14 January 2018

தானா சேர்ந்த கூட்டம் - TSK - தப்பிச்சுக்கும் ...


மீப காலமாக சூர்யாவுக்கு  எந்த படமும் கை  கொடுக்காத நிலையில் ஹிட் கொடுத்த இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அவர் சேர்ந்திருக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம் . இந்த படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் ...

நீரஜ் பாண்டே இயக்கத்தில் ஹிந்தியில் வெளி வந்த Special 26 ன் ஒரிஜினல் கதையை நமக்கேற்றவாறு மாற்றி எடுத்திருப்பதே டிஸ்கே . இருப்பவர்களிடம் இருந்து ஏமாற்றி பறித்து இல்லாதவர்களுக்கு கொடுக்கும் ராபின்ஹூட் கதை தான் . அதில் காமெடி , செண்டிமெண்ட் கலந்து தனக்கேயுரிய பாணியில் தந்திருக்கிறார் இயக்குனர் ...

சூர்யா ஸ்டிஃப்பாக வந்து பயமுறுத்தாமல்  ஃப்ரெஸ்ஸாக இருப்பது குளிர்ச்சி . சிபிஐ ஆஃபீசராக மிடுக்கும் , காதல் காட்சிகளில் துடுக்கும் அவருக்கு இயல்பாகவே வருகிறது . மெதுவாக நகரும் திரைக்கதையில் அவர் பன்ச்  எதுவும் பேசி  நம்மை பஞ்சராக்காமல் விட்டது சிறப்பு . கீர்த்தி சுரேசுக்கு தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் படம் புக் ஆவதால் நிறையவே பூரிப்பு தெரிகிறது ( முகத்துல தாங்க ) . பஸ்சுக்கு லேட் ஆயிடுத்து அதனால பஸ் ஸ்டாப்புலயே படுத்துட்டா என்பது போல இவரது கேரக்டர் பற்றி  ஒருவர் சூர்யாவிடம் விளக்குவது செயற்கையாகவே படுகிறது . மற்றபடி லூசுப்பெண்ணாக இவரை காட்டாமல் விட்டதற்கு நன்றி ...


படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் ஜொலிக்கிறார் . அவர் ஜான்சி ராணி ஃப்ரம் சிபிஐ என்று சொல்லும் போது  நம் வீட்டுக்கே ரெய்ட் வந்தது போல பயம் வருகிறது . ஆனந்தராஜ் , ஆர்.ஜே.பாலாஜி இருவருமே கிடைத்த கேப்பில் கடா வெட்டுகிறார்கள் . சுரேஷ் மேனன் வில்லனாக நல்ல வரவு . கலையரசன் , கார்த்திக் கவனிக்க வைக்கிறார்கள் . அனிருத்தின் இசையில் ஏற்கனவே சொடுக்கு மேல பெரிய . ஹிட் . பி.ஜி.எம் மில் இரைச்சலை தவிர்த்திருக்கிறார் ...

கதைக்களம் 80 களில் நடப்பதால் மீடியாக்காரர்கள் மைக்கை தூக்கிக் கொண்டு வரும் தொந்தரவு இல்லாமல் சூர்யா & கோ வால் ரெய்டு செய்ய முடிகிறது . நம்மாலும் லாஜிக்கை கொஞ்சம் மறக்க முடிகிறது . ஜெண்டில்மேன் படத்தை நினைவுபடுத்தினாலும் லஞ்சத்தால் திறமையானவர்களுக்கு  மறுக்கப்படும் வாய்ப்புகளை சரியான கோணத்தில் அலசுகிறது டிஸ்கே . படத்தில் தெளித்து விட்டாற்போல வரும் ப்ளாக் காமெடிகளில் விக்னேஷ் சிவனின் டச் தெரிகிறது ... 

மாஸ் ஹீரோ கால்ஷீட் , ஆக்சன் சப்ஜெக்ட் கையிலிருந்தும் பக்கா கமர்ஷியலாக எடுக்காமல்  அடக்கி வாசித்திருக்கிறார்கள் . பாடல்கள் நடுநடுவே ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் போல வருவதை தவிர்த்திருக்கலாம் .
இரண்டாம்  பாதி ஸ்லோவாகவே நகர்கிறது . க்ளைமேக்ஸுக்கு முந்தின ட்விஸ்ட் அருமை . பண்டிகைக்கு ஏற்ற பக்கா விருந்தாக இல்லாவிட்டாலும் பொங்கல் விடுமுறைகளால் வசூலில் தானா சேர்ந்த கூட்டம் தப்பிச்சுக்கும் ...

ரேட்டிங் : 2.75 * / 5 * 

ஸ்கொர் கார்ட் : 42


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...