பதிவு படத்திலேயே ரொம்ப பிரகாசம் . " கூட இல்லாத போது அவங்களையே நினைச்சு தேடுறது தான் லவ்" , " கோல் ல தோக்கறது தப்பில்ல , ஆனா கோலே இல்லாம இருக்கறது தான் தப்பு " போன்ற வசனங்களில் நர்சிம் தெரிகிறார் ...

மொக்கை எஸ்.எம்.எஸ் லாம் அனுப்பி ஸ்லோவா பார்க்கறவன் பொறுமையையெல்லாம் சோதிச்சு  கஷ்டப்பட்டு கரக்ட் பண்ண பொண்ண டுகாட்டி ல கூட்டிக்கிட்டு  முத முதல்ல ஈ.சி.ஆர் ல ரைட் போகும் போது  நாலஞ்சு பேரு சேர்ந்து அதர்வா வை அடிச்சுப் போட்டுட்டு பொண்ண டகால்டி பண்ணி தூக்கிட்டு போயிருறாங்க . அங்க வைக்குறோம் சார் இன்டர்வெல் ப்ளாக் என்று கதை சொல்லி இயக்குனர் ப்ரொட்யூசரை ஒ.கே செய்திருப்பார் என்று நினைக்கிறேன் . கதை சொன்ன வேகத்தில் பாதியையாவது திரைக்கதையில் காட்டியிருந்தால் கொஞ்சம் ஜெயித்திருக்கலாம் . இதே ப்ரியா ஆனந்தை கடத்தியது போல சமீபத்தில் வந்த அரிமா நம்பி அதிவேக திரைக்கதையால் ஜெயித்தது . இதில் அந்த மேஜிக்  டோட்டலி  மிஸ்ஸிங் ...

பெரிய பில்ட் அப் புடன் அறிமுகமாகும் டோனி யும் புஷ்ஷென்று போய்  விடுகிறார் .  தேவையில்லாமல் பாண்டிச்சேரி குத்துப் பாடல் வைத்திருந்தாலும் , பாண்டிச்சேரியில் நடக்கும் கதை என்பதால் குடிக்கிற சீனா வைக்காமல் விட்டதற்கு இயக்குனர் யுவராஜ் போசை பாராட்டலாம் . ஸ்லோவான முதல்பாதி , இண்டெர்வலில் கொடுக்கும் ட்விஸ்டை தக்க வைக்காமல் பின்னர் படு ஸ்லோவாக போகும் இரண்டாம் பாதி , வில்லனின் கோபத்திற்கு சொல்லப்படும் வலுவில்லாத காரணம் என எல்லாமே பார்க்க டீசண்டாக இருக்கும் இரும்புகுதிரைக்கு கொடுப்பதென்னமோ நோ மைலேஜ் ...

ஸ்கோர் கார்ட் : 38 









Related Posts Plugin for WordPress, Blogger...